(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) –தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(10)

3.ஒருமைப்பாட்டு உணர்வு

 

தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார்.

“இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும்

இமயமுதல் குமரிவரை எங்களுடை வீடு!

உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும்

உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு!”

என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வு வளம் பெறவேண்டும்; இல்லாமைக் கொடுமை ஒழிய வேண்டும் எனும் இதயத் துடிப்புக் கொண்ட கவிஞர். சமுதாய மாறுதலை விரும்பும் முற்போக்குச் சிந்தனைகளைத் தமது கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

“உழைத்து ழைத்து உயர்வதற்கே

 உறுதி நலங்கள் தேற்றுவோம்!

உண்மை நீதி அறங்க ளோங்க

உள்ள ஏக்கம் மாற்றுவோம்!

 

அழைத்த நம்மின் பாரதத்தாய்

ஆக்கம் ஊக்கம் எண்ணுவோம்!

அல்லும் பகலும் ஒய்வில்லாமல்

 நன்மை உண்மை பண்ணுவோம்!

 

வறுமை நமது வாழ்வில் வாரா

வாழ்க்கை உயர்வு காணுவோம்!

வாழப்பிறர்கை ஏந்தி வாழும்

வழக்கம் பேணல் நாணுவோம்!

 

சிறுமை கொடுமை எண்ணமின்றிச்

சேர்ந்து சூழ்ந்து முயலுவோம்!

தேசம் பெரிது மாசில்லாமல்

செழுமை ஆக்கம் பயிலுவோம்!”

 

இந்த நோக்கத்தோடு கவிஞர் விழிப்பூட்டும்-எழுச்சி யூட்டும்-உணர்ச்சிக் கவிதைகளை ‘இருபது கட்டளைகள்’ என்ற தலைப்பில் ஆக்கியுள்ளார். நமது நாட்டின் சமுதாய, பொருளாதார, பண்பாட்டு அமைப்பு முறைகளில் மலிந்துள்ள சீர்கேடுகளைச் சாடுகின்றன இக்கவிதைகள். இந்த இழிநிலைகளைப் போக்கிச் சமுதாயத்தையும் நாட்டையும் சீர்படுத்திச் செம்மையுறச் செய்வதற்கான திட்டங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன. அதற்குப் பாரதத்தலைமையமைச்சர் அறிவித்த இருபது குறிப்புத்திட்டம் ஆதாரமாக அமைந்துள்ளது. மக்களை சிந்திக்கத் துண்டும் வகையில் கவிதைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

“விடுதலைதான் பெற்று வாழ்ந்தோம்-தீய

விதியை மாற்றினோமா?-ஒங்கும்

கெடுதலைகள் தன்னைப் போக்கும்

கேண்மை ஆற்றினோமா?”

என்று எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறார்.

 

அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாப் பெருள்களின் விலைகள் ஏறிக்கொண்டேதான் இருக்கின்றன.

 “உண்ணும் உணவும் உடுக்கும் உடையும் -விலை

உயரஉயரப் பறந்தால்-இந்த

 மண்ணில் நாமும் வாழ்வதெங்கே?-பெரும்

 மாற்றங்கள் வேண்டாவோ?”

இதற்கான மாற்றாகக் கவிஞர் முன் வைக்கும் சிந்தனை துணிகரமானது, அந்த எண்ணத்தை அவர். அழுத்தமாகவே கூறுகிறார்

“நிலமெலாம் பொதுமை ஆக்கி

நித்தமும் உழைப்போருக்கே

தலமெல்லாம் உரிமை ஆக்கித்

தவம்போன்ற உழவர்தம்மின்

 புலம்மாற்றிக் கூட்டுழைப்பாய்

பூமியில் உழைக்கும் மாற்று

நலம்செய்தால் அன்றி இந்த

நாடுமுன் னேறாதென்பேன்!”

 

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்