மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே!

ஈழமலர்ச்சிக்காகவே!

   தமிழீழத்தை மனக்கண்களில் கண்டவர்கள்! தங்கள்  நெஞ்சில் சுமந்தவர்கள்! மனக்கண்களில் கண்ட தமிழீழம் உருவாகும்; அங்கே ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் வாழ்வார்கள்; அடிமைத்தளையறுந்து, பட்ட துயரங்கள் மறைந்து, இன்னல்கள் நீங்கி, இன்பவாழ்வு வாழ்வர்; தமிழும் தனக்குரிய இடத்தை நாட்டிலும் உலகத்திலும் பெறும்; என்னும் நம்பிக்கையில், தங்கள் இன்னுயிரை நீத்தவர்கள் மாவீரர்கள்! இவர்களை வணங்குவது நமக்காகத்தான்! ஆம்! நமக்காக மறைந்தவர்களை புகழால் வாழ்பவர்களை நாம் வணங்குவது அவர்கள் கனவுகளை நாம் சுமப்பதற்காக! அந்தக்கனவுகளை நிறைவேற்றுவதற்கான எழுச்சி பெறுவதற்காக! எழுச்சி கொண்டு வாகை சூடுவதற்காக!

  ஈழத்தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் உரிமை  பெற்ற விடுதலை நாட்டில் வாழ்வதுதானே அவர்களுக்கு நலம் பயக்கும்! அப்படி என்றால் மாவீர்ர்களை வணங்கி நாம் உந்துதிறன் பெறுவது நாம் நன்மையடையத்தானே!

  தமிழ்நாட்டுத் தமிழர்கள், இந்தியாவில் பிணைப்புண்டிருந்தாலும் இந்திய அரசு, தன்நாட்டு மக்களாகக் கருதுவதில்லை. உலகின் மூத்த மொழியான தமிழ் தன் நாட்டில் உருவாகிப் பேசப்படுவதால் மகிழ்ந்து அதனைப் பரப்ப வேண்டிய கடமையும் தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் இந்திய அரசிற்கு உள்ளது. ஆனால் இவற்றிற்கு எதிராக நடப்பதுதான் இந்திய அரசின் அன்றாடப் பணியாகிறது.

 தமிழைத் தமிழ்நாட்டிலேயே தொலைத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தமிழைத் தலைமை யிடத்தில் கொண்டு செல்லத்  தமிழீழ அரசு உறுதுணையாக இருக்கும். பன்னாட்டு அவையில் தமிழ் முழங்கித் தமிழும் தமிழர்களும் தலைநிமிர்ந்து வாழ இயலும்! இந்திய அரசும் தமிழைப் போற்றும், தமிழைரைக் காக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படும்! எனவே, நம்நாட்டுத் தமிழர்களுக்கும் தமிழீழத்தால் தலைநிமிர்ந்து வாழ்வர்!

 வீரவணக்க நாளில் விளக்கேற்றுவதும் நம் உள்ளங்களில் இருக்கும் அடிமை இருளை அகற்றத்தான்! உரிமை ஒளியைப் பாய்ச்சத்தான்!

 இனப்படுகொலை முடிந்ததாகக் கூறினாலும் நல்லிணக்கம் என்னும் நயவஞ்சகம் பேசுகின்றனர்; தமிழர் நிலத்தில் சிங்களர்களைக் குடியேறவைத்துத் தமிழ் நிலம் என்று ஒன்று இல்லை என ஆக்குகின்றனர்’ காணாமல்போக வைக்கப்பட்டவர்களும் அடைக்கலம் அடைந்தவர்களும் வஞ்சகமாகப்   பிடிக்கப்பட்டவர்களும் உள்ளரா? இல்லரா? என்று தெரியாமல் உற்றார் உறவினர் கதறிக் கொண்டுள்ளனர்’ கட்டாயக் கருத்தடை,கற்பழிப்பு போன்ற கயமைத்தனங்களால் தமிழினம் அழிக்கப்படுகின்றது. முன்பு எரிகுண்டுகளாலும் வேதியல் குண்டுகளாலும் கொல்லப்பட்ட தமிழர்கள் இப்பொழுது மருந்து என்ற  போர்வையில் நஞ்சூட்டிக் கொல்லப்படுகின்றனர். வெளிப்படையாகத் தெரியாவண்ணம் ஈழ மண்ணில் தமிழர் அழிப்பு நடந்துகொண்டுதான் உள்ளது. தண்டிக்கப் பெறாமையால் இனப்படுகொலையாளிகள் உற்சாகமாகத் தங்கள் அழப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சொல்லொணாத் துயரங்களில் மடிந்து வரும் ஈழத்தமிழர்களுக்குப் பன்னாட்டு அமைப்புகள் உரிய முறைகளில் உதவுவதில்லை. மனித  நேயர் குரல்களும் புலம் பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களும் தாய்மண்ணில் நிகழும் போராட்டங்களும் வாழ்வதற்கான விதைகளை விதைத்தாலும் வாழும்முறை அமையாமல் நாளும் அல்லறுகின்றனர் ஈழத்தமிழர்கள்.

  இவற்றைத் தாங்கிக் கொள்வதற்கும் போக்குவதற்கும் உரிமையைக் காப்பதற்கும் விடுதலை காண மாவீர்ர்கள் பற்றிய  நினைவுகள், எண்ணங்கள், நிகழ்வுகள் உறுதுணையாய் நிற்கும்!

  இந்த வகையில் மாவீரர் வணக்க நாள் என்பது மாவீரர்களை வணங்கி நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்காகவே! நம்மை இலக்கு நோக்கி இட்டுச் செல்வதற்காகவே! மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்காகவே!

 மாவீரர்கள், துயிலுமிடங்களில் மட்டும் உறையவில்லை. அவர்கள் உறைவிடங்களில் மட்டும் உறைந்திருக்கவில்லை! நம் உள்ளங்களிலும் உறைந்துள்ளனர்.

 இன நலனுக்காக, நாட்டு நலனுக்காகத் தத்தம் குடும்பப்பற்றினையும் வாழ்க்கைப்பற்றினையும் மட்டுமல்லாமல் உயிர்ப்பற்றையும் துறந்த மாவீரர்கள் பெருமையை,  இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணமுடியாததுபோல், அளவிட்டுச் சொல்லத்தான் இயலுமோ?

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

 (திருவள்ளுவர், திருக்குறள் 22)

 பெருமைக்குரிய மாவீரர்களை நாளும் வணங்கி அவர்கள் உயிர் நீத்ததற்குக் காரணமான கனவுகளை நனவாக்குவோம்!

  உரிமை பெற்ற உலக நாடுகள் வரிசையில் தமிழ் ஈழம் இடம் பெறச் செய்வோம்!

வாழ்க மாவீரர் புகழ்!

வெல்க மாவீரர் கனவுகள்!

மலர்க தமிழ் ஈழம்!

பறக்கட்டும் தமிழ்க்கொடி பாரெங்கும்!

  • அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை –  அகரமுதல 214, கார்த்திகை 10- கார்த்திகை 16,  2048 /  நவம்பர் 26  – திசம்பர் 02,  2017