அறிவுக் கதைகள் நூறு பதிப்புரை கதைகள் மலிந்த காலம் இது. கதை சொல்வோரும் பெருகியுள்ளனர். ஆனால் வெளிவரும் கதைகள் பெரும்பாலும் பொழுதுபோக்குக் கதைகளாகவும், அழிவுக் கதைகளாகவுமே விளங்குகின்றன. இது நாட்டிற்கு நன்மை தராத போக்கு என்று கருதுபவர் பலர். கதைகளை இனிமையாகச் சொல்லவும் வேண்டும்; அந்தக் கதைகளைக் கற்கும் பிஞ்சு நெஞ்சங்களிலே நல்லறிவுச் சுடர்களையும் ஏற்றவேண்டும். நல்லறிவு பெற்ற மக்களே நல்லவர்களாக விளங்குவார்கள் நல்லவர்கள் வாழும் நாடே நல்ல நாடாகவும் விளங்கும்; அந்த நல்லறிவின் வளர்ச்சிக்குக் கதைகள் பெரிதும் உதவும்.தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் நெறியோடு…