(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : இராகவ(ஐயங்கா)ர் – 1. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 2  முன்னுரை ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனார், மரபியலில், ‘மாவு மாக்களு மையறி வினவே.’ ‘மக்கள் தாமே யாற்றி வுயிரே.’ என்பனவற்றால், மானிடரை மாக்கள், மக்கள் என இருதிறத்தினராகப் பகுத்தோதினார். மாக்கள் எனப்படுவார், ஐம்பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலராயினாரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பதோ ரறிவும் உடையரயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுத்த பகுப்பாகும். இனி, அவயவவெற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு…