ஊர்களில் நிகழும் குற்றங்களை அறிந்த இவ்வவையினர் குற்றமுடையாரை வினவித் தண்டிப்பர். ‘கள்ளூர்’ என்ற ஊரில் அறனில்லாதவன் ஒருவன் செய்த தவற்றினை அறிந்த ஊர் மன்றத்தார், அக்கொடியவனை மரத்திற்பிணைத்து அவன் தலையிற் சாம்பலைக் கொட்டி அவமானப்படுத்திக் தண்டித்தனர் என்ற செய்தியினைக் கடுவன் மள்ளனர் என்னும் புலவர் அகநானூற்றுச் செய்யுளொன்றில் (அக.256) குறிப்பிடுகின்றார். இருநிகழ்ச்சியால் ஊர்ச்சபையர்க்குத் தம்மீது நிகழும் குற்றங்களை விசாரித்துத் தண்டிக்கும் உரிமை தமிழ்வேந்தரால் வழங்கப்பட்டிருந்தமை புலனாகும். ஊர்க்கு நடுவேயுள்ள ஆல் அரசு முதலிய மரத்தடியிலேயே ஊர்மன்றத்தார் கூடியிருந்து செயலாற்றுவர். – க. வெள்ளைவாரணர்…