ஒரு பெயர் ஓருருவம் ஓன்றுமில்லாக் கடவுளுக்குப் பல பெயர்களிட்டுப் பல வழியாக வழிபடுதல் தமிழர் இயல்பு. பெயர் பலவாயினும் கடவுள் ஒருவரே என்ற உணர்வு தமிழர்க்கு என்றும் உண்டு. இந்நூற்பாவில் கூறப்பட்டுள்ள மாயோன், சேயோன், வேந்தன், வருணன் முதலியனவும் ஒரு கடவுளைச் சுட்டுவனவே. மாயோன் என்றால் அழியாதவன்; சேயோன் என்றால் சேய்மையிலுள்ளவன்; அறிவுக்கு எட்டாதவன்; வேந்தன் என்றால் தலைவன், விரும்புதற்குரியவன். வருணன் என்றால் நிறங்களுக்குரியவன் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் நான்கு பெயர்களும் ஒருவரையே குறிக்கின்றன என்று தெளியலாம்….