மக்கள் நன்மைக்காக மக்களால் மக்களைக் கொண்டே ஆளப்படுவது மக்களாட்சியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழியனரும் சமயத்தினரும், கொள்கையினரும், நாற்பது கோடிக்குமேல் வாழ்ந்தபோதிலும், மக்களாட்சி முறையைப் பின்பற்றி உலகம் புகழுமாறு ஆட்சி செலுத்துகின்றோம் என ஓயாது பறையறைந்து வருகின்றனர் ஆளுங்கட்சியினர். இந்தியக் கூட்டரசு ஆட்சியை நடத்திவரும் கட்சியினர் மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுப் பதவிப் பீடத்தில் அமர்ந்திருப்பது உண்மைதான். இவ்வாறு அமர்ந்திருப்பது மக்களாட்சி முறைகளைப் பின்பற்றி வருவதன் பயனாகவா? அல்லது வேறு முறைகளைக் கையாண்டு வருவதன் தன்மையாலா? வறுமை, அறியாமை, கல்வியறிவு இன்மை, அச்சம்,…