மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் வல்லிக்கண்ணன்                 சிறுகதைகள் விதம் விதமாக எழுதப்படுகின்றன. கதைகள் எழுதுகிறவர்கள் மனிதர்களையும், அவர்களது இயல்புகளையும், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் செயல் விசித்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டே சொற்சித்திரம் தீட்டுகிறார்கள். இவற்றில் ஒரு சிலருடைய கதைகள் மட்டுமே தனித்தன்மையும், குறிப்பிடத் தகுந்த சிறப்புகளும் கொண்டதாக அமைகின்றன.                 வாழ்க்கையையும் மனிதர்களையும்பற்றிய தனித்த நோக்கு, வாழ்க்கையும் சூழ்நிலையும் பட்டறிவுகளும், மனசில் ஏற்படுத்துகின்ற சலனங்களும் பதிவுகளும், வாழ்க்கை, மனிதர்கள் இயற்கைச் சூழ்நிலைகள் மரங்கள், மிருகங்கள், பறவைகள் முதலிய அனைத்திலும் ஒருவர் கொள்கிற பற்றுதலும்…