வெருளி நோய்கள் 1276 -1280 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1271 -1275 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1276 -1280
- திரைப்பட வெருளி – Cinematophobia / Theatrophobia
திரைப்படம் அல்லது திரையரங்குபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் திரைப்பட வெருளி.
திரைப்படம் பார்ப்பதற்கும் திரையரங்குகள் செல்வதற்கும் காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இருட்டு வெருளிக்கு ஆளானவர்களுக்கும் திரைஅரங்கு இருட்டு அளவற்ற பேரச்சத்தை அளிக்கிறது. திரையரங்க வசதிக் குறைபாடுகளால் எரிச்சலுற்றும் வெறுப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகள், கூச்சமளிக்கும் நெருக்கமான காட்சிகள் போன்றவற்றாலும் திரைப்பட வெறுப்பு கொள்வோர் உள்ளனர். இவற்றைப்பார்க்கும் இளம் பருவத்தினர் கெட்டுப்போவர் எனவும் இவற்றின்மீது வெறுப்பு கொள்கின்றனர். இப்பொழுது திரையரங்கு சென்று படம் பார்க்கும் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்த வெறுப்பு தொலைக்காட்சிகள் மீதும் தொலைக்காட்சித் தொடர்கள் மீதும் மாறியுள்ளது.
00
- திரைவு வெருளி-Rhytiphobia
தோல்சுருக்கம் குறித்த காரணமின்றி வரும் அச்சம் திரைவு வெருளி.
திரைவு என்றால் தோல் சுருக்கம் எனப்பொருள். உடலில் காணப்படும் தோல் சுருக்கங்கள், குறிப்பாக முகத்தில் விழும் சுருக்கங்கள், கண்களைச் சுற்றியும் வாயைச் சுற்றியும் ஏற்படும் தோல்சுருக்கங்கள் குறித்து அச்சம் ஏற்படும். இது முதன்மையின் அடையாளம் எனக் கருதியும் இளமை கடக்கிறது என்று அஞ்சியும் அழகு குறைகிறது எனக் கவலைப்பட்டும் சுருக்கம் மீது வெறுப்பும் அச்சமும் கொள்கின்றனர்.
rhyti என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் திரைவு.
00
- திறந்த வண்டி வெருளி – Gokarrophobia
குழந்தைகள் வண்டி, பந்தய வண்டி முதலான திறந்த வண்டி(go-cart) குறித்த அளவு கடந்த பேரச்சம் திறந்த வண்டி வெருளி.
முதலில் இது நடைவண்டியைத்தான் குறித்தது. பின்னர், நடைவண்டியுடன் மேலே மூடப்படாமல் திறந்துள்ள சிறிய வண்டிகளையும் குறிக்கலாயிற்று.
Go karro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நடைவண்டி/ திறந்த வண்டி.
00
- திறப்பி வெருளி- Nlaiguphobia
குவளை, குப்பி, சிறு கலன் முதலானவற்றின் மூடியைத் திறக்கும் திறப்பி(can opener/ tin opener) மீதான அளவுகடந்த பேரச்சம் திறப்பி வெருளி.
மின் திறப்பிகளும் வந்துவிட்டன. இருவகைத் திறப்பிகளையும் கவனத்துடன் கையாள்வது குறித்த தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
- திறவுகோல் வெருளி – Kleidiphobia
திறவுகோல்(Key) குறித்த வரம்பற்ற பேரச்சம் திறவுகோல் வெருளி.
திறவுகோல்களால்/தாழ்க்கோல்களால் அறைகளை அல்லது வீட்டினைச் சரியாகப் பூட்ட முடிவதில்லை, சரியாகத் திறக்கவும் முடிவதில்லை என்று அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். மூடப்பட்ட அறை குறித்து வெருளி உள்ளவர்களுக்குத் திறவுகோல் சரியாகத் திறக்காவிட்டால் என்னாவது என்று கவலாை ஏற்பட்டுப்பேரச்சமாக மாறுகிறது.
Kleidi என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் திறவுகோல் எனப் பொருள்
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5






Leave a Reply