கவிதைகாப்பிய இலக்கியம்நாடகம்பாடல்பாவியம்

பூங்கொடி 23 : காமங் கடந்தவள்

(பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன் – தொடர்ச்சி)

பூங்கொடி

காமங் கடந்தவள்

நல்லியல் மாதர் நலம்பெறு வாழ்வைச்

செல்வச் செருக்கால் சேர்வுறு பிறப்பால்

வெல்லக் கருதின் விளைவது வேறு;          115

சொல்லக் கூசேன் மெல்லியல் மாத ரார்

பிள்ளைப் பூச்சிகள் அல்லர் பெரியோய்!

காமங் கதுவக் கருத்தினை விடுப்பின்

நாமங் கேடுறும் நல்லறங் தீயும்

தீமை பற்பல சேர்வது திண்ணம்      120

மாதரார் உளப்பாங் கியாதென உணர்ந்து

காதல் மேற்கொளல் கடமை யாகும்;

காமங் கடந்தவள்

காமம் என்னும் கள்வன் றனக்கே

புகஇடம் கொடாஅள் பூட்டி, நிறைஎனும்

காப்பமைத் திருத்தலின் கற்பெனும் மாமணி      125

காத்திடல் வல்லாள், கருத்தினில் வைப்பாய்!

என்னுயிர்ப் பாங்கி இல்லற வாழ்வின

உன்னுதல் துறந்தே ஒங்குயர் பொதுப்பணி

ஒன்றே உயிர்ப்பென உவப்புடன் பூண்டனள்

இன்றே அவள்பால் எழுமனம் விடுக!              130

என்றவள் உரைத்த இவ்வுரை அவன்மனம்

பொருந்தா முன்னர்ப் பூங்கொடி உருவம்

விருந்தா கியதே கோமகன் விழிக்கே. (133)

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *