அயல்நாடுஇதழுரைஇலக்குவனார் திருவள்ளுவன்ஈழம்கட்டுரை

எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்

உச்சநீதிமன்றக் கருத்திற்கு இணங்க

எழுவரை விடுதலை செய்தபின்னர்

பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும்

       இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்படடவர்களுக்குத் தண்ட னையே வழங்கியிருக்கக்கூடாது.

  வழங்கிய பின்னரும் வழக்கு தொடர்பானவர்கள் முறையற்ற வழியில் இவர்கள் தண்டிக்கப்படடதைத் தெரிவித்த பின்னராவது எழுவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். விடுதலைக்கான பல வாய்ப்புகள் வந்தபின்னரும் மத்தியஅரசு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது.

  இராசீவு கொலை வழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும் விடுதலை செய்வது மோசமான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் அவர்கள் செய்தது ஒப்புமைப்படுத்த முடியாத குற்றம் என்றும் கூறி விடுதலைக்கு எதிரான கருத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்குள் கருத்தைத் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் சனவரி 23 இல் தெரிவித்தது. மத்திய அரசிற்கு எண்ணிக்கை தெரியாக் காரணத்தால் ஏறத்தாழ இரு மடங்கு காலம் தள்ளி இந்த முடிவைத் தெரிவித்துள்ளது.

  மார்ச்சு 2016 இலேயே தமிழக அரசு இந்த எழுவரையும் விடுவிக்கும் முடிவை எடுத்து, அப்போதைய முதல்வர் செயலலிதா இதனை அறிவித்தார். அரசியல் யாப்பிற்கிணங்க எடுக்கப்பட்ட சரியான முடிவு இது. இதனை மத்திய அரசிடம் தெரிவித்தால் மட்டும் போதுமானது. ஆனால் மத்திய அரசு குறுக்கிட்டு அதன் கருத்தைக் கேட்க வேண்டுமென்றது. கருத்து என்ற பெயரில் மறுப்பைத் தெரிவித்துள்ளது. கருத்தைக் கேட்க வேண்டுமென்றால் அக்கருத்தின்படி ஏற்றோ மறுத்தோ முடிவெடுக்கலாம் என்றுதான் பொருள். ஆனால், அதன் கருத்தே முடிவானது என்றால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லையே!

 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இரஞ்சன் கோகோய்(Justice Ranjan Gogoi), நவீன் சின்கா(Justice Navin Sinha), கே.எம். சோசப்பு(Justice K.M. Joseph) அடங்கிய அமர்வு, தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் கருதிப்பார்க்குமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

    இதன் பொருள் தமிழக அரசின் விடுவிப்பு முடிவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதே!

  சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே மட்டும் அல்ல குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையேயும்தான். எனவே, கொலையுண்டவர் முன்னாள் தலைமையமைச்சர் எனக்கூறித் தண்டிக்கப் பட்டவர்களிடையே வேறுபாடு காட்டுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.

  பயங்கர ஆயுதங்களைத் தந்தவர்களுக்கு எல்லாம் குறைந்த தண்டனையும் முன்கூட்டி விடுதலையும் வழங்கியுள்ளனர். ஆனால், படப்பொறிக்குப் பசை மின்கலம் வாங்கித் தந்தவர், ஆள் மாறாட்டத்தில் தொடர்பில்லாதவர் என்றெல்லாம் அப்பாவிகளைச் சிக்க வைத்து நெடுங்காலம் சிறையிலும் அடைத்துள்ளனர். இருப்பினும் மனம் மாறாமல் சிறையிலேயே மடியட்டும் எனக் கருதினால் இறைவன் இத்தகையோருக்கு நல்வினை புரிவாரா? அல்லல் அளிப்பாரா? விடுவிப்பை மறுப்போர் எண்ணிப் பார்க்கட்டும்.

  தமிழர் நலனுக்கு எதிரானது என்றால் பாசகவும்  பேராயமும்(காங்கிரசும்) கை கோத்துக்கொள்ளும். எனினும் சில நேர்வுகளில் பேராயம் தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. அதன் விளைவாகத்தான் இவர்களை விடுதலை செய்வதில் தங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை என இராசீவு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சட்டப்படி தரப்பட வேண்டிய விடுதலையைப் பாசக தடுத்து நிறுத்துவது அறமற்ற செயலாகும். இவர்கள் விடுவிக்கப்பட்டால் சு.சா.முதலான பாசகவினரின் பின்னணி தெரிந்துவிடும் என்ற அச்சத்தில்தான் பாசக தடுக்கிறதோ என மக்கள் எண்ணுகின்றனர். எனவே, இனியும் எழுவர் விடுதலைக்குக் குறுக்கே பாசக நிற்கக்கூடாது.

  மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை எடுத்து 27 ஆண்டுகளாகச் சிறையில் அல்லலுறும்  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினிஇராபர்ட்டுபயாசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய எழுவரின் விடுதலைக்கு வழி விட வேண்டும்.

  எழுவரும் சிறைகளிலிருந்து வீடு திரும்பிய பின்னரே மத்திய பாசக அமைச்சர்கள்  தமிழகத்திற்குள் நுழைய வேண்டும் என்ற முடிவையும் எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அமைச்சரும் இவ்வாறே செயல்படவேண்டும்.

இனியேனும் திருந்தட்டும் பாசக!

மகிழ்வாகச் சிறையிலிருந்து விடை பெறட்டும் எழுவரும்!

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.(திருவள்ளுவர், திருக்குறள் 671)

-இலக்குவனார் திருவள்ளுவன்

 இதழுரை, அகரமுதல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *