சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 4: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 3: தொடர்ச்சி)
சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?
உரையின் எழுத்து வடிவம் 4
ஆக எந்த ஒரு திட்டத்திற்கும் நாம் ஒன்றிய அரசைச் சார்ந்தே உள்ளோம். ஆனால், பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசைப் பின்பற்றித்தான் தென் மாநிலங்கள் பின்பற்றுகின்றன. அஃது உலகத் தமிழ் மாநாடு ஆகட்டும் வேறு பல திட்டங்கள் ஆகட்டும். ஆனால் இந்த மொழி வளர்ச்சியில் நாம் மத்திய அரசைப் பின்பற்றலாம். பின்பற்றி நாம் என்ன கேட்கலாம்? அவர்கள் சமற்கிருத வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துகிறார்கள் இல்லையா? அந்தத் திட்டங்கள் படி நாமும் பண உதவி கேட்டுப் பெறலாம். எடுத்துக்காட்டாகச் சமற்கிருத இதழ்கள், இந்தி இதழ்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு விளம்பரங்களைத் தருகிறது. அஃதாவது நிதி உதவி வேறு, விளம்பரம் வேறு, இவ்வாறு பல்வேறு திட்டங்கள் மூலமாக அம்மொழிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, சமற்கிருத நிதி ஒதுக்கீட்டிற்கு எதிராக, யார் யாரெல்லாம் கண்டனம் சொல்கிறார்களோ, ஒரு தடவைக்கு மேல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள்களைத்தான் முதலில் கேட்கிறேன் இந்தப் பத்து ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்? பத்தாண்டுகளாகத் தூங்கிவிட்டு, இப்போது ஏன் கேட்கிறீர்கள்? போன ஆண்டு சமற்கிருத நிதி ஒதுக்கீட்டு விவரம் வந்தது; கண்டித்தார்கள், அதற்கு முந்தின ஆண்டும் வந்தது; கண்டித்தார்கள். போன ஆண்டு ஒருவர் கண்டித்தார். இப்போது கண்டிக்கவில்லை; கவனம் இல்லை, வேறு சிக்கலில் இருக்கிறார் போலும். பொதுவாக அவ்வப்போது வரும் இவ்வளவு வளர்ச்சித் தொகை ஒதுக்கீடு என்று. ஆகா ஓகோ ஒன்றுமில்லா செத்த மொழிக்கு இவ்வளவா என்பார்கள். ஆனால் செத்த மொழிக்குதான் செலவழிக்கிறார்கள். நாம் வாழும் மொழியைச் சாகடித்துக் கொண்டு இருக்கிறோம். கல்வியில் தமிழ் இல்லையே, அன்றாடப் பயன்பாட்டில் தமிழில்லையே, வழிபாட்டு மொழி தமிழில் இல்லையே, எங்கு பார்த்தாலும் தமிழ் இல்லையே, தமிழே இல்லாமல் தமிழை நாம் சாகடித்துக் கொண்டு இருக்கும் போது நாம் செத்த மொழி என்று பல கோடி உரூபாய் ஒதுக்கீடு பெறக்கூடிய ஒரு மொழியைச் சொல்லலாமா, ஆக நாம் மேலோட்டமாக கண்டிப்பதிலோ அல்லது மிக கடுமையாகக் கண்டிப்பதிலோ பலன் கிடையாது.
இதே போன்று, தமிழ்நாட்டிலும் பல திட்டங்கள் உள்ளன. நிதி உதவி செய்வது, அச்சிட்ட புத்தகங்களுக்கு நிதி உதவி செய்வது என. ஆனால் அதற்கான வரையறையை நீங்கள் பார்த்தீர்களானால் மிக மிகச் சிக்கலாக இருக்கும். அஃதாவது எந்த உதவியும் யாரும் பெற முடியாது. அந்த அளவில் தான் உதவியே இருக்கும். இந்தத் திட்டங்கள் எதற்காக? தமிழைப் பரப்புவதற்காக தானே இருக்க வேண்டும். ஆனால் அஃது அல்ல அவ்வாறு இல்லாமல் நிதித் துறையை அவர்கள் சொந்த வீட்டுப் பணத்தை வாரி வழங்குவது போன்று எண்ணிக் கொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட நடை முறைதான் நமக்கு இருக்கின்றது. ஆக, நாம் செய்ய வேண்டியது என்ன? சமற்கிருதத்திற்கு அதிக ஒதுக்கீடு என்று சொல்வதை நிறுத்துங்கள். மிக அன்பான வேண்டுகோள், திட்டங்களைத் தாருங்கள், இன்னின்ன திட்டங்கள், இந்த திட்டங்களுக்கான எங்களுக்குத் தாருங்கள், திட்டத்திற்கான பண வசதி தாருங்கள், இப்படிக் கேட்கும்பொழுது ஒட்டுமொத்த எல்லா மொழிக்கும் குரல் கொடுக்க வேண்டா. அவரவர் மொழியை அவர்கள் பார்த்து கொள்ளட்டும். அவர்கள் குரல் கொடுத்தால் சேர்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் சேர்த்துச் சேர்த்தே நம் தமிழை அழித்துக் கொண்டு இருக்கிறோம். மலையாளத்தில் அவன் குரல் கொடுத்தால் இணைந்து கொள்ளுங்கள். அதை நாம் சொல்ல வேண்டா. தமிழுக்கு இன்னின்ன செய்ய வேண்டும்; செய்யுங்கள் என்று கேட்போம். நமது வேலை என்ன? தமிழ் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுதல், அது மட்டுமல்லாமல் எவ்வாறு சமற்கிருத அறிஞர்களையும், சமற்கிருத நூலாசிரியர்களையும் ஒன்றிய அரசு மதிக்கிறதோ அவ்வாறு தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விருதுகள் கொடுத்தும் மேலும் பாராட்டவும் செய்யும். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் கூட, இருக்க வேண்டிய அளவிலே இல்லை; எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு இல்லை, காரணம் நமக்கு உரிய நடைமுறை அறிவு இல்லை. வேறு சொல் பயன்படுத்தலாம் ஆனால் எனக்கு அந்தச் சொல்தான் வருகிறது. நம்மிடம் செயற்பாட்டுத் திட்டங்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஆக எந்த ஒரு நடைமுறைத் திட்டமும் இல்லாமல், நாம் குரல் கொடுப்பதாலோ கண்டிப்பதாலோ ஏதேனும் பலன் இருக்கிறதா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு சிந்தித்துப் பார்த்தால்தான், ஏன்? நாம் இவ்வாறு செய்ய வேண்டி இருக்கிறது என்றும், என்னென்ன செய்யலாம் என்றும் நமக்கு விழிப்புணர்வு வரும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இணைய வழி உரையின் எழுத்தாக்கம்
13.07.2025







Leave a Reply