மேற்கோள் முதலிய தேவைக்கேற்ப தமிழை ஆங்கிலத்தில் ஒலி பெயர்ப்பு முறையில் எழுதுவது இயற்கையே. ஆனால், தமிழைச் சுருக்கி ஆங்கில எழுத்துகளில் எழுதும் தங்கிலீசு முறையை ஏற்பவர்களை ஒரு தரப்பாகவும் அதற்கு எதிர்ப்பானவர்களை மறு தரப்பாகவும் கொண்டு இந்நிகழ்விற்கான ஒளிப்பதிவு ஏறத்தாழ இரவு 9.00 மணி முதல் மறுநாள் யாமம் 3.00 மணி வரை நடைபெற்றது.

நானும், தொண்டினையே புனைபெயராகக் கொண்ட தமிழாசான், தமிழ்மீட்சிப்பாசறை கார்த்திக்கு, தமிழ்மொழிக் காப்பாளர் ஆறு கதிரவன், திரைக்கவிஞர் பார்வதி மீரா முதலான சிலரும் அழைப்பின் பெயரில் பங்கேற்றிருந்தோம்.

நீயா நானா’ நிகழ்வின் சிறப்புகளுக்கு ஒரு சான்றாக இதனைக் கொள்ளலாம். இயக்குநர் திலீபனும் கூடுதல் இயக்குநர் ஐயப்பன் முதலான இயக்குநர் குழுவினரும் கல்விக்குழு முதலிய குழுவினரும் சண்மதி, அசய், முதலிய செய்தியாளர் குழுவினரும் பிற குழுவினரும் மிக முயன்று சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். 6 மணி நேரப்பதிவை 2 மணி நேரமாகத் திறம்படச் சுருக்கும் தொகுநர் தேன்ராசு முதலிய குழுவினரும் பெரிதும் பாராட்டிற்குரியவர்கள். நிகழ்வினை மக்களிடம் கொண்டு செல்ல நூறுபேர் உழைக்கின்றனர். இவர்களைத் தவிரத் தொழில்நுட்பக் குழுவினரும் உள்ளனர். இந்நிகழ்ச்சியின் ஆக்குநர் மெர்க்குரி கிறிசுட்டியானாவிற்கும் பாராட்டுகள்.

தன் பேச்சுமுறையாலும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாங்கினாலும் அவையைக் கட்டுப்படுத்தும் திறத்தாலும் கருத்துகளாலும் மக்களிடம் நற்பெயர் எடுத்து வரும் கோபிநாத்தின் தொகுத்தல் பணியும் சிறப்பாக உள்ளது.

ஆனால், இந்த நிகழ்வின் பொழுது தமிங்கிலம் அல்லது தமிழ்ங்கிலீசின் தீமையை எடுத்துரைக்கப் போனாலே “மொழிப்பற்று, தூய தமிழ், மொழிக்கொலை, வரலாறு என்றெல்லாம் பேசி அவர்களை மிரட்டாதீர்கள். பாவம் சின்னக் குழந்தைகள்” என்று சொல்லி மொழிக்கொலைகளுக்கு எதிராக வாதிட வந்தவர்களை அடக்கியதுதான் ஏனென்று தெரியவில்லை. நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே நான், “பேச இசைவு தந்தால்தான் பேச வேண்டுமா? இடையிலே குறுக்கிடலாமா” எனக் கேட்டேன். “எந்தத் தடையும் கிடையாது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். தலைப்பு குறித்து என்ன வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் உரிமைக்கு எந்தத் தடையும் இல்லை” என்றுதான் சொன்னார்கள். ஒருவேளை தமிழில் எழுதினால் இழிவாக எண்ணுவார்கள், மூதாட்டியாக எண்ணுவார்கள் என்பனபோல் பேசப்பட்ட தங்கள் செயலைச் சரியானது எனக் கருதும் மொழிக்கொலையின் அவலத்தை மக்கள் உணர வேண்டும் என்பதற்தாகவே அவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி போல் இதனை நடத்தினாரா என்று தெரியவில்லை. தன் பெண்ணிற்கு வெண்பா எனப் பெயர் சூட்டித் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்திய அவர் தமிழ்ப்பற்று மீது ஐயமில்லை.  பங்கேற்பாளர்களைப் போல் தங்கள் மொழிக்கொலை சரியே எனக் கருதுவோருக்கு விடையிறுக்கும் வகையிலாவது தமிழ்க்கொலைக்கு எதிரானவர்களுக்குச் சம வாய்ப்பு தந்திருக்கலாம்.

நிகழ்வினைப் பார்க்கும்பொழுது இது தெரியாமல் இருக்கலாம். எனினும் மொழிக்கொலை ஈடுபாட்டாளர்களால் தமிழ்நாடு நாம் நினைப்பதுபோல் அல்ல, அதைவிடமோசமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை தரும் உண்மை.

நிகழ்வினைப் பார்க்க அன்புடன் வேண்டுகிறேன்.

‘அருஞ்சொல்’ என்னும் தளத்தில் ‘தமிங்கிலத்தைப் பெருமிதமாகப் பேசுங்கள்’ (24.11.2021) என ஒரு கட்டுரை வந்திருந்தது. இப்படிப்பட்ட தற்குறிகள் பெருகிக் கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே – அதைத்

தொழுது படித்திடடி பாப்பா! – பாரதியார்

உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக!

விடுதலைப் போராளி சுப்பிரமணிய சிவா : ஞானபாநு, செட்டம்பர், 1915

தமிழில் பேசுக!  தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!

– தமிழ்ப்போராளி சி.இலக்குவனார்

நாட்டு நிலையை உணருவதற்கு வாய்ப்பளித்த விசய் தொலைக்காட்சிக்கு நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்