(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 – தொடர்ச்சி)

 கல்விக்கடமை முழுவதும் அரசின் பொறுப்பு என்றானால் கல்வி நிலையம் யார் நடத்தினாலும்  வணிகமாய் இல்லாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில்தான் இருக்கும். இருப்பினும் இன்றைய சூழலில் மக்களின் நாட்டம் தனியார் கல்வி நிலையங்கள் மீதே உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள் மிகப்பெரிய கட்டடங்களுடனும் ஏந்துகளுடனும் இருப்பதைப் பார்த்து அரண்டு போகக்கூடாது. இவ்வசதிகள் கல்வி நிலையம் நடத்துநர்களின் சொந்தச் செல்வத்தில் உருவானவையா? இல்லையே! பொதுமக்களின் செல்வத்தால் – படிக்க வருபவர்களின் செல்வத்தால் உருவாகின்றவைதாமே!

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

என்பது கற்கையின் சிறப்பை உணர்த்தும். ஆனால், பிச்சை எடுக்காமல், கடன் வாங்காமல், இடர்ப்படாமல் கல்வி பெறும் நிலையை உருவாக்க வேண்டியது பொருள்நிலை, சாதி, சமய வேறுபாடின்றி அனைவருக்கும் கட்டணச்சுமையில்லாக் கல்வி அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, கல்வி நிலையங்களை அரசே நடத்துவதே முறையாகும். ஆனால், இப்பொழுது தனியார் நடத்தும் கல்வி நிலையங்கள் பல உள்ளன. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு பின்வரும் முறையில்  கல்வி நிலையங்கள் நடத்த வகை செய்ய வேண்டும்.

  1. தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்டவர்களின் அமைப்பு எவ்வகைக் கட்டணத்தையும் மாணாக்கர்களிடம் இருந்து பெறாமல் அரசு வகுத்துள்ளவாறான வாய்ப்பு வசதிகளைக் கல்வி நிலையங்களில் அளித்து, அரசு வரையறுக்கும் ஊதியங்களை ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கி அனைத்துத் தரப்பாருக்கும் கல்வி அளிக்க முன் வந்தால் இப்போதைய கல்வி நிலையங்கள் உரியர்களிடம் தொடரலாம். மாறாகப் படிக்க வரும் மாணாக்கர்களிடம் அல்லது பெற்றோர்களிடம் நன்கொடை திரட்டி நடத்தப்படுவதாயின் அந்நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். இதனால் கல்வியை வணிகமாக நடத்துநர் கல்வித்துறையை விட்டு அகல்வர்.
  2. சொந்தப் பொறுப்பில் நடத்த இயலாத கல்வி நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
  3. புதிய கல்வி நிலையங்கள் யாவும் அரசின் கல்வி நிலையங்களாக அமைதல் வேண்டும்.
  4. கல்வி நிலையங்களை அரசு உடைமையாக்கும் பொழுது அவற்றை நடத்துநர்க்கு அவர்களின் தனிப்பட்ட பங்கின் அடிப்படையில் இழப்பீடு தந்தால் போதுமானது. மொத்த செல்வ மதிப்பின் அடிப்படையில் வழங்கத் தேவையில்லை. அவையாவும் மக்களிடம் பெறப்பட்ட செல்வத்தில் உருவானவையே. இந்நிலை தனியார் பல்கலைக் கழகங்களுக்கும் பொருந்தும். கூரை அறையில் கல்வி நிலையத்தைத் தொடங்குபவர்கள் பன்மாடி அடுக்க வளாகங்களை எழுப்புகின்றார்கள் எனில் மக்கள் பணத்தினால்தான். எனவே, இலவயக் கல்வி அளிக்காத எந்நிறுவனமாயினும் அரசே அதை ஏற்று நடத்த வேண்டும்.
  5.  கல்வியைக் கட்டணமின்றி அளித்தாலும் இலவயமாகப் பெற விரும்பாதவர்களுக்காக, ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆகும் செலவிற்கேற்ப கட்டணத்தை வரையறுத்து விரும்புபவர்கள் உரிய கட்டணத் தொகையையோ, இதை விடக் குறைவாக, ஓர் அடையாளமாகச் சிறு தொகையையோ, அதைவிடக் கூடுதலாகக் கொடுக்க முடிந்தோர் அக்கூடுதல் தொகையையோ   செலுத்த வாய்ப்பு வழங்கலாம். இதனைக் கல்விக்கூடங்களில் செலுத்தச் சொன்னால், படிப்போரிடையே வேறுபாடு எழும் வாய்ப்பு நேரலாம். எனவே, தனியாகக் கல்விவளர்ச்சி நிதியம் ஏற்படுத்தி இவ்வாறு பொருள் சேர்க்கலாம். எனவே, கட்டணமில்லாக் கல்வியும் இருக்கும். கல்வி வளர்ச்சிக்கான விருப்ப நிதியையும் பெற்று, இலவயம் விரும்பாதவர்களுக்கு மனநிறைவும் அளிக்கலாம்.

  கல்வி பற்றிப் பார்த்த நாம், கல்விக்கூடங்கள் பரவலாக இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும் காண வேண்டும்.

  13/10/12 அன்று அருகமைப் பள்ளி குறித்தும் சமச்சீர்க்கல்வி குறித்தும் சொற்பொழிவு நிகழ்ந்துள்ளது. எனவே, அருகமைப்பள்ளி குறித்தும் ஒரே வகுப்பிற்கு வெவ்வேறு பாடமுறை இருப்பதால் சமச்சீர்க்கல்வி குறித்தும் காண்போம்.

  சமச்சீர்க்கல்வி இருந்தால்தான் அருகமைப்பள்ளி என்பது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்.

  கல்விமுறையில் பாடத்திட்டம் ஒரே வகையாக இருப்பது மட்டுமல்ல சமச்சீர்க்கல்வி. கல்வித்தரம், கல்வி நிலையங்களின் தரம் முதலியனவும் ஒரே வகையாக நன்முறையில் இருக்க வேண்டும். இக்கல்வி நிலையம் உயர்ந்தது, அக்கல்வி நிலையம் தாழ்ந்தது என்று வேறுபாடில்லாமல், எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஒரே வகையான வாய்ப்பு நலனும்  சிறப்பும் தரமும் இருக்க வேண்டும். எக்கல்விநிலையமாயினும் அதில் சேர்ந்து படிக்கலாம் என்ற நிலை வரவேண்டும். இத்தகைய சமச்சீர்க்கல்வியும் தொலைவில் கிடைப்பதாக இருக்கக்கூடாது. எனவேதான் அருகமைப்பள்ளியாக இருக்க வேண்டும். அருகமைப்பள்ளி இன்மையால் மாணாக்கர்கள் போக்குவரத்து நேர்ச்சிகளாலும் வழியிடை இடர்ப்பாடுகளாலும் தீங்கிற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.  எடுத்துக்காட்டிற்குச் சொல்வதானால், அண்மையில் புனிதா என்னும் மாணாக்கியர் பள்ளி செல்லும் வழியில் கற்பழித்துக்  கொல்லப்பட்ட அவலத்தைக் கூறலாம். அருகமைப்பள்ளியில் அம்மாணாக்கியர் சேரும் நிலை இருந்திருந்தால், இத்துயரம் நேர்ந்திருக்காது அல்லவா?

  சமச்சீர்க்கல்வியுடனான அருகமைப்பள்ளிகள் இருந்தால், இட மாற்றங்களால் ஏற்படும் இன்னல்கள் நேரா. எப்பள்ளியாக இருந்தாலும் ஒரே வகை பாட முறை என்பதால் எப்பள்ளியிலும் இடமாற்றத்தின் பொழுது இடையிலும்கூட சேர்க்கலாம். பெற்றோர் இடமாற்றத்தால் பிள்ளைகள் ஓரிடம் பெற்றோர் ஓரிடம் என்னும் இடர் நிலை ஏற்படாது. அதனால் ஏற்படும் துன்பங்களும் பெற்றோர்களுக்கு ஏற்படாது.