(சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : தொடர்ச்சி)

1021. Auxiliary force       துணைப்படை

துணைப் படையினர் என்பது படைத்துறை அல்லது காவல்துறைக்கு உதவும் துணைப் பணியாளர்கள். ஆனால் வழக்கமான படைகளிலிருந்து மாறுபட்டு ஒழுங்கமைக்கப்பட்டவர்கள்.

துணைப் படையினர் என்பது ஆதரவான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அல்லது கோட்டைக் காவற்படை  போன்ற சில கடமைகளைச் செய்யும் படைசார் தன்னார்வலர்களாக இருக்கலாம்.

ஒரு துணைப் படை வழக்கமான வீரர்களைப் போலவே பயிற்சி அல்லது தரவரிசை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அஃது ஒரு சண்டைப் படையில் ஒருங்கிணைக்கப்படலாம் அல்லது ஒருங்கிணைக்கப்படாமலும் இருக்கலாம். இருப்பினும், சில துணைப் படைகள் முன்னாள் படைஞர்கள், போராளிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எனவே, சிறந்த பயிற்சி, போர்ப் பட்டறிவைக் கொண்டுள்ளன.

ஒரு நாட்டில் நடைபெறும் போரின்பொழுது அந்நாட்டிற்குத் துணையாக வரும் பிற நேச நாட்டுப்படைகளும் துணைப்படைகளாகும்.

Auxilia என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து Auxiliary உருவானது. இஃது உரோமானியப் பேரரசின் பகுதியாகச் செயற்படும் வகையில் அமைக்கப்பட்ட காலாட்படை, குதிரைப்படையைக் குறிக்க முதலில் பயன்படுத்தப்பெற்றது. 
 1022. Auxiliary home                 துணை இல்லம்‌

துணை இல்லம் என்பது உட்புறக் குடியிருப்பு அல்லது இணைப்புக் குடியிருப்பாகும்.
 1023. Avail          பயன்படுத்திக்‌ கொள்‌

நல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளல்  
நன்மை பயக்கு

சொத்து விற்பனை வருமானம் அல்லது காப்பீட்டுக் கொள்கை வருமானத்தினால் அடையும் ஆதாயம் அல்லது பயனையும் குறிக்கும்.
1024. Available              கிடைக்கத்தக்க

சட்டத்தில்,

கிடைக்கத்தக்க’ என்பது பொதுவாகச் சூழலைப் பொறுத்து, அணுகக்கூடியது, பெறக்கூடியது அல்லது பயன்படுத்த ஆயத்தமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாகத் தத்தெடுப்பதற்கான குழந்தையின் சட்டப்பூர்வக் கிடைக்கும் தன்மை, விற்பனை அல்லது காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ‘கிடைக்கும் வருமானம், சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வளத்தின் கிடைக்கும் தன்மை, அல்லது தகவல் அல்லது சேவைக்கான செயல்பாட்டு மற்றும் நம்பகமான அணுகல்.
இது கிடைக்கக்கூடிய வழிமுறைகளில் கைப்பணமாக மாற்றக்கூடிய பணம் அல்லது சொத்துக்களையும் குறிக்கலாம்.
 1025. Available for the reception      ஏற்புமைக்கான கிடைப்புத் தன்மை

reception என்பது பொதுவாக வரவேற்பு என்னும் பொருளில் குறிக்கப்பெறுகிறது. எனினும் சட்டத்தில் ஏற்றுக்கொள்கை, ஏற்புத்தன்மை > ஏற்புமை என்னும் பொருள்களில் குறிக்கப் பெறுகிறது.

சட்டக் கோட்பாட்டில், ஏற்புமை என்பது முதன்மையாக, மற்றொரு பகுதி அல்லது மற்றொரு காலக்கட்டத்தின் வேறுபட்டசட்ட ஒழுகலாற்றின் சட்டத் தோற்றப்பாட்டை(phenomenon) அல்லது  சட்ட நிகழ்வை ஒரு புதிய சட்டச் சூழலுக்கு மாற்றுவதாக வரையறுக்கப்படுகிறது