(சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : தொடர்ச்சி)

1036. Avyavaharika        அறநெறியற்ற Avyavaharika debts – அறநெறியற்ற கடன்கள் – மது, சூதாட்டம், பிற ஒழுக்கக் கேடான செயல்களால் ஏற்படும் கடன்கள் – இந்துச் சட்டத்தில் குறிக்கப்பெறுகிறது.
1037. Award         தீர்வம் தீர்வளிப்பு தீர்ப்பு வழங்கு award  என்றால் பொதுவாக நாம் விருது என்றும் சில நேரங்களில் பரிசு என்றும் கருதுகிறோம். ஆனால், வழங்கல் என்னும் பொருள் உண்டு. எனவே, சட்டத்துறையில் வழங்கப் பெறும் தீர்ப்பினைக் குறிக்கிறது. தீர்வு எனவும் பொருள்படும். இரு தரப்பை இசைவிக்கும் தீர்ப்பாளரின் முடிவையும் குறிக்கும். தொழிலாளர் நீதிமன்றம், தொழில்துறை தீர்ப்பாயம் அல்லது தேசிய தீர்ப்பாயம் அல்லது நடுவர் தீர்ப்புகள் உட்பட தொடர்புடைய மாநிலச் சட்டங்களால் எந்தவொரு தொழில்துறை தகராறு அல்லது தொடர்புடைய கருத்து வேறுபாட்டிற்கான அல்லது சட்ட ஐயப்பாடு தொடர்பான இடைக்கால அல்லது இறுதித் தீர்வத்தைக் குறிக்கிறது. 1965 ஆம் ஆண்டு மீதூதியச் சட்டம், பிரிவு பிரிவு 2(7) “தீர்வம்” என்ற சொல்லை வரையறுக்கிறது. பொது பொறுப்பு காப்பீட்டு சட்டம், 1991 பிரிவு 7 தீர்வம் குறித்துத் தெரிவிக்கிறது. தொழில்துறை தகராறுகள் சட்டம், 1947 இலிலும் தீர்வம் குறிக்கப் பெற்றுள்ளது. தீர்வம்(Award) என்பதுடன் தீர்ப்பு(judgement) தீர்ப்பாணை(decree) ஆகியன பற்றியும் அறிந்து கொள்க.
1038. Award method      தீர்வு முறை தீர்வு முறை என்பது கொள்முதல் செய்பவர் ஏலங்களை மதிப்பிடுவதற்கும், வெளிப்படைத் தன்மைக்கும் நயன்மையை(நியாயத்தை) உறுதி செய்வதற்கும் ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பதற்கும் பயன்படுத்தும் முறையான நடைமுறையாகும். முதன்மை முறைகளில் குறைந்த விலை, அதிகத் தகுதி வாய்ந்தவர் அல்லது சிறந்த மதிப்பின் அடிப்படையில் வழங்குதல் ஆகியவை அடங்கும். இந்தச் செயல்முறை பொதுவாகத் தேவைகளை அடையாளம் காண்பது, ஒப்பந்தப்புள்ளி வழங்குதல், மதிப்பீடு செய்தல் , ஒப்பந்தக் கையொப்பம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறது.
1039. Award of compensation  இழப்பீடு வழங்குதல் நேர்ச்சி(விபத்து)களால் உயிரிழப்பு, உறுப்பிழப்பு, காயம், கை கால் முறிவு, ஊர்திகளுக்குச் சேதங்கள், முறையற்ற செயல்களால்  ஏற்படுத்தப்படும் பணி இழப்பு முதலிய பல்வேறு கரணங்களால் பாதிப்புற்றவருக்கு பாதிப்புகளுக்கு ஈடாக வழங்கப்படும் தொகையே இழப்பீட்டுத் தொகையாகும். பாதிப்பில் மருத்துவச் செலவுகள், எதிர்கால வருவாய் இழப்பு முதலியவை அடங்கும்.
1040. Awarding damagesசேதஈடு வழங்கல் உரிமை வழக்கில் உரிமை கோருநருக்கு முறையீடடாளர் அல்லது வழக்காடி சேதத்திற்கு ஈடாகத் தரும் தொகை வழங்கல். damage என்பது  அழிவு/ சிதைவு/ சேதம்/ஊறுபாடு எனப்பொருளாகும். damages என்பது இழப்பீட்டைக் குறிக்கும். compensation-இழப்பீடு என்பதற்கும் என்பதற்கும் வேறுபாடு காட்ட சேதஈடு எனலாம். ஏதம் என்பதிலிருந்து உருவான சேதம் என்னும் சொல்லும் தமிழே. குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம் 1958 பிரிவு 5(3) [S. 5(3) POA, 1958] இழப்பீடு வழங்குதலைக் குறிக்கிறது.