வெருளி நோய்கள் 1011-1015: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1006-1010: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1011-1015
1011. சாக்கடைப் புழை வெருளி – Manholephobia
சாக்கடைப் புழை(Manhole) குறித்த வரம்பற்ற பேரச்சம் சாக்கடைப் புழை வெருளி.
manhole என்பதன் நேர் பொருள் மனிதத் துளை.
இது புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பைக் குறிக்கிறது. புதை சக்கடைக்குள் மனிதர் இறங்குவதற்கு அமைக்கப்பட்ட வாயில் அல்லது வழி். இதனைப் புழை என்பர். எனவே, சாக்கடைப்புழை எனப்படுகிறது.
00
1012. சாச்சன் வெருளி – Saxophonophobia
சாச்சன் இசைக் கருவி/ சாச்சன் இசைப்பி (சாச்சபோன்/saxophone)குறித்த வரம்பற்ற பேரச்சம் சாச்சன் இசைப்பி வெருளி > சாச்சன் வெருளி .
1840ஆம் ஆண்டில் பெல்சியன்(Belgian) இசைக்கருவி ஆக்குநர் அடோல்பி சாச்சு (Adolphe Sax) என்பவர் இக்கருவியை கண்டுபிடித்தார். எனவே, அவரின் பெயரைச் சேர்த்துக் காற்றிசைக் கருவியான இதனைச் சாச்சபோன் என அழைக்ககின்றனர். நம் நாட்டில் உள்ள பழமையான பூரி என்னும் இசைக்கருவியை இஃது ஒத்துள்ளது. அயல் பூரி இசை என்று சொல்லலாம். ஆனால், அவ்வாறு சொன்னால் உண்ணும் பூரியை எண்ணுவார்கள். எனவே, அவ்வாறு குறிப்பிடவில்லை.
00
1013.சாண்டா குலோசு வெருளி – Santaphobia / Clausophobia
சாண்டா குலோசு(Santa Claus)பற்றிய தேவையற்ற அளவுகடந்த பேரச்சமே சாண்டா குலோசு வெருளி.
கிறித்துமசு தாத்தா அல்லது நத்தார் தாத்தா அல்லது சாண்டா குலோசு(Santa Claus) அல்லது புனித நிக்கலசு என்பவர் தொன்ம வரலாறு, நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும். கிறித்துப் பிறப்பு நாளுக்கு முதல் நாள்(திசம்பர் 24) இரவில் இவர் குழந்தைகளுக்குப் பரிசுகள் கொண்டு வருபவராகக் குறிக்கப்படுகிறார். சாண்டா குலோசு என்னும் சொல் இடச்சு மொழியின் சிண்டெர்கிலாசு என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும். அன்பளிப்புகள் மகிழ்ச்சியை அளித்தாலும் புதியவரான ஒருவர் கட்டியணத்து அவற்றை வழங்க முன்வரும் பொழுது அஞ்சும் சிறாரும் உள்ளனர். இதனால் இத்தாத்தா மீது காரணமற்ற அச்சம் கொள்கின்றனர்.
கிறித்துநாள் வெருளி வகையைச் சேர்ந்தது.
00
1014. சாம்பல் வெருளி-Cinerophobia
சாம்பல் மீதான அளவு கடந்த பேரச்சம் சாம்பல் வெருளி.
இறந்த பின் எரிக்கப்பட்டு, சாமபலாவதால் சாம்பல் என்பதை இறப்பின்அடையாளமாகவும் அழிவின் அடையாளமாகவும் கருதுகின்றனர். பங
பிடி சாம்பல் என்பது நேர்ப்பொருளாக ஒருவர் தீ நேர்ச்சியிலோ (விபத்திலோ) எரியூட்டலிலோ உடல் எரிந்து சாம்பலாவதைக் குறிக்கும். ஆனால், ஒரு தீய ஆற்றலோ கயவனோ அழிக்கப்படும்போது, அவன் இருந்த இடம் தெரியாமல் சாம்பலாகிவிட்டான் என்று கூறப் பயன்படுத்தப்படுகிறது. முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே என்பது பட்டினத்தாரின் ஒரு பாடலடி.
இவற்றால் சாம்பல் என்பதை அழிவின் அடையாளமாக எண்ணிப் பேரச்சம் கொள்வர்.
00
1015. சாம்பல்முடி வெருளி – Canusophobia
முடி சாம்பல் நிறமாக மாறுகிறதே என்று கவலயும் பேரச்சமும் கொள்வது சாம்பல்முடி வெருளி.
வயது ஆக ஆக முடியின் நிறம் மாறுகிறது. முதுமை வருவதன் அடையாளம்தான் தலைமுடி சாம்பல் நிறம் ஆக மாறுவது. எனவே, முதுமை குறித்த கவலையும் முதுமை வருவது தெரியக்கூடாது என்ற கவலையும் கலந்து அச்சத்தில் ஆழ்த்தி விடுகிறது.
சாம்பல் வெருளி என்று சொன்னால் சாம்பல் நிற வெருளி எனத் தவறாகப் பொருள் புரிந்து கொள்ளலாம். எனவே, நீளமாக இருந்தாலும் தெளிவாகச் சாம்பல் முடி வெருளி எனச் சொல்வதே ஏற்றது. சாம்பல்நிற வெருளி(Glaucophobia) யின் வகைதான் இது.
canus என்னும் இலத்தீன் சொல்லிற்கு வயதான எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply