(வெருளி நோய்கள் 1191-1195 : தொடர்ச்சி)

பார்க்காத அலைவரிசையில் பார்க்கவேண்டிய நிகழ்ச்சியைத் தவறவிடுவோமோ எனப் பேரச்சம் கொள்வது தவறுகை வெருளி.
தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மற்ற அலைவரிசையில் இன்றியமையா நிகழ்ச்சியைப் பார்க்காமல் போகிறோமோ எனக் கவலைப்படுவர். சில நேரங்களில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க எண்ணியிருப்பர். என்ன நிகழ்ச்சி, எந்தத் தொலைக்காட்சி அலைவரிசை என நினைவின்றி அதனைப்பார்க்க இயலவில்லையே எனக் கவலைப்படுவோரும் உள்ளனர்.
நிகழ்ச்சி தவறுதல் குறித்த வெருளி என்பதால் தவறுகை வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.
இருப்பினும் தவறுகை எனப் பொதுச்சொல்லில் குறிக்காமல், அலைவரிசை மாறிப்போவதை நேரடியாகக் குறிக்கும் வகையில் இப்பொழுது மாற்றலை வெருளி எனக் குறித்துள்ளேன்.
00

தவிட்டி மா(brownie) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் தவிட்டி மா வெருளி.
தவிட்டு மா என்றால் தவிட்டால் செய்யப்பட்ட எனப் பொருள் வரும். எனவே, தவிட்டு நிறமுடைய திண்மா என்னும் பொருளில் தவிட்டி மா எனலாம்
00

தழும்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் தழும்பு வெருளி.
காயங்கள் விட்டு வைக்கும் நிலையான அடையாளம் தழும்புகள். தழும்புகள் உடல் பகுதி வெளியே தெரியும் முகம், கை, முதலான உறுப்புகளில் இருந்தன என்றால் அழகு குறைவாகத் தோன்றும் என்று பேரச்சம் கொள்கின்றனர்.
Oulin என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தழும்பு.
00

கட்டித் தழுவப்படுதல் குறித்த அளவுகடந்த பேரச்சம் தழுவல் வெருளி.
சிறுவர் சிறுமியருக்கு வீட்டிற்கு வரும் உறவினர்கள் கட்டிப்பிடித்தால் பிடிக்காமல் போய்விடுகிறது. இதுவே நாளடைவில் வெறுப்பாக மாறிப் பேரச்சத்தை உருவாக்குகிறது. தவறான நோக்கில் சிலர் கட்டிப்பிடிப்பதை அறிவதாலும் இத்தகைய வெறுப்பு வருகிறது.
00

தளம் சூடேற்றி(space heater)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சூடேற்றி வெருளி.
தளச்சூடேற்றியின் மிகப்பெரும் தீங்கு தீப்பற்றல் ஆகும். அமெரிக்க நாட்டுப்புள்ளி விவரம் ஒன்று, ஆண்டிற்கு 55,000 தீ நேர்ச்சிகள் நடைபெறுவதாகவும், 450பேர் இறப்பதாகவும் 1500 பேர் காயமுறுவதாகவும் தெரிவிக்கின்றது. உலகளாவிய புள்ளிவிவரம் இதைவிட மிகுதியாகத் தெரிவிக்கும் எனலாம். இதற்கு மிகுதியாக மின்சாரம் தேவைப்படுகிறது. மின்சுற்றில் மிகைச்சுமை ஏற்பட்டு, மின்தடை அல்லது தீ நேர்ச்சி நேர்கிறது. இவைபற்றியெல்லாம கவைலப்படுபவர்கள் தளச் சூடேற்றி மீது காரணமற்ற அளவுகடந்த பேரச்சத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.
00