(வெருளி நோய்கள் 761-765: தொடர்ச்சி)

காவல் நாய் குறித்த அளவுகடந்த பேரச்சம் காவல் நாய் வெருளி.
காவல் நாய்கள் பல பெருத்த உருவிலும் பருத்த தோற்றத்திலும் பார்ப்பதற்கு அச்சம் ஊட்டும் வகையிலும் இருக்கும். இதனாலும் எங்கே காவல் நாய்மேலே பாய்ந்து சதையைப் பிடுங்கி விடுமோ என்ற பேரச்சத்திலும் காவல் நாய் வெருளிக்கு ஆளாகின்றனர். நாய் மீதான அச்சம் உள்ளவர்களுக்கும் விலங்கு வெருளி உள்ளவர்களுக்கும் காவல் நாய் வெருளி வருகிறது.

00

காவல்துறையினர் குறித்த வரம்பற்ற பேரச்சம் காவல்துறையினர் வெருளி.
காவல்துறையினர் சிலரின் அட்டூழியங்களையும் அத்துமீறல்களையும் நேரில் பார்ப்பதாலும் செய்தித்தாட்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள் பிற ஊடகங்கள் வாயிலாக அறிவதாலும் காவல்துறையினர் வெருளி வருகிறது. பொது மக்களுடன் கண்ணியமாகப் பழகித் தங்கள் கண்ணியத்தைக் காக்கும் காவல்துறையினர் மீது வெருளி வர வாய்ப்பில்லை.
Astynomia” என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காவல் அலுவலர்.
Astynomia என்றால் நகரம் nomia என்பது சட்டம் என்னும் பொருளுடைய nomos என்னும் சொல்லில் இருந்து உருவானது. எனவே, இதன் நேர் பொருள் நகரத்தின் சட்டம். நகரத்தின் சட்டத்தைப்பேணும் அதற்குப் பொறுப்பான அலுவலர்களாகிய காவல் அலுவலர்களைக் குறிக்கிறது.
00

காழநீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காழநீர் வெருளி.
பெரும்பாலும் சிறுவர்களிடம் காழநீர் வெருளி காணப்படுகிறது.
இவ்வெருளிக்கு ஆட்பட்டவர்களுக்குக் காழநீர் மணமே துன்பம் தருகிறது. காழநீர் பருகவும் அதன் சுவைக்காகவும் அஞ்சுவோரும் அருகில் வேறு யாரும் காழநீர் குடித்தாலும் சுவைக்காழ் அரைக்கப்படும் இடத்தில் இருந்தால் அங்கு வரும அதன் மணத்திற்காக அஞ்சுவோரும் உள்ளனர்.
Leguminophobia என்றால் அவித்த அவரை வெருளி என்றுதான் நேர் பொருள்.
தொடக்கத்தில் சுவைக்காழுக்குத் தனிப்பெயர் இல்லாமல் அவரை(beans) என்னும் சொல்லையே பயன்படுத்தினர். எனவே, இங்கே அவரை என்பது சுவைக்காழையே குறிக்கிறது
.
சுவைக்காழில் உள்ள கிளரியால்(காஃபின்/caffeine)இதற்குக் காஃபி எனப் பெயர் வந்தது. எனினும் தென் எத்தியோப்பியா நாட்டில் உள்ள காஃவா (Kaffa) என்ற இடத்தில் விளைந்த செடி என்பதால் அப்பெயர் வந்தது என்பர். இதிலுள்ள ஊக்கியே, கிளரி(காஃபின்/caffeine) எனப்பட்டது. இது வேறு பிற செடிகளின் விதைகள் அல்லது கொட்டையில் இருந்தாலும் சிறப்பாக இதற்கு மட்டுமே இப்பெயர் வந்தது.


இதனைத் தமிழில், காபி, குளம்பி, கோப்பி, கொட்டை வடி நீர் என்கின்றனர். கன்றுக்குட்டியின் குளம்படிபோல் இருப்பதால் குளம்பி என்றார் தேவநேயப் பாவாணர். மூலப்பொருள் அடிப்படையில் அவ்வாறு குறிப்பிட்டதாகப் பலர் எழுதியிருந்தாலும் மூலப்பொருள் கிளரி என்பதே ஆகும். குளம்பி என்பதைக் குழம்பி என்றே பலரும் தவறாகக் கையாள்வதாலும் குளம்பி என்பது குளம்புடைய விலங்குகளைக் குறிப்பதாலும் இச்சொல்லாட்சி தேவையில்லை. மேலும், செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலியிலேய இச்சொல் இடம் பெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கொட்டை வடி நீர் என்பதைக் கிண்டலுக்குரியதாகப் பலர் கூறுவதால் நிலைக்கவில்லை. எனவே, கொட்டை என்னும் பொருள் கொண்ட காழ் என்பதன் அடிப்படையில் சுவைக்காழ் என்றும் இதிலிருந்து உருவாக்கும் சுவைநீரைக் காழநீர் என்றும் அழைக்கலாம் எனக் கருதுகிறேன்.
பயிற்றினம் அல்லது விதையினத்தைக் குறிப்பிடும்leguminous என்பது இங்கே சுவைக்காழைக் குறிக்கிறது.
Faba என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அவரை. இதனடிப்படையில் Fabaphobia என்பதைப் புதிய வெருளி என்கின்றனர். காழநீர்க்கேட்பு வெருளி எனத் தனியாகக் குறிக்கலாம் என்றாலும் சுவைக்காழ் வெருளியிலேயே இதைச் சேர்க்கலாம்.
00

காழ் அரவை (coffee grinder) குறித்த வரம்பற்ற பேரச்சம் காழ் அரவை வெருளி.
காண்க: காழநீர் வெருளி – Leguminophobia/Fabaphobia/Cafephobia
00

தொடரும்)