வெருளி நோய்கள் 811-815: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 806-810: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 811-815
- குடிநீர் ஊற்று வெருளி – Yinshuijiphobia / Yinshui-phobia
குடிநீர் ஊற்று தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடிநீர் ஊற்று வெருளி.
சீன மொழியில் shui என்றால் தண்ணீர் எனப் பொருள்.
“Yinshui” என்றால் தண்ணீர் குடிக்க என்று பொருளாகும்.
நீர் வெருளி உள்ளவர்களுக்குக் குடிநீர் ஊற்று வெருளி வரும் வாய்ப்புள்ளது.
00
- குடிப்பு வெருளி-Dipsophobia/Dipsomanophobia
போதைநீர்களைக் குடிப்பது தொடர்பான இயல்பு மீறிய பேரச்சம் குடிப்பு வெருளி.
குடிப்பு என்பது மதுவகைகளைக் குடிப்பதைக் குறிக்கிறது. மதுப் பழக்கத்தைக் கைவிடாமல் அதே நேரம், குடிப்பழக்கம் தொடர்பில் அளவுமீறிய பேரச்சம் கொள்வதே இது.
குடிப்பழக்கத்தின் தீமைகளை அறிந்தே குடித்துக்கொண்டு அதற்கு அஞ்சுவோரும் உள்ளனர். உடல் நலம் கேடடைந்தபின்னர், இவ்வாறு நலக்கேடுற்று மறைந்தவர்களை அறிந்து பேரச்சம் வருவதும் உண்டு. குடிகாரர்களைப் பார்த்து அவரின் குடும்பத்தினர் அல்லது அறிந்தவர்களிடம் தேவையற்ற பேரச்சம் எழுவதும் உண்டு.
dipso என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வேட்கை. இங்கே இச்சொல் மதுவகை வேட்கையைக் குறிக்கிறது.
00
- குடிமயக்க வெருளி – Alcoholophobia
குடிமயக்கத்தில் இருப்பது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடிமயக்க வெருளி.
சிலர் போதைப் பொருள் கலந்த மருந்துகளையும் உட்கொள்ள மாட்டார்கள்.
காண்க: குடிப்பு வெருளி(Dipsophobia)
00
- குடியரசுக் கட்சி வெருளி – Repoumplikanikokommaphobia
குடியரசுக்கட்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடியரசுக்கட்சி வெருளி.
பொருளாதாரச் சிக்கல்களில் குடியரசுக் கட்சி அதன் தொடக்கத்திலிருந்தே மூலதனச் சார்பு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது; மரணத் தண்டனை போன்ற சில கடுமையான குற்றக் கொள்கைகளை ஆதரிக்கிறது; துப்பாக்கி உரிமையை ஊக்குவிக்கிறது; துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது; திருநங்கை உரிமைகளை எதிர்க்கிறது. இப்போதைய அமெரிக்க அதிபர் திரம்பின் கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் அவர் மீது ஏற்படும் வெறுப்பு அவர் கட்சி மீதும் வருகிறது. இவை போன்ற காரணங்களால் அமெரிக்கக் -குடியரசுக் கட்சி மீது எதிர்க்கட்சியினருக்கும் பொதுமக்களில் ஒரு சாராருக்கும் வெருளி ஏற்படுகிறது.
00 - குடியிருப்பு வெருளி – Quarterphobia
குடியிருப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் குடியிருப்பு வெருளி.
Quarters என்பது முதலில் படைத்துறையினருக்கான குடியிருப்பையே குறித்தது. பின்னர் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தையும் குறித்தது. அடுத்து அரசு அமைத்துத் தரும் வீடமைப்புப் பகுதியைக் குறித்தது.
குடியிருப்புப் பகுதிகளில் பொதுவான பயன்பாட்டுச் சிக்கல்களால் ஏற்படும் இடர்ப்பாடுகளால் பிறருடன் பழகவும் அஞ்சுவோர் உள்ளனர். சில வாடகைக் குடியிருப்புகள் பழுதுபார்க்கப்படாமல் சிதைந்த நிலையில் இருக்கும். இதனால் தொல்லைகள் ஏற்பட்டு வேறிடம் மாறவும் இயலாமல் இருக்கவும் முடியாமல் கவலைப்படுவர். இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படும் வசிப்புநிலைச் சிக்கல்களால் குடியிருப்பு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் – வெருளி அறிவியல் 2/5







Leave a Reply