வெருளி நோய்கள் 911-915: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 906-910 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 911-915
- கை விளக்கு வெருளி – Pyrsophobia
கை விளக்கு(torch light) குறித்த வரம்பற்ற பேரச்சம் கை விளக்கு வெருளி.
தீவட்டி விளக்கு, தீப்பந்தம், கைப்பந்த மின்விளக்கு முதலானவற்றை குறிக்கிறது. இந்த இடத்தில் கைப்பந்த மின்விளக்கு என்பது சுருக்கமாகக் கைவிளக்கு எனக் குறிக்கப் பெற்றுள்ளது.
Pyrso என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தீ. ஒளிப்பிழம்பு, சுடரொளி என்னும் பொருள்களையும் குறிக்கிறது. இங்கே ஒளிச்சுடர் தரும் கை விளக்கையும் குறிக்கிறது.
00
- கை வெருளி-Chirophobia
கை மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கை வெருளி.
தம் கைகளைக் கண்டாலோ அடுத்தவர் கைகளைக் கண்டாலோ பிறர் கைகளால் தீண்டினாலோ சிலருக்கு இத்தகைய பேரச்சம் ஏற்படும்.
கைகளால் நோய்பரவும் என்ற அச்சம் அல்லது கைகளால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் அல்லது கைகளுக்கு ஏதும் நேர்ச்சி ஏற்பட்டு அவற்றை இழக்க நேரும் என்ற அச்சம் அல்லது கை ஊனமாவது குறித்த அச்சம் ஏற்படுதவாலும் இந்நோய்க்கு ஆளாவதுண்டு.
தேர்தலில் கை என்பதும் ஒரு சின்னம். கைச்சின்னம் அதனை எதிர்ப்பவர்களுக்கு அச்சம் தருவதும் இயல்பு. அச்சின்னம் உடையவர்களுக்கே வெற்றி கிட்டுமா என்ற கவலையைத் தருவதும் இயல்பே.
‘அன்னமிட்ட கை’ திரைப்படத்தில் வாலியின்
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
என்னும் பாடல்போல் கைகளை மதித்தால் அச்சம் வராது. ஆனால், கொலை முதலான குற்றம் புரியக் காரணமாக இருந்த தங்கள் கைகளைப் பார்த்துக் குற்றம் புரிந்தவர்கள் அஞ்சுவது கை வெருளியாகி மன நோயையும் உருவாக்கும்.
சேக்சுபியரின் மேக்பெத்து (மேக்பெத்தின் துயரங்கள் / The Tragedy of Macbeth) நாடகத்தில் கை வெருளி வருகிறது. மேக்பெத்து( Macbeth), தன் மனைவியின் தூண்டுதலால் அரசர் தன்கன்(King Duncan) -ஐக் கொன்று விடுகிறான். திருவாட்டி மேக்பெத்து கையில் உள்ள குருதிக் கறையைக் கொஞ்சம் தண்ணீரால் கழுவிடலாம் என்பார். ஆனால் பின்னர் குற்ற உணர்வால் கையில் குருதி வாடை இருப்பதாகக் கற்பனையாக எண்ணிக் கொண்டு அடிக்கடி கை கழுவுவார். “குருதி வாடை இன்னும் இருக்கிறது.. அரபு நாடுகளில் உள்ள அத்தனை நறுமண நெய்களைக் கொண்டு கை கழுவினாலும் இந்தச் சிறிய கை மணக்காது” (Here’s the smell of the blood still. All the perfumes of Arabia will not sweeten this little hand.)என்பார். (இந்நாடகத்தின் மொழி ஆக்க நூல் ஒன்றில் முதலில் கழுவக் கொஞ்சம் தண்ணீர் போதும் என்றதால், அனைத்துக் கடல் நீரைக் கொண்டு கழுவினாலும் கறை போகாது என வரும்.) கை வெருளிக்கு எடுத்துக்காட்டாக இதனைக் கருதலாம்.
chrio என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கை.
00
- கைது வெருளி – Capiophobia
கைது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கைது வெருளி.
தவறு செய்துவிட்டு அது தெரிய வரும் பொழுது கைது செய்யப்பயப்படுதல், பொய்க்குற்றத்தில் யாரும் சிக்க வைக்க முயலும் பொழுது கைது செய்யப்பயப்டுதல், கலவரச் சூழலில் எந்தத் தவறும் செய்யாத பொழுதும் கைது செய்யப்படுதுல் என வெவ்வேறு சூழலில் கைது செய்யப்படுவது குறித்துப் பேரச்சம் கொள்வர். காவல்நிலையம், காவலர்களைக் காணுதல், காவல் ஊர்தியைப் பார்த்தல் அல்லது காவல் ஊர்தி ஒலி கேட்டல் எனப் பலவகைகளிலும் பேரச்சம் வருகிறது. பல நேரங்களில் செல்வாக்கால் தப்பித்துவிடும் குற்றவாளிகளும் உள்ளுக்குள் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்துடன்தான் வாழ்கின்றனர்.
கை விலங்கு வெருளி(Handcuffphobia) உள்ளவர்களுக்குக் கைது வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
capio என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தளையிடுதல்/கைது செய்தல்.
00
- கைக் கணிணி வெருளி – Pingbophobia
கைக் கணிணி (tablet computer) குறித்த வரம்பற்ற பேரச்சம் கைக் கணிணி வெருளி.
tablet computer = மாத்திரைக் கணிணி என நேர் பொருளாகக் கூறுகின்றனர். சிறிய அளவில் கையடக்கமாக உள்ள இதனைக் கைக்கணிணி என்பதே சரியாகும்.
00
- கைத்தடி வெருளி – Ravdiphobia
கைத்தடி குறித்த வரம்பற்ற பேரச்சம் கைத்தடி வெருளி.
கைத்தடி முதியோரின் குறியீடாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. எனவே, இவர்களுக்கு அஞ்சுவோர் கைத்தடிக்கும் அஞ்சுகின்றனர்.
ravdi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கைத்தடி.
000
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5

Leave a Reply