(வெருளி நோய்கள் 976-980: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி)

நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி / வெறிநாய்க்கடி வெருளி.
இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.
சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். இதில் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி ஒலித்ததால், தமிழ்ச்சொல்லல்ல என்ற எண்ணம் வந்து விட்டது.
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் (பரிபாடல் : 90)
எனச் சலம் தண்ணீரைக் குறிக்கிறது.
சிறப்பாக நாய்க்கடியருக்கு ஏற்படும் காரணமற்ற நீர் அச்சத்தைக் குறிததாலும், குளிப்பதற்கும் குடிப்பதற்கும் நீந்துவதற்கும் நீரைக்கண்டு வரும் தேவையற்ற பேரச்சத்தையும் குறிக்கும்.
Hydro என்னும் இலத்தீன் சொல்லிற்கு நீர் எனப் பொருள்.
00

அழுக்குச் சலவைக் கூடம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சலவைக் கூட வெருளி.
சலவைக்கூடமே அழுக்காக இருந்தால் அங்கே வெளுக்கப்படும் துணிகள் எங்ஙனம் அழுக்கற்று இருக்கு் என்ற கவலையும் பேரச்சமும் ஏற்படுகிறது.
00

சலவைத்தூள்(laundry detergent) பொருள்கள் மீதான அளவு கடந்த பேரச்சம் சலவைத்தூள் வெருளி.
கைகளால் துவைப்பவர்களுக்குச் சலவைத்தூள் கைகளில் பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்படுவர். சரியாகக் கலக்காவிட்டல் துணிகளில் ஆங்காங்கே சலவைத்தூள் ஒட்டிக் கொள்ளுமோ என்று ்அஞ்சுவர். சலவைப் பொறியைப் பயன்படுத்துபர்வகளும் காரணமற்ற, தேவையற்ற வெருளி கொள்வர்.
00

சலவைப் பொறி(washing machine) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சலவைப் பொறி வெருளி.
சலவைப்பொறியைப் பயன்படுத்தும் பொழுது குழாயில் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் தண்ணீர் பரவிவிடுமோ, சலைப்பொறியைப் பயன்படுத்தும் பொழுது இடையில் நின்று தொந்தரவு தருமோ என்று காரணமற்ற தேவையற்ற பொருந்தாத காரணங்களைக் கற்பித்துக் கொண்டு பெருங்கவலையுற்றுத் தேவையற்ற வெருளிக்கு ஆளாவர்.
00