செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): தொடர்ச்சி)
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3
? தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்காவிட்டால் தமிழ்ப்பகைவர்கள் கை ஓங்கும் என்பது போல் கூறுகிறீர்களே! எப்படி? ஓர் எடுத்துக் காட்டு கூறுங்களேன்.
# தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தமிழின் சிறப்புகளைக் குறைத்தும் தமிழைப் பழித்தும் பேசியும் எழுதியும் வருபவர்கள்தாம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாநாட்டின் மூலம் தவறான முடிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக மொழியியல் அமர்வில் எழுத்துச் சிதைவு பற்றிய உரை நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலர் இருக்கப் பொறியியல் படித்து விட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் முதலான தமிழ் வளர்ச்சி அமைப்புகளில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் செல்வாக்கு பெற்ற பொறியாளர் ஒருவர், இம்மாநாட்டின் மூலம் எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்னும் பெயரில் எழுத்துச் சிதைவிற்கு வழிவகுக்கத் திட்டமிட்டுள்ளார். எனவே, தமிழன்பர்கள் புறக்கணித்தால், அனைவரின் முடிவு எனக் கூறித் தமிழ் எழுத்துச் சிதைவிற்கு ஆணை பிறப்பிக்கச் செய்ய அல்லது முதற்கட்டமாக அதற்கான குழு அமைக்க முடியும். தமிழன்பர்கள் பங்கேற்று ஒன்று திரண்டு எதிர்த்தால்தான் அதனைத் தடுக்க இயலும். எனவேதான் நானும் இவ்வமர்வில் ‘வரிவடிவச் சிதைவு வாழ்விற்கு அழிவு’ என்னும் தலைப்பில் கட்டுரை அளிக்கின்றேன். மாநாட்டிற்கு முன்பே உலகளாவிய எதிர்ப்பைத் தமிழன்பர்கள் காட்டிவருவதால்தான் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் கருத்தமர்வுத் தலைப்பை மாற்றி மொழியியல் தலைப்பின் கீழ் அவற்றைக் கொண்டு வந்துள்ளனர். இம்மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறுவதால் இணைய வழி இணையற்ற தமிழை நாம் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இவை தவிர தமிழ் அழிப்பாளர்களைக் காலம் வரலாற்றில் இருந்து அகற்றும் என்ற நம்பிக்கை இருந்தால் நாம் இம்மாநாட்டில் பங்கேற்பது குறித்துத் தவறாக எண்ண மாட்டோம்.
? நன்மைகள மட்டும் கூறுகிறீர்களே. அப்படியானால் செம்மொழி அறிந்தேற்பால் எதிர்பார்த்த நன்மைகள் அடைந்து விட்டோம் என்கிறீர்களா?
# அவ்வாறல்ல. உலகின் மூத்தமொழியான உயர்தனிச் செந்தமிழுக்கு அறிந்தேற்பு கிடைத்தது என்றால் என்னென்ன நன்மைகள் விளையும் என எதிர்பார்த்தோமோ அவற்றில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேறவில்லை; இனியாவது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் நாம் செயல்படுவோம்.
? எதிர்பார்த்து நடைபெறாமல் போனவற்றில் சிலவற்றைக் கூறுங்களேன்.
#
- இந்திய அரசு செந்தமிழின் அறிந்தேற்பிற்கான ஒத்திசைவைப் பிற நாடுகளிலும் ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெசுகோ முதலான பன்னாட்டு அவைகளிலும் பெற்றுச் செம்மொழியாம் தமிழைப் பரப்ப முழு நிதியுதவி பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு ஈடேறும் நாள் என்று எனத் தெரியவில்லை.
- அனைத்துநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் தமிழியல் துறை தொடங்க இந்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏட்டளவில்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் மிகச் சிலவாக உள்ள பிற நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள் மூடும் நிலையில்தான் உள்ளன என்னும் நிலைமை என்று மாறும் என்பது தெரியவில்லை.
- இந்தியாவில் உள்ள பிற மாநிலப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் துறை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காற்றோடு கலந்து விட்டதோ எனக் கவலை அளிக்கிறது.
- அஞ்சல்வழியாக இந்தியைப் பரப்புவது போல் மத்திய அரசு அஞ்சல்வழிகளில் தமிழைப் பரப்பும்; ஒவ்வொரு பல்கலைக்கழகம் ஒவ்வொரு மொழியின் மூலம் தமிழைக் கற்பிக்கும் என்ற திட்டத்தில் அனைத்து மொழிகளின் வாயிலாகத் தமிழ் கற்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் வெறுங்கனவாய்ப்போய்விடுமோ என்று வருந்த வேண்டியுள்ளது.
- பிற நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும் தமிழியல் துறைகள் மூலம், அந்தந்த நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றைப் பிறநாட்டுப் புலவர்கள் வணங்கும் நாள் வெகு தொலைவில்கூடத் தெரியவில்லை.
- தமிழ்க்கலைகளின் பயிற்சி, வளர்ச்சி, பரப்புதல், பேணுதல், ஆவணமாக்கல் முதலான முயற்சிகளுக்கு நிதியுதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில்தான் முடியுமோ என்று தெரியவில்லை.
- தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் 1. தமிழ் இலக்கியப் பீடம், 2. தமிழ் இலக்கணப் பீடம், 3. தமிழ்க் கலைச் சொல்லாக்க ஆய்வுப் பீடம், 4. தமிழ் மொழி பெயர்ப்புப் பீடம், 5. தமிழ் ஒப்பிலக்கியப் பீடம், 6. தமிழ்க் கலைப் பீடம் எனப் பல்வேறு தமிழ்ப்பீடங்கள் நிறுவப்படும் என்ற எதிர்பார்ப்பு எண்ணமுடியாத தொலைவிற்குச் சென்றுவிட்டதோ எனத் தெரியவில்லை.
- செம்மொழித் திட்டத்தின் கீழ்ச், சமசுகிருத வளர்ச்சிக்காக என ஆயுர்வேத மருத்துவத்திற்குப் பல கோடி உரூபாய்கள் நிதி ஒதுக்கப்படுவதுபோல் தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கெனத் தமிழ் மருத்துவம் படிக்கவும், தமிழ் மருத்துவ நூல்கள் வெளியிடவும், தமிழ் மருத்துவக் கட்டுரைகளை வெளியிடவும், உலகத் தமிழ் மருத்துவக் கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தவும், தமிழ் மருத்துவ இதழ்கள் வெளியிடவும் தனி நிதியம் ஏற்படுத்தி இதற்காகும் மூல வைப்புத் தொகையை இந்திய அரசு வழங்கும் என எதிர்பார்த்த நிதி ஒதுக்கீட்டைப்பற்றிய எண்ணமே அரசுகளுக்கு இல்லை என்பது வருத்தமாக உள்ளது.
- மத்திய இடைநிலைக் கல்விக் கழகம் சார்பில் இந்தியா உட்பட 19 நாடுகளில் 9275 பள்ளிகள் உள்ளன. இங்கு சமற்கிருதம் முதல்மொழியாகவும் விருப்ப மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றது. செம்மொழித் தமிழுக்கும் இவ்வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது பற்றிய எண்ணமே அரசுகளுக்கு இல்லை என்பது வேதனை அளிக்கின்றது.
- ஏறத்தாழ 800 சமசுகிருதப் பயிலகங்களுக்கு 75 விழுக்காடு நிதியுதவி வழங்கி வருவதுபோல், தமிழ்ப் பயிலகங்களுக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று அடைந்த மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் போகும் அளவிற்கு இவை புறக்கணிக்கப்படுகின்றன.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply