வெருளி நோய்கள் 1216 -1220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1211-1215 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1216 -1220
- தனியை வெருளி- Ermitophobia/ Cremophobia
பிறரால் தனித்து விடப்பட்டதாகக் கருதும் அளவுகடந்த பேரச்சம் தனியை வெருளி(Ermitophobia).
பிறரிடமிருந்து ஒதுக்கப்பட்டு வாழ்வதால் உதவுவார் இல்லை என அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர்..
இவ்வாறு பலவகையாகத் தனிமை தொடர்பான வெருளிகள் சொல்லப்பட்டாலும் அடிப்படையில் யாவும் ஒன்றே. திருமண வாழ்க்கையின்றித் தனித்து இருப்பதும் குடும்ப வாழ்க்கைக்குப் பின்னரும் பிறருடன் ஒன்றாமல் ஒன்றியாய் இருப்பதும் சிலர் இயல்பு. தனிமையில் இருக்கும் பொழுது துன்புறுத்தும் சிந்தனைகள் குவிந்து வாட்டும். தனித்த சூழல் கவலைகளைப் பெருக்கும். செயல்பாட்டுத் தடைகளும் ஏற்படும். தம்முடைய பழக்க வழக்கங்களால் தனித்து விடப்பட்டு அது குறித்துப் பேரச்சம் கொள்வதை விட மன்பதையில் பிறருடன் கலந்து பழகினால் இத்துன்பங்களைத் தொலைக்கலாம்.
Ermit என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தனித்திருத்தல் எனப் பொருள். Cremo என்றால் தனியாக இருத்தல் எனப் பொருள்.
00
- தன் மறப்பு வெருளி-Ipsoblivophobia
தன்னை மறத்தல்பற்றிய அளவு கடந்த பேரச்சம் தன்மறப்பு வெருளி.
தன்னைப்பற்றிய விவரங்களை மறந்துவிடுவோம், முதன்மைத் தகவல்கள் நினைவில் இல்லாமல் இடருறுவோம், இதனால் தன் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று பேரச்சத்தில் ஆழ்வர்.
Ipse=self; oblivium=forgetfullness
காண்க: மறதி வெருளி(Athazagoraphobia/Oblitophoboa/Dediscophobia)
00
- தன்விவரணை வெருளி – Perlustrophobia
திறப்பாடுமிக்க பணியமர்த்துநர் முகநூல் அல்லது சுட்டுரையில் உள்ள தன் விவரணை(தற்குறிப்பு/profile) அடிப்படையில் பணியமர்த்தல் முடிவு எடுப்பாரோ என வரம்பற்ற பேரச்சம் கொள்வது தன்விவரணை வெருளி.
முழுமையாக இல்லாத விவரக்குறிப்பைப்பார்த்து வேலையில் அமர்த்த மாட்டோரா என்ற பெருங்கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.
00
- தன்னச்ச வெருளி – Propriophobia/ Sarantapentedekasenneatreisodekaheptaphobia
தன் நிலைமை குறித்த அளவுகடந்த பேரச்சம் தன்னச்ச வெருளி.
தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களுக்கும் எதிர்மறைச் செய்திகளைப்பற்றியே சிந்திப்பவர்களுக்கும் பிறருடன் பழகுவதற்குத் தயங்குவர்களுக்கும் தன்னச்ச வெருளி வருகிறது.
சிலருக்குச் சில குறிப்பிட்ட சூழல்களில் ஏற்படும் தன்னைப்பற்றிய அச்சம் நிலையாகி விடுகிறது. சான்றாகப் பெண்கள் மாதவிலக்கில் அடையும் வேதனைகளுடன், இதனால் தாய்மை நிலை தடையாவதை எண்ணி, இதனால் பிறரின் கேலிக்கு உள்ளாக நேரிடும் என்று கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர்.
தங்களின் படிப்பு, தோற்றம், செயல்பாடு குறித்தும் பிறருடன் ஒப்பிட்டுப் பேரச்சம் வளர்த்துக் கொள்கின்றனர்.
துணிவும் தன்னம்பிக்கையும் இருந்தால் இவற்றை முறியடிக்கலாம்.
தன்னிலை வெருளி – Sarantapentedekasenneatreisodekaheptaphobia எனத் தனியாக உள்ளது தேவையில்லை என்பதால் தன்னச்ச வெருளியுடன் இணைத்துள்ளேன்.
propri us என்றால் இலத்தீனில் தம்மைப்பற்றி எனப் பொருள். தம்மைச் சார்ந்துள்ள சொந்தம் என்பதையும் இது குறிக்கும்.
00
- தன்னெடுப்பு வெருளி – Zumgphobia
தன்னெடுப்பு விருந்து(buffet) குறித்த வரம்பற்ற பேரச்சம் தன்னெடுப்பு வெருளி.
buffet என்பது பக்கப்பலகையையும் மேசையையும் குறிக்கும். பின்னர், அம்மேசையில் வைத்து உணவு பரிமாறுவதையும் குறித்தது. மேசையில் உணவு வைக்கப்பட்ட பின்னர், பரிமாறுநர் இன்றி உண்பவர் தாமே எடுத்துக் கொண்டு உண்ணும் முறையை இப்பொழுது குறிக்கிறது. தன்னெடுப்பு உணவு முறை என்பது பெரும்பாலும் விருந்துகளிலேயே பின்பற்றப்படுவதால் தன்னெடுப்பு விருந்து என்பது சரியாக இருக்கும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5

Leave a Reply