வெருளி நோய்கள் 1221-1224 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1216-1220 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1221-1224
- தாங்காமை வெருளி – Aerohygrophobia
சில சூழல்களைத் தாங்கிக் கொள்ள இயலாமை குறித்த பேரச்சம் தாங்காமை வெருளி.
உயர்வளிமண்டல ஈரப்பதத்தைச் சில தாவரங்களால் தாங்கிக் கொள்ள இயலாது. அதுபோல் சில சூழல்களைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் காரணமற்ற பேரச்சம் கொள்வர்.
இதற்குச் சரியான சொல் பொறாமை(Intolerance) என்பதுதான். ஆனால், பொறாமை என்பதை அழுக்காறு என்னும் பொருளில்தான் பார்ப்போம். (அழுக்காறும் பொறாமையின் வெளிப்பாடுதான்.) பொறுக்காமை என்பதும் சரியான சொல்லே. ஆனால் பொறுக்குதல் என்பதன் எதிர்ச்சொல்லாகக் கருதக் கூடாது. எனவே, பொருள் குழப்பம வரக்கூடாது என்பதற்காகத் தாங்க இயலாமையைக் குறிப்பிடும் வகையில் தாங்காமை என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
00
- தாங்கி வெருளி – Dekanikiphobia / Rollatophobia
நடைத்துணைச் சட்டகமாக உள்ள தாங்கி, தாங்கு கட்டை, தாங்கு கோல், முடவன் கோல், கவட்டுக் கட்டை, ஊன்றுகோல் எனப் பலவகையாக அழைக்கப்பெறும் தாங்கி(crutches/walking frames) குறித்த வரம்பற்ற பேரச்சம் தாங்கி வெருளி.
சிலருக்குத் தாங்கித் தங்கள் ஊனத்தைக்காட்டுவதாகவும் சிலருக்குத் தாங்கித் தங்கள் இயலாமையைக் காட்டுவதாகவும் எண்ணிப் பேரச்சம் கொள்கின்றனர். சிலருக்குத் தாங்கி இல்லாத வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற எண்ணத்திலும் பேரச்சம் வரும்.
Dekaniki என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தாங்கு கட்டை எனப் பொருள். Rollate என்றால் நடைச்சட்டம் எனப்பொருள்.
00
- தாடி வெருளி – Pogonophobia / Pognophobia
தாடியினைக் கண்டு வரும் காரணமில்லாத் தேவையில்லா அச்சம் தாடி வெருளி.
பெரும்பாலும் பெண்களுக்குத்தான் தாடிவெருளி வருகிறது. தாடியைச் சோம்பலின் அடையாளமாக, முரட்டுத்தனத்தின் வெளிப்பாடாக, நோயின் குறியீடாக எனப் பலவகையிலும் தாடியைக் கருதுபவர்களால் தாடிமீது தேவையற்ற அச்சம் வருகிறது.
தாடிக்கு அணல் என்றும் மற்றொரு பெயர் உண்டு. சங்கக்காலத்தில் கோழி, சேவல், ஓந்தி, குரங்கு ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் அணல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தாடியைச் சிந்தனையின் அடையாளமாகவும் அழகின் அடையாளமாகவும் கருதுகின்றனர். அதுபோல் அன்று ஆண்மையின் அடையாளமாகப் பெருமிதமாகக் கருதியுள்ளனர்.
“அடிபுனை தொடுகழல் மைஅணற் காளைக்கு என்
தொடி கழித்திடல் யான் யாய் அஞ்சுவலே!”
எனப்புலவர் நக்கண்ணையா் புறநானூற்றில்(83) கூறுகிறார்.
“புலம் புக்கனனே! புல் அணற்காளை”
எனப்புலவர் உலோச்சனார் (புறநானூறு 258) வீரனுக்குப் புற்களைப்போல முகத்தில் தாடி மண்டிக்கிடந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.
கருமையான தாடியை அழகாகக் கருதியுள்ளனர் என்பதை,
- “மதி உடம்படுத்த மை அணற் காளை” (அகநானூறு 221)
- “மை அணற் காளையொடு பைய இயலி” (ஐங்குறுநூறு 389)
“….. ….. இன்றே
மை அணற் காளை பொய் புகலா
அருஞ்சுரம் இறந்தனள் என்ப” (நற்றிணை179)
“மை அணல் எருத்தின் முன்பின் தடக்கை
வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த்
தந்தை தண் ஊர் இதுவே”. (நற்றிணை 198)
எனக் குறிக்கப்படுகின்றன.
இக்காலத்தில் தாடியை ஒழுங்குசெய்து செம்மையாக்குவதுபோல் இக்காலத்தில், தாடி வைப்போர் அதை அதிகம் வைக்காமல், கத்தரிக்கோலால் அளவுபடுத்தி வெட்டி, அழகுசெய்து கொள்வார்கள். அக்காலத்திலும் தாடியை அழகுபடுத்திச் சீராக வெட்டிக்காட்சியளித்தனர். தாடி அழகு முறைமை சங்கக் காலத்திலும் இருந்தது. இதனைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது.
“குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்
செவி இறந்து தாழ்தரும் கவுளன்”. (புறநானூறு 257) என்னும் பாடலில் இதை அறியலாம்.
இப்படி எல்லாம் தாடியும் தாடி வைத்திருந்தவர்களும் சிறப்பிக்கப்பட்ட காலம் மாறி இப்பொழுது தாடி மீது சிலருக்கு வெறுப்பும் கசப்பும் ஏற்படும்சூழல் வந்து விட்டது.
pogon என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தாடி என்று பொருள்.
00
- 1224.தாத்தா கடிகார வெருளி – Bodenstandophobia
தாத்தா கடிகாரம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தாத்தா கடிகார வெருளி.
தாத்தாவின் கடிகாரம் அல்லது தாத்தா காலக் கடிகாரம் என்னும் பொழுது பழமை என்றும் புதுமையற்றது என்றும் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5





Leave a Reply