(வெருளி நோய்கள் 644-648: தொடர்ச்சி)

கத்தரிக் கோல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கத்தரிக் கோல் வெருளி.

கத்தரி என்றால் (சிறிது சிறிதாய்) வெட்டியறுத்தல் எனப் பொருள். இதற்குப் பயன்படுவது கத்தரிக்கோல். ஆனால் இதனைப் பலரும் கத்திரிக்கோல் என்கின்றனர். அகராதிகளிலும் இத்தவறான சொல்லாட்சி இடம் பெற்று விட்டது.

00

உலாக் கப்பல், காவற் கப்பல் ஆகியவற்றின் மீதான அளவுகடந்த பேரச்சம் கப்பல் வெருளி.

navis என்னும் இலத்தீன் சொல்லிற்கு நாவாய், கப்பல், படகு எனப் பொருள்கள். தமிழ்ச்சொல் நாவாய் என்பதிலிருந்துதான் இச்சொல் உருவானதாகக் கூறுவர்.

கப்பல் என்பது உட்குழிந்த மரக்கலம் என்னும் அறிவியல் காரணப்பெயர். இச்சொல்லும் மலாய் முதலான உலக மொழிகளில் இடம் பெற்றுள்ளது.

00

கதிர் வளி(Helium) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கதிர் வளி வெருளி.

கிரேக்க மொழியில், ஈலியோசு/எலியோசு(Helios) என்பது சூரியனைக் குறிக்கும் கடவுளாகும். இதனடிப்படையில் கதிர்வளிக்கு ஈலியம்(Helium)  எனப் பெயரிட்டனர். நாம் கதிர்வளி என்றே தமிழில் சொல்லலாம்.

00

கதிர்ப்பொறி(X-ray machine) குறித்த வரம்பற்ற பேரச்சம் கதிர்ப்பொறி வெருளி.

எக்சு கதிர்அச்சு என்றும் ஊடுகதிர்ப்படம் என்றும் அழைக்கப்பெறும் கதிர்ப்படப் பொறிகுறித்து, அதன் ஊடுகதிரால் உடலுக்குக் கேடு விளையும் என அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

X-ray  என்பதைச் செயல் முறையில் ஊடுகதிர் என்கிறோம். ங-கதிர் என நான் குறித்து வருகிறேன்.

00

கம்பளம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கம்பள வெருளி.

நெய்தல் கம்பளம், பின்னல் கம்பளம், தடத் தையல் கம்பளம்(Tufted carpet)  முதலான பல வகைக் களம்பளங்கள் குறித்தும் பேரச்சம் கொள்வர். இளம்பருவத்தில் பறக்கும் கம்பளம், மந்திரக்கம்பளம் முதலான கதைகளைப்படித்தும் கேட்டும் அச்சம்  கொண்டு  வளரும் பொழுது அச்சமும் வளர்ந்து காரணமற்ற பேரச்சத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.

00

(தொடரும்)