வெருளி நோய்கள் 654-658: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 649-653: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 654-658
654. கம்பளி யானை வெருளி – Mammothphobia
கம்பளி யானை எனப்பெறும் மிகப்பெறும் யானைமீதான பேரச்சம் கம்பளி யானை வெருளி.
அடர்ந்த முடிகளால் உடல் மூடப்பட்டுள்ளதால் கம்பளி யானை எனப்பெறுகிறது. 4.8 பேராயிரம்(மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இனம்.இப்பொழுது இல்லை. எனினும் இதனைப்பற்றிய செய்திகளை அறிய வரும் பொழுது படங்களைப்பார்க்கும்பொழுது பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
Mammoth என்கிற சொல் மன்சி என்ற உருசிய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும். ஆங்கிலச் சொல் “mammoth” என்பது “பெரிய” அல்லது “மிகப்பெரிய” என்கிற பொருள் தருவதாகும்.
00
655. கம்பளி வெருளி – Lodiculaphobia / Lanaphobia
கம்பளி குறித்த வரம்பற்ற பேரச்சம் கம்பளி வெருளி.
Lodicula என்றால் தூய்மைப்படுத்து என்றும் பொருள் உள்ளது. இருப்பினும் இங்கே கம்பளி விரிப்பைக் குறிக்கிறது.
00
656. கம்பி வெருளி – Filophobia
கம்பி – பொதுவாக மின் கம்பி – குறித்த வரம்பற்ற பேரச்சம் கம்பி வெருளி.
அலுவலகங்கள், வீடுகள், பொதுவிடங்களில் மின்கம்பிகள் இருப்பதைப் பார்க்கும் பொழுது மின் அதிர்ச்சி ஏற்படும் என்றோ தீப்பற்றலாம் என்றோ மின் கம்பியை மிதித்து மின்தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றோ எண்ணி அளவுகடந்த பேரச்சம் கொ்ளகின்றனர். இப்பொழுது கட்டடங்களில் மின்கம்பிகள்மறைவு நிலையில் சுவருக்குள் இருக்கும் வகையில்தான் பயன்படுத்துகின்றனர். நாம் அறியா வண்ணம் மின் கசிவு ஏற்பட்டுத் தீ நேர்ச்சி ஏற்படுமோ என்ற தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
657. கயவன் வெருளி – Nefarophobia
கயவர்கள் பற்றிய வரம்பில்லாப் பேரச்சம் கயவன் வெருளி.
(Nefaro=villain)அயற்சொல்லைத் தமிழிலேயே வில்லன் என்று குறிக்கும் தவறான பழக்கம் உள்ளது.
இதன் பொருளைத் தீயவன், கேடன், கொடியோன், போக்கிலி, முரடன் என்பனபோன்று கருதுகிறோம். ஆனால், இச்சொல், நாட்டுப்புறத்தில் குடியிருப்பவர்(inhabitant of a villa) என்னும் பொருள் தரும் இலத்தீன் சொல்லில் இருந்துதான் உருவானது. பின் நாட்டுப்புறவாசி என்னும் பொருள் தந்தது. மத்தியக்காலம் வரை சிற்றூர் வாசி என்னும் பொருளே இருந்தது. பின்னர் வெளிப்படையான மனமும் பழக்க வழக்கங்களும் உடையவர் என்னும் பொருளுக்கு வந்தது. இதுவே நாளடைவில், பண்பு நயங்கெட்ட, நடைநயங் கெட்ட, அருவருப்பான ஆளினைக் குறிக்கத் தொடங்கிற்று. இக்காலததில் இழிஞரையும்(scoundrel) குற்றவாளிகளையும் குறிக்கலாகிறது.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
என்கிறார் பாரதியார். இவ்வாறு கயவரை எதிர்க்கும் துணிவுடன் இருந்தால் கயவன் வெருளி வராது.
00
658. கரடி வெருளி- Arkoudaphobia
கரடி மீதான அளவுகடந்த பேரச்சம் கரடி வெருளி.
‘bear’ என்னும் ஆங்கிலச் சொல்லிற்குப் பழுப்பு நிறமானது என்றுதான் பொருள். சுலாவிக்கு(Slavic) மொழியில் தேனுண்ணி என்பர். உருசியர்கள் தாத்தாவாகக் கருதுவர். இவ்வாறு குடும்ப உறுப்பினராகக் கருதினால் கரடியினால் ஏற்படும் தீங்கு குறையும் என்பது அவர்கள் நம்பிக்கை.
உளியம், எண்கு, எலு, குடாவடி, பல்லம், பல்லூகம், மிளிறு எனப் பல வகைகளில் கரடியைக் குறிக்கின்றனர். வளைந்த அடியையுடைதாகிய உயிரினம் என்னும் பொருளில் குடாவடி என்கின்றனர்.
arkouda என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கரடி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply