வெருளி நோய்கள் 381-385 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 376-380 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 381-385
- தித்தியன் வெருளி – Candymanphobia
புனைவுரு பாத்திரமான தித்தி மனிதன்(Candyman) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தியன் வெருளி.
தித்தி மனிதன் பாத்திரம் திகிலூட்டுவதால் இப்படத்தைப் பார்த்தாலும் தித்தி மனிதன் தொடர்பான செய்திகளைப் படித்தாலும் தொடர்புடை படங்களைப் பார்த்தாலும் பேரச்சம் கொள்கின்றனர்.
00
- இன்மா வெருளி – Pemmaphobia
இன்மா (cake) மீதான மிகையான பேரச்சம் இன்மா வெருளி.
cake என்பதற்கு அணிச்சல், இனிப்பப்பம், இனியப்பம், இன்னப்பம், மாப்பண்டம் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். நான் இன்மா எனச் சுருக்கமாகக் கூறுகிறேன்.
இனிப்பு மீதும் இனிப்புப் பொருள்கள் மீதும் வெருளி உள்ளவர்களுக்கு இன்மா மீதும் வெருளி வருவது இயற்கையே.
00
- இன்மை வெருளி – nihilophobia / Tipotaphobia
ஒன்றுமில்லா நிலை குறித்த அளவுகடந்த பேரச்சம் இன்மை வெருளி.
எதுவும் இருப்பதாகக் கொள்ளாமல் இன்மையையே இருத்தலாகக் கொள்வர்.
16.01.1995 முதல் 23.05.2001 வரை ஒளிபரப்பப்பட்ட இரிக்கு பெருமன்(Rick Berman), மைக்கேல் பில்லர்(Michael Piller), செரி தெய்லர்(Jeri Taylor) ஆகியோரால் உருவாக்கப்பட்ட விண்மீன் வண்டி – பயணர் (Star Trek: Voyager) என்னும் தொலைக்காட்சித் தொடரில் முதலில் பயன்படுத்தப் பெற்ற சொல்.
nihil என்னும் இலத்தீன் /கிரேக்கச்சொல்லின் பொருள் ஒன்றுமின்மை. வெறிது என்னும் ஒற்றைச் சொல்லில் தமிழில் இதனைக் குறிப்பர். எனவே, வெறிது வெருளி என்றும் சொல்லலாம்.
00
- ஈ வெருளி – Muscaphobia
ஈ மீதான அளவுகடந்த பேரச்சம் ஈ வெருளி.
musca என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஈ.
Pteronarcophobia என்றும் இது அழைக்கப்பெறும்.
பூச்சிகள் வெருளி(entomophobia) உள்ளவர்களுக்கு ஈ வெருளி வருவது இயற்கை.
கழிவுகள், குப்பைகள், மலம், தூய்மையற்ற இடங்கள் முதலியவற்றில் அமரும் ஈக்கள் உணவுப்பண்டங்களிலும் உட்கார்ந்து தொற்றுநோயை உருவாக்கிப்பரப்புவதால் ஈ மீத பேரச்சம் வருகிறது.
ஈ திரைப்படம், நான் ஈ திரைப்படம் ஆகியவற்றில் ஈ யால் கதைப்பாத்திரங்கள் அருவருப்பும் பேரச்சமும் கொள்வது காட்டப்படுகின்றது.
00
- ஈஃபில் கோபுர வெருளி – Eiffelturriphobia
ஈஃபில் கோபுரம் (Eiffel Tower) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஈஃபில் கோபுர வெருளி.
984 அடி உயரமுள்ள ஈஃபில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்துத் தலைசுற்றல் , கிறுகிறுப்பு, மயக்கம் வரும என அஞ்சுவோர் உள்ளனர். உயரத்தைப் பார்த்து அஞ்சுபவர்களுக்கு ஈஃபிள் கோபுர வெருளி வருவது இயற்கை.
ஒரு பாலியல் நிலையின் பெயர் ஈஃபிள் கோபுரம் என்பதாகும். எனவே, இதனக் கேள்விப்பட்டதும் அது நினைவிற்கு வந்து அருவருப்பும் அச்சமும் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
Leave a Reply