வெருளி நோய்கள் 391-395 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 386-390 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 391-395
- ஈரிட வாழ்வி வெருளி – Batrachophobia
ஈரிடவாழ்வி பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் [ஈர்+இட(ம்)+ வாழ்வி+ வெருளி)
பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை 415) என இரண்டின் அடுக்கு சுட்டப்படுவதைப் பார்க்கிறோம்.
எனவே, நீர் நிலம் ஆகிய ஈரிடங்களிலும் வாழும் உயிரினங்களை(amphibian), ஈரிட வாழ்வி என்று சொல்லலாம். வேளாண்துறையில் இதனை நிலம், நீர்வாழ்வன எனப் பொதுவாகக் குறிக்கின்றனர். உயிரியலிலும் வனவியலிலும் இருவாழ்வி, நீர்-நிலம் வாழ்வி என இரு வகையாகக் குறிக்கின்றனர். புவியியலில் நிலம்நீர் வாழி, இருவாழி என இருவகையாகக் குறிக்கின்றனர். இருவாழி என்றால் இவற்றிற்கு இரு வாழ்வு இருப்பதாகத் தவறான பொருள் வரும். நிலம், நீர் ஆகிய ஈரிடங்களிலும் வாழ்வதால் ஈரிடவாழ்வி என்பதே பொருத்தமாகும்.
“batrachos” என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தவளை என்று பொருள். என்றாலும் இங்கே, தவளை,தேரை, நிலநீர்ப்பல்லி(சலமந்தர்-Salamander) முதலிய ஈரிட வாழ்விகளைக் குறிக்கும்.
00
- ஈரிருக்கை வெருளி – Coupephobia
ஓட்டுநர் இருக்கை தவிர இருவர் மட்டும் அமர்வதற்குரிய இருக்கையுடைய ஊர்தி ஆகிய ஈரிருக்கை ஊர்தி அல்லது தொடரியில் ஈரிருக்கைப் பகுதி (coupe)குறித்த அளவு கடந்த பேரச்சம் ஈரிருக்கை வெருளி.
இந்தியத் தொடரிகளில் மேல் வகுப்புகளில் ஈரிருக்கை -படுக்கை அறைப் பகுதி உடைய பெட்டிகள் முன்பு இணைக்கப்பட்டிருந்தன. பின்பு பெரும்பாலான தொடரிகளில் எடுத்து விட்டார்கள்.
00
- உகப்பூர்தி வெருளி – Helicoptophobia
உகப்பூர்தி(Helicopter) மீதான அளவுகடந்த பேரச்சம் உகப்பூர்தி வெருளி.
உகப்பு என்றால் உயர்ச்சி, எழும்புதல்(Elevation) எனப் பொருள். தொல்காப்பியர் “உகப்பே உயர்வு” (தொல்காப்பியம், சொல்லதிகாரம், 306) என்கிறார்.
தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பு விசையைப் பெற்று இயங்கும் ஊர்தியை எழும்புதல் என்னும் பொருள்கொண்ட உகப்பு அடிப்படையில் உகப்பூர்தி எனலாம்.தோற்ற அடிப்படையில் உலங்கு ஊர்தி என்றும் தும்பி ஊர்தி என்றும் அழைப்பர். எனினும் செயல்பாட்டு அடிப்படையில் உகப்பூர்தி என்பதே பொருத்தமாக அமையும்.
00
- உக்கிரைன் வெருளி – Ucrainophobia
உக்கிரைன்(Ucrain) நாட்டு மக்கள் தொடர்பான பேரச்சம் உக்கிரைன் வெருளி.
உக்கிரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு. இதன் தலைநகரம் கியிவு(Kiev). உக்கிரைன் மக்கள, பண்பாடு, நாகரிகம், தொழில், கலை,இலக்கியம் முதலானவற்றின் மீது அளவு கடந்த பேரச்சம் கொள்வர்.
உருசியாவிற்கு உக்கிரைன்மீதான பேரச்சம் காரணமாக இரு நாடுகளுக்கிடையே பிப்ரவரி 2014 இல் போர் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. வல்லரசாகிய உருசியாவை உக்கிரன் சமாளித்துக் கொண்டிருப்பதால் இதன் மீது பேரச்சம் ஏற்பட்டுள்ளது. உலக உணவுப்பாெருள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணிகளால் இப்போது உக்கிரைன்மீதான வெருளி மிகுவாக உள்ளது.
சுலாவிக்கு மொழியான உக்கிரைனாவில் உக்கிரைன் என்றால் எல்லை நிலம் என்று பொருள்.
00
- உடல் நாற்ற வெருளி- Bromidrosiphobia/Bromidrophobia /Autodysomophobia
உடல் நாற்றத்தால் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் உடல் நாற்ற வெருளி.
தங்களுடைய உடலில் இருந்து அல்லது பிறருடைய உடலில் இருந்து வியர்வை நாற்றம் அல்லது வேறு தீய நாற்றம் வரும் பொழுது அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர்.
bromos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு தீய நாற்றம் என்றும், hidros என்னும் கிரேக்கச் சொல்லிற்கு வியர்வை என்றும் பொருள்கள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
Leave a Reply