(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, தொடர்ச்சி)

எந்த ஒரு சொல்லும் தான் பயன்படும் இடத்திற்கேற்ப உள்ள பொருளைச் “”சுமந்து செல்லும் ஊர்தி”தான். எனவே, மூலச் சொல்லுக்கு நேரான பெயர்ப்புச் சொல்லை அமைக்காமல் மூலப் பொருளுக்கு ஏற்ற பெயர்ப்புச் சொல்லை ஆக்க வேண்டும். சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும். பயன்பாட்டுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். ” “குன்றக் கூறல்” முதலான நூல் குற்றங்கள் பத்தும் “”சுருங்கச் சொல்லல்” முதலான நூல் அழகுகள் பத்தும் சொல்லுக்கும் மிகப் பொருந்தும்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை

வெல்லும் சொல் இன்மை யறிந்து”.

என்னும் திருக்குறளை நினைந்து தக்க சொல்லைத் தெரிவு செய்ய வேண்டும். அயற் சொல் கலப்பை அறவே நீக்க வேண்டும். உரிய சொல் கண்டறியும் வரை இடைநேரமாக அயற்சொல்லைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க இயலாத நேர்வுகளில் தமிழ் வரிவடிவிலேயே எழுத வேண்டும். பிறமொழிச் சொற்களைக் கையாளுவதை மானக்கேடாக நம் உள்ளுணர்வு உறுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக் கூடிய சொற்கள் புரியாதவையாக அமையலாம் என நாம் கருதும் நேர்வுகளில் அல்லது தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ள நேர்வுகளில் அடைப்பிற்குள் இதுவரை வழக்கத்தில் உள்ள சொற்களை அல்லது ஆங்கிலச் சொற்களைக் குறிக்க வேண்டும்.

நாம் கலைச் சொற்களை உருவாக்குவதன் நோக்கம் “அவை அயற்சொற்களையன்றி அல்லது அயற்சொற்களுக்கு இடந்தராமல் நின்று நிலைத்துப் பொருள்தர வேண்டும்” என்பதே. இதைக் கருத்திக் கொண்டு எளிய பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் சொல்லாக்கத்தில் ஈடுபட வேண்டும்.

? நேரான பெயர்ப்புச் சொல்லை அமைக்காமல் ஏற்ற சொல்லை அமைக்க வேண்டும் என்கிறீர்களே. அப்படியானால் என்ன பொருள்?

நல்ல கேள்வி. இதனை ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்க விரும்புகிறேன். back என்றால் தமிழில் என்ன பொருள்?

? பின் எனப் பொருள்.

அப்படியானால் back pain என்று சொன்னால் என்ன சொல்லுவீர்கள்?

? முதுகுவலி என்போம்.

அதுபோல் Back-bone என்பது முதுகெலும்பு எனப் பொருளாகும். முதுகெலும்பைக் குறிப்பிடும் Back-bone, ஆதாரம் என்னும் பொருளிலும் back-boneless – ஆதாரமற்ற என்னும் பொருளிலும் பயன்படுத்தப்பெறும்.back file என்றால் என்ன பொருள்?

? பின் கோப்பு என்போம்

நன்றாக எண்ணிச் சொல்லுங்கள்

? back file என முந்தையக் கோப்பைக் குறிப்பிடுகிறோம்

அஃதாவது முன்கோப்பு என்றுதான் கூறுகிறோம். பின் என்னும் சொல்லுக்கு நேர் எதிரான முன் என்னும் சொல்லை ஏன் கையாளுகிறோம்? இந்த இடத்தில் கோப்பிற்குப் பின்புலமாக அமைவது அதற்கு முந்தைய கோப்பு என்பதால்தானே. அதுபோல் back-date என்பது முன்நாள் ஆகும். இவ்வாறுதான் ஒரு சொல்லுக்குரிய நேரான பொருளைக் கையாளாமல் அச்சொல் அந்த இடத்தில் உணர்த்தும் பொருளைக் கையாள வேண்டும். back என்றால் முதுகு என்றும் பொருள் உள்ளது அல்லவா? தமிழிலும் புறம் என முதுகு குறிக்கப் பெறும். எனவே தமிழ் மரபு உணர்ந்து “பின்” என இந்த இடத்தில் கையாளாமல் “புறம்” எனக் கையாள வேண்டும்.

back என்னும் சொல் பின் என்னும் பொருளில் அல்லாமல் வேறு பொருள்களில் உள்ள  சில சொற்களைப்பார்ப்போம். அதே போல் பின் என்னும் பொருளை உள்ளடக்கிய வேறு சில சொற்களையும் பார்ப்போம். அதுபோல் மரபுத் தொடர்களில் உள்ள சொற்களைப் பிரித்துப் பார்த்தும் பொருள் காணக் கூடாது.

food back என்பதற்கும் உணவிற்கும் தொடர்பு இல்லை. மின்னூட்டம் என்றுதான் பொருள்.

fly back period என்பதற்கும் பறத்தலுக்கும் தொடர்பு இல்லை. திருப்பும் நேரம் எனப் பொருள். அதுபோல் fly back wheel  என்பது சமன் சக்கரத்தைக் குறிக்கிறது.

background என்றால் பின்னணி எனப் பொருள் இருந்தாலும் மங்கல் நிலையைக் குறிப்பிடும்.

huckle-bone என்பது இடுப்பு எலும்பு அல்லது தொடை எலும்பைக் குறிக்கும். huckle-back என்றால் கூன் எனப் பொருளாகும்.

கடலாமைகளில் ஒரு வகையின் முதுகு கடினமாக இல்லாமல் தோல் போன்று இருக்கும். எனவே, இவ்வகை ஆமைகள் தோல் முதுகு ஆமை – தோல் முதுகி –  leather-back  எனப்படும்.

backhanded என்றால் மறைமுகமான என்றும் தெளிவற்ற என்றும் பொருள்கள்.

outback என்றால் பொதுவாக வெளிநாடு என்றும் குறிப்பாக வெகுதொலைவு நாடு என்றும் ஆத்திரேலியாவில் வெகுதொலைவிலுள்ள குடியேற்ற நாடுகள் எனவும் குறிக்கப் பெறும். the back of beyond என்றால்

நெடுந்தொலைவு என்றும் பொருள்

back-chat என்றால் சுடுசொல் எனப் பொருள்.

backmost  என்றால் மிகப்பிந்திய என்றும் pull-back என்றால் தடங்கல் என்றும் backset என்றால் தடை/ தோல்வி என்றும் பொருள்.

Back என்றால் இத்தனைப் பொருட்கள் உள்ளனவா?

ஆமாம். ஆனால் இதை மொழிபெயர்பபாகக் கருதாமல் தொன்மையான தமிழில் உள்ள சொற்களைத்தான் இதற்குப் பொருத்தமாகக் கையாளுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய சொற்களாயின் அவையும் தமிழில் உள்ள சொற்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவனவே.

மேலும் சில சொற்கள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.

backbite என்பது புறங்கூறுதலைக் குறிப்பிடும்.

backside என்றால் பின்பக்கம் என்று மட்டும் அல்லாமல் இடத்திற்கேற்றாற்போல் நம்பிக்கை துற என்றும் வரும்.

get someones back up என்றால்  எரிச்சலூட்டு என்றும்

on someones back என்றால் தொடர்ந்து எரிச்சலூட்டு என்றும் பொருள்

on ones back என்றால் படுத்த படுக்கையாக என்றும்

get one’s own back என்றால் பழிவாங்கு என்றும் பொருள்.

break ones back என்றால் கடுமுயற்சியுடன் உழை என்றும்

break the back of என்றால் கடின வேலைப்பகுதியை முடி என்றும் பொருள்.

இவைபோல்,

back-down – உரிமையை விடு

back-handed – கேலியான

back-lash – திடீர்த்தாக்குதல்

back-log – வேலைத் தேக்கம்

backput – திரும்பப் பெறு

see the back of- விட்டொழி

எனப் பொருள்களாகும்.

     பயன்தரா அறிவுரையை water off a duck’s back என்பர்.

இவைபோல் மேலும் சில பொருள்களில்  பயன்படுகிறது. உரிய இடங்களில் அவற்றைப் பார்ப்போம்.

இங்கு நான் மரபுத் தொடர்கள் சிலவற்றையும் கூறிய காரணம் மரபுத்தொடரில் நேரான பொருளைக் கூறக் கூடாது என நினைவூட்டத்தான். மேலும் back என்பது தொடக்க இடம், தொடக்க நிலை, கடந்தகாலம் என்பன போன்ற பொருள்களையும் உடையது. இவற்றையெல்லாம் அகராதியில் நீங்கள் கண்டு கொள்ளலாம். எனினும், சொல்லுக்கு நேரான சொல்லைக் கூறக்கூடாது; அச்சொல் பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருளை வெளிப்படுத்தும் சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என மனத்தில் பதிய வைத்துக் கொண்டால் போதுமானது.

(தொடரும்)