வெருளி நோய்கள் 456 – 460 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 451 – 455 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 456 – 460
456. உள்ளாடை வெருளி – Esorouchaphobia
உள்ளாடை குறித்த வரம்பற்ற பேரச்சம் உள்ளாடை வெருளி.
உள்ளாடைகளைக் கடைகளில் கேட்பதற்கு அணிவதற்கு மாற்றுவதற்கு எனப் பல நிலைகளில் உள்ளாடைகள் குறித்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். உள்ளாடைகள் மூலம் நோய் வரும் என அஞ்சுவோரும் உள்ளனர்.
Esoroucha என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உள்ளாடை என்று பொருள்.
அழுக்கு உள்ளாடை வெருளி(snickophobia) உள்ளவர்களுக்கு உள்ளாடை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க அதிபர் கிளிண்டன், தன் செயலர் மோனிகாவுடன் தகா உறவு மெய்ப்பிக்க மோனிகாவின் உள்ளாடை ஒரு காரணம் என்பதால் தகாப்பாலுறவருக்கு உள்ளாடை மீத அச்சம் வருகிறது.
00
- உறவினர் வெருளி – Syngenesophobia
உறவினர் மீதான அளவு கடந்த பேரச்சம் உறவினர் வெருளி.
மாமன்மார், அத்தைமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார்,உடன்பிறந்தோர், அம்மான்சேய், மாமனார், மாமியார், மருமகள், நாத்தூண்நங்கை(நாத்தனார்), ஓரகத்தி, மருகர், உடன் மருகர் எனப் பலவகைகளிலும் உள்ள உறவினர்களால் தொல்லை நேரலாம், வீண் செலவிற்கு ஆளாகலாம், வம்பு தும்பில் மாட்டலாம் என்பன போன்ற பெருங்கவலைகளால் பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர். ஒவ்வோர் உறவுமுறைக்கான பேரச்சம் குறித்த வெருளி தனித்தனியே குறிக்கப் பெறுகிறது. இருப்பினும் இங்கே பொதுவாகக் குறிக்கப்பெறுகிறது.
sy என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ‘அதே’. gen என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மரபு வழியினர் அல்லது பரம்பரையினர்.
00
- உறுப்பிழப்பு வெருளி-Apotemnophobia
உடல் உறுப்பு இழப்பு நேரும் என்று அஞ்சுவது உறுப்பிழப்பு வெருளி.
உறுப்பு என்றாலே உடலையும் உடல் உறுப்பையும் குறிக்கும். எனவே உடலுறுப்பு இழப்பு எனச்சொல்வதை விடச்சுருக்கமாக உறுப்பிழப்பு என்றாலே போதும்.
கிரேக்கச்சொல்லான Apo என்பதற்கு அப்பால், தொலைந்துபோ எட்டச்செல், ஒழி எனப் பொருள்கள் உள்ளன. கிரேக்கச்சொல்லான temno என்பதற்கு வெட்டு, அறு, துண்டி, நீக்கு எனப் பல பொருள்கள் உள்ளன. உறுப்புத் துண்டிக்கப்பட்டு எறியும் நிலை என சொற்கள் இணைக்கப்படும் பொழுது பொருள் வருகிறது. துண்டிக்கப்பட்டு எறிவதால் உறுப்பு இழப்பாகின்றது என்றுதானே பொருள்.
00
- உறை வெருளி – Fakelophobia
உறை குறித்த வரம்பற்ற பேரச்சம் உறை வெருளி.
உறைகளில் இழப்பு, நோய்விவரம், வேறு துன்பச்செய்திகள் அடங்கிய குறிப்புகள் அல்லது மடல் இருக்கலாம் எனக் கவலைப்பட்டுப்பேரச்சம் கொள்கின்றனர்.
பணிகளில் உள்ளவர்கள், உறைகளில் பதவிப் பறிப்பு, பணப் பிடித்தம், குற்றச்சாட்டு ஆணை என எதுவும் உறைகளில் இருக்கலாம் என்ற வெருளியும் வருகிறது.
உறை வெருளி என்பது பொதுவாக அஞ்சல் உறைகளையே குறிக்கிறது.எனவே, அஞ்சல் வெருளி (postal phobia) உள்ளவர்களுக்கு உறை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- உறைபனி மழை வெருளி – Pluvifrigophobia
உறைபனி மழை(freezing rain) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உறைபனி மழை வெருளி.
pluvia, frigore, என்னும் இலத்தீன் சொற்களுக்கு உறைபனி, மழை எனப் பொருள்கள்.
மழை வெருளி (Ombrophobia) உள்ளவர்களுக்கு உறைபனி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
Leave a Reply