சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – தொடர்ச்சி)
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23
சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்!
““- – என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.”
புறநானூறு 218 : 5 – 7
பாடியவர்: கண்ணகனார், நத்தத்தனார் எனவும் சொல்வர்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்ததனைக் கண்டு பாடியது.
சான்றோர், சான்றோர் பக்கமே சேர்வர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர்.
இவை பாடலின் இறுதி அடிகள்.
இதன் முந்தைய அடிகள் வருமாறு:
“பொன்னும், துகிரும், முத்தும்,
மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒருவழித் தோன்றியாங்கு”
சொற்பொருள்: மன்னிய – நிலைபெற்ற; காமரு – விரும்பத்தக்க; இடைபட – ஒன்றற்கொன்று இடைநிலம்பட; சாலார் – அறிவொழுக்கமின்மையான் சால்பில்லாதவர். சாலார் பாலர் – சால்பில்லாதவர் பக்கத்தார்.
பொன் நிலத்தடியில் கிடக்கும்; மணி நிலத்தின்மேல் கிடக்கும்; முத்து அதிக ஆழமில்லாத கடலில் கிடக்கும்.
துகிர் என்னும் பவளம் அதிக ஆழமான கடலுக்கடியில் கிடக்கும். என்றாலும் மாலையாகக் கோக்கப்படும்போது ஒன்றாகக் காணப்படும்.
இவ்வாறு ஒவ்வொன்றும் தொலைவிலுள்ள வேறுவேறு இடங்களிலே கிடைப்பன. ஆயினும் அவற்றை ஒன்றாகத் தொடுத்துக் கோவையாக்கும்போது ஓரிடத்திலே அணியாகிச் சிறப்படையும்.
அதுபோலவே சான்றோர், சான்றோர் பக்கமே சேர்ந்து சிறப்பர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர். இதுவே உலகத்து இயல்பு.
“இனம் இனத்தோடு சேரும்” என்பது பழமொழி. எனவேதான், நல்லினத்தார் நல்லினத்தவருடன் சேருகின்றனர். தீயினத்தவர் தீயினத்தவருடன் சேருகின்றனர்.
நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
என்றார் இடைக்கால ஒளவையாரும் மூதுரையில்.
இவைபோல்தான் ஒழுக்கமுள்ளவர்கள் ஒழுக்கமுள்ளவர்கள் பக்கம் சேருகின்றனர். ஒழுக்கமில்லாதவர்கள் ஒழுக்கமில்லாதவர் பக்கம் சேருகின்றனர்.
நாமும் சான்றோராகத் திகழ்ந்து சான்றோர் பக்கம் சேருவோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply