வெருளி நோய்கள் 554-558: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 549-553: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 554-558
554. ஒருக்க வெருளி – Tongyiphobia
ஒருக்கம்(sameness) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒருக்க வெருளி.
நம்மிடம் இருக்கும் ஆடை/நகை/பொருள்போன்ற ஒன்றைப் பிறர் வாங்கித் தருதல், நம்மிடம் இருப்பதுபோன்ற ஒன்றைப் பிறர் அல்லது பிறரிடம் இருப்பதுபோன்ற ஒன்றை நமக்கு வாங்குதல் போன்ற சூழல்களில் காரணமற்ற தேவையற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர். நம் பிள்ளைகள்போல் பிறர் பிள்ளைகளும் படிப்பிலோ விளையாட்டிலோ ஒத்து இருந்தாலும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
ஒருக்கம்(sameness) = ஒரேபடித்தான நிலை/ஒரே தன்மை /ஒத்த தன்மை.
00
555. ஒரே உடை வெருளி – Idemophobia
தொடர்ந்த ஒரே உடையை அணிவது குறித்த அளவுகடந்த பேரச்சம் ஒரே உடை வெருளி.
உடுப்பினை மாற்றாமல் அதே உடையை அணிந்து இருப்பதனால் தேவையற்ற வெறுப்பிற்கும் பேரச்சத்திற்கும் ஆளாகின்றனர். இதனைப் பெண்களுக்கான வெருளியாகக் குறிப்பிடுகின்றனர். பெண்கள் ஆடை அணிந்து அழகு பார்ப்பதில் கூடுதல் கருத்து செலுத்துபவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் ஆண்களும் பெண்கள் தங்களைப்பார்க்க வேண்டும் என்பதற்காக நாளும் பொழுதும் ஆடைமாற்றுவதில் கருத்தாக இருப்பார்கள். உழைப்பாளிகள் இதில் கருத்து செலுத்தாமல் இருக்கலாம். ஆனால், கொண்டாடப்படும் பெயராளிகள்(celebrities) உடைகளிலும் கருத்து செலுத்துபவர்களே! வகைவகையான உடை அணிந்த ஆடவர் இதழ்களின் அட்டைகளில் இடம் பெறுவதும் பல்வேறு விளம்பரத் தோற்றங்களில் இடம் பெறுவதும் இதற்குச் சான்றுகளாகும்.
00
556. ஒலி பெருக்கி வெருளி – Megaphonophobia
ஒலி பெருக்கி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒலி பெருக்கி வெருளி.
வெளியிடங்களில் கூட்டத்தினரிடையே அல்லது தொலைவில் உள்ளவர்களை அழைக்க ஒலியைப் பெரிதாக்கப் பயன்படும் கூம்புவடிவிலான ஏந்துவே ஒலி பெருக்கி. சிலர் அரங்கிற்குள்ளும் ஒலி பெருக்கியைப் பயன்படுத்தும் பொழுது ஒலியை அளவுக்கு மீறி வைப்பதால் கேட்போர் எரிச்சலுறுகிறார்கள். அரசு கூம்பு வடிவ ஒலி பெருக்கிக்குத் தடை விதித்துள்ளது.இருப்பினும் பயன்படுத்துவோர் உள்ளனர்.
ஒலி வெருளி உள்ளவர்களுக்கு ஒலி பெருக்கிவெருளியும் வர வாய்ப்புள்ளது.
00
557. ஒலி வெருளி – Phonophobia/Sonophobia
குரலொலி, உரத்துப் பேசுதல், தொலைபேசி ஒலி, பிற ஒலி முதலியவற்றால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஒலி வெருளி.
தொலைபேசி வந்தபின் தொலைபேசி அச்சமும் ஒலி வெருளியில் அடங்கிவிட்டது.
இரைச்சல் வெருளி(Acousticophobia) போன்றதுதான் இதுவும்.
phōnē என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஒலி என்பதுதான். ஆனால், இப்பொழுது ஒலி வரும் கருவியை நாம் phone என்று கூறுகிறோம்.
00
558. ஒலிப் பதியன் வெருளி – Magnitofonophobia
ஒலிப் பதியன் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிப் பதியன் வெருளி.
ஒலிப்பதியன் பயன்படுத்தும்பொழுது ஒலிஇழை சிக்கிக் கொள்ளும், மீள்பதிவோ கேள்பதிவோ சரியாக வேலைசெய்யாது என்று கருதிக் கவலை கொள்வோர் உள்ளனர். 00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல்
Leave a Reply