வெருளி நோய்கள் 614-618: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 609-613: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 614-618
614. கடை நிலை வெருளி – Omegaphobia
வரிசையில் கடைசியில் இருப்பது குறித்த அளவுகடந்த பேரச்சம் கடை நிலை வெருளி.
கடையில் பொருள் வாங்க அல்லது பயணச்சீட்டு வாங்க அல்லது திரைப்படச் சீட்டு வாங்க அல்லது இதுபோன்ற சூழலில் வரிசையின் கடைசியில் இருப்பதால் தனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் தீர்ந்து கிடைக்காமல் போய்விடும், தனக்கு உரிய வாய்ப்பு வராமல் போய்விடும் என்பன போன்ற கவலைகளுக்கு ஆட்பட்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
Omega என்பது கிரேக்க நெடுங்கணக்கின் கடைசி எழுத்து. எனவே, தொடரின் முடிவு, வளர்ச்சி முடிவு, வரிசை முடிவு முதலியவற்றைக் குறிக்கிறது.
காண்க: கடைசி எழுத்து வெருளி – Zzzzzzphobia/ Zzzzphobia/Zzzzzphobia
ஆங்கில நெடுங்கணக்கில் இசட்டு/Z கடைசி எழுத்து என்பதால் அதைக் குறிப்பிட்டுக் கடைசிநிலை வெருளியை Zzzzphobia/Zzzzzphobia எனக் குறித்துள்ளனர்.
00
615. கடை வளாக வெருளி – Arcadephobia
கடை வளாகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடை வளாக வெருளி.
Arcade என்பது வளைவுகளால் மூடப்பெற்று இரு மருங்கிலும் நடைபாதைகள் உடைய கடைப்பகுதியைக் குறிக்கிறது. எனவே, கடை வளாகம் எனலாம். கேளிக்கைப் பூங்காக்கள் அடுத்தடுத்து அமைந்தாலும் வளாகம்தான். எனினும் இதனைப் பூங்கா வளாகம் எனலாம்.
எந்தக் கடைக்குச் செல்வது அல்லது எந்தக் கடையில் வாங்கலாம், குறைந்த விலையில் தரமானபொருள்கள் கிடைக்குமா? என்பன போன்ற சிந்தனைகளுக்கு உள்ளாகிக் கடை வளாகம் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
616. கடை செல் வெருளி – Officinaphobia
கடைக்குச் செல்வதுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடைசெல் வெருளி.
Officina என்னும் இலத்தீன் சொல் பொருள் கடை எனப் பொருள்.
00
617. கட்சி மாறல் வெருளி – Oviphobia
கட்சிமாறுநர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்சி மாறல் வெருளி.
ovi என்றால் முட்டை ஓடு எனப் பொருள். எனவே, முட்டை வெருளி எனப் பொருள் கொண்டு சிலர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் முட்டை வெருளி (ovophobia) எனத் தனியாக உள்ளது. புதிய வெருளிகளை வரையறுத்துள்ள திம் (Tim Lihoreau) வெற்றி அணியின் பக்கம் தாவுதல் குறித்த அச்சம் (fear of jumping on the bandwagon) என்கிறார். தேர்தலில் கூடப் பெரும்பாலான மக்கள் எந்தக் கட்சி வெற்றி பெறும் எனச் சொல்லப்படுகிறதோ அக்கட்சிக்குத்தான் வாக்களிப்பர். வெற்றி அணி அல்லது புகழணி பக்கம் இருந்து ஒரு வேளை அது தோற்றால் என்ன ஆகும் என்ற அச்சம் வருவதை இவர் குறிப்பிடுகிறார். தேர்தலில் மட்டுமல்ல ஆட்சி அமைக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களில் எந்தப்பக்கம் இருந்தால் ஆதாயம் எனக் கணக்கிட்டுத் தாவும் மக்கள் மன்ற உறுப்பினர்களும் எங்கும் உள்ளனர். அவர்களுக்கும் இந்த வெருளி வரலாம்.
இதனைக் கொடும் அச்சம் (cruel fear) என்கிறார் திம் (Tim Lihoreau). அந்த அளவிற்கு என்ன கொடும் அச்சம் இதனால் வருகிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை தான் சாரும் அணி தோல்வியைத் தழுவி எதிர்காலமே இருண்டுபோகும் என்ற அச்சத்தைத்தான் கொடும் அச்சம் என்கிறார் போலும்.
00
618. கட்டட வெருளி – Subturrophobia
பொது இடங்களில் கட்டடங்கள் திடீரென்று எழும்பியுள்ளதைப் பார்க்கும் பொழுது வரும் அளவுகடந்த பேரச்சம் கட்டட வெருளி
திடீர்க் கட்டட வெருளி என்பதைத்தான் சுருக்கமாகக் கட்டட வெருளி எனலாம்.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது போன்ற செய்திகளை அறிய வருவோர் கட்டடம் தொடர்பிலான அச்சத்திற்கு ஆளாகின்றனர்
இலத்தீனில் subito என்றால் திடீர் என்றும் turris என்றால் கோபுரம் என்றும் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply