வெருளி நோய்கள் 619-623: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 614-618: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 619-623
619. கட்டாய மகிழ்ச்சி வெருளி – Sunsmilerophobia
கட்டாயப்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கச் செய்வது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டாய மகிழ்ச்சி வெருளி.
காண்க மகிழ்ச்சி வெருளி-Hedonophobia/Laetophobia
00
620. கட்டணப் பேசி வெருளி – Payphonophobia
கட்டணத் தொலைபேசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டணப் பேசி வெருளி.
கட்டணப்பேசியில் பேசும் பொழுது கால வரம்பு முடியும் பொழுதெல்லாம் மேற்கொண்டு பேச நாணயத்தைச் செலுத்த வேண்டும் சில நேரங்களில் நாணயத்தைச் செலுத்தியபின் பேசவும் இயலாது, செலுத்திய நாணயம் திரும்பி வராது போன்ற இடர்ப்பாடுகளால் கட்டணத்தொலைபேசி குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர்.
அலைபேசிகள் பெருகியுள்ள இக்காலத்தில் கட்டணப்பேசியின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது.
00
621. கட்டுகுழிக் குழாய் வெருளி – Pumppuphobia
கட்டுகுழிக் குழாய்(sump pump) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டுகுழிக் குழாய் வெருளி.
கட்டுதொட்டி, நிலத்தடித் தொட்டி, கழிநீர் தொட்டி என்றும் அழைக்கப்பெறும் கட்டுகுழியில் இருந்து குழாய் மூலமாகப் பூச்சிகள் வீட்டிற்குள் வந்துவிடும் என்பதுபோன்ற சூழல்களால் பேரச்சம் கொள்கின்றனர்.
00
622. கட்டுமானர் வெருளி – Aedificatorphobia
கட்டடங்கள் கட்டித் தருநர் மீதான காரணமற்ற வரம்பற்ற பேரச்சம் கட்டுமானர் வெருளி.
பொதுவாக வீடுகள் அல்லது கட்டடங்கள் என்றாலே அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் அடுக்கு மாடிக் கட்டடங்களாகவும் மாறிப் போய்விட்டது. இவ்வெருளி பொதுவாக அடுக்குமாடிக் கட்டுமானர்கள் மீதே ஏற்படுகிறது. பணிக்குறைபாடு, வசதிக் குறைபாடு, தரமான பொருள்களைத்தான் பயன்படுத்தினார்களா என்ற பேரச்சம், போன்ற பல காரணங்களை உருவாக்கிக் கொண்டு பேரச்சம் கொள்கின்றனர்.
aedificator என்னும் இலத்தீன் சொல்லிற்குக் கட்டுமானர்(builder) எனப் பொருள்.
கட்டடம் கட்டுபவர்களைக் கட்டடம் கட்டுநர், கட்டடம் உருவாக்குநர், (இப்போதைய வழக்கில் கட்டடங்கள் கட்டி விற்பவர்களைக்) கட்டட மேம்பாட்டாளர்(Building Promoter) என்றெல்லாம் சொல்கின்றனர். வீடு கட்டும் பணி கட்டுமானம். எனவே, கட்டுமானப்பணி ஆற்றுநர் > கட்டுமானர் என்று குறித்துள்ளேன். கட்டுநர் என்றால் Binder என்றாகும்.
00
623. கட்டுப்படுத்தல் வெருளி – Archephobia
கட்டுப்படுத்தல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்டுப்படுத்தல் வெருளி.
வணிகத்தில் பெரு முதலாளிகள் சிறு முதலாளிகளையும் அரசியலில் பெரிய கட்சித் தலைவர்கள் சிறிய கட்சித் தலைவர்களையும் தலைமைக்கு வேண்டியவர்கள் பிறரையும் மத்திய அரசு மாநில அரசுகளையும் கட்டுப்படுத்துவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply