வெருளி நோய்கள் 659-663: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 654-658: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 659-663
- கரப்பான் வெருளி – Katsaridaphobia
கரப்பான்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கரப்பான் வெருளி.
கரப்பான் பூச்சி பறந்து மேலே விழும், உணவில் விழும், நோய் பரப்பும் என்பன போன்ற அருவருப்பும் கவலையும் அச்சமும் கரப்பான் பூச்சி வெருளிக்குக் காரணமாக அமைகின்றன.
கரப்பான் குருதி வெண்ணிறமாக இருக்கும். இதனை இரத்தமாக எண்ணாமல் அடிபட்டிருக்கும் கரப்பானைக் கண்டு அருவருப்பு அடைவர். கரப்பான் பூச்சி உடல் பலபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக் கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன.ஆதலால், இதன் தலையை வெட்டிவிட்டால் கூட இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். எனவே, அடித்தாலும் சாகாது என எண்ணி இதனைக் கண்டு மேலும் அஞ்சுவர்.
00
- கராஅம் வெருளி – Aligatoraphobia
கராஅம் (முதலைகள்) மீதான அளவுகடந்த பேரச்சம் கராஅம் வெருளி. விலங்கு வெருளி வகையைச் சேர்ந்ததே இதுவும்.
Crocodile, Alligator இரண்டையும் நாம் முதலை என்றே சொல்கிறோம். பொருள் அடிப்படையில் இரண்டும் சரிதான். பல்லி என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது குரோகடைல். பல்லி என்னும் பொருளுடைய இசுபானியச் சொல்லில் இருந்து உருவானது அலிகேட்டர். மூலப் பொருள் ஒன்றாயினும் வெவ்வேறு வகையைக் குறிப்பதால் நாமும் அவ்வாறே குறிப்பதே சிறப்பு. முதலை, இடங்கர், கராம் என முதலைகளின் வெவ்வேறு வகைகள் பழந்தமிழகத்தினர் அறிந்திருந்தனர். குறிஞ்சிப்பாட்டில் ஒரே வரியிலேயே(257)
கொடுந் தாள் முதலையும், இடங்கரும், கராமும்
என வருவதால் இவை முதலையின் வேறு பெயர்கள் என எண்ணாமல், வேறுவகைப் பெயர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். முதலை(10), கராஅம்(4), கராம்(20), கரா(1), எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன போல், மகரம், ஆட்பிடியன், சாணாக முதலை முதலான வேறு வகைகள் இருந்தன எனப் பின்னுள்ள இலக்கியங்கள் வழி அறிகின்றோம். விலங்கு வகைகளை நன்குணர்ந்த அறிவியலுக்கு உரிய நாம் ஒரே பெயரில் அழைப்பதை விடப் பின்வருமாறு வேறுபடுத்திக் குறிப்பிடலாம்.
இடங்கர்-crocodile
கராஅம்-alligator
முதலை-gavial (பாவாணர்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்: பக்கம் 43).
00 - கரி வெருளி – Karvounophobia
கட்டைக் கரி/விறகுக் கரி/மரக்கரி/கரி(charcoal)/ நிலக்கரி/ பழுப்புக்கரி மீதான அளவு கடந்த பேரச்சம் கரி வெருளி.
கரித்தூசி உடலில் அல்லது உடையில் ஒட்டிக் கொண்டு படிந்து விடும் என்றும் கரித்தூள் மூச்சு உயிர்க்கையில் உடல் நலக்கேடு ஏற்படும் என்றும் கரிப்புகை கண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றம் பலவாறாகக் கவலைப்பட்டுக் கரி மீதான பேரச்சத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.
Karvouno என்னும் கிரேக்கச் சொல்லிற்கு நிலக் கரி எனப் பொருள்.
00 - கரிக்கோல் வெருளி – Molyviphobia / Pencillophobia
கரிக்கோல்(Pencil) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கரிக்கோல் வெருளி.
Pencil என்பதை எழுதுகோல் என்றும் சொல்வர். ஆனால் அது பொதுச் சொல்லாக இருப்பதால் கரிக்கோல் எனக் குறிக்கப் பெற்றுள்ளது.
00
663. கரிசு வெருளி -Hamartophobia/ Peccatiphobia/ Peccatophobia
பாவச்செயல்கள் செய்வதற்கு அஞ்சுவது கரிசு வெருளி.
கரிசு என்றால் பாவம் என்று பொருள்.
பாவம் செய்தது அல்லது செய்வது தொடர்பான, அதன் விளைவுகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கொள்ளுதல்.
தீவினை செய்வதற்கு அச்சம் இருப்பதுதான் நற்செயல்கள் செய்வதற்குத் தூண்டுதலாக அமையும். எனவே, இந்த அச்சம் தவறல்ல. ஆனால், எல்லாச் செயல்கைளயும் கரிசாகக் கருதி இயல்புக்கு மீறிய அச்சம் தவறாகும். இதனால் கரிசிற்குக் கழுவாய் செய்வதாக – பாவவிமோசனம் செய்வதாகச் சிலர் ஏமாற்றுவதற்கு ஆளாகின்றனர்.
pecca என்னும் இலத்தீன் சொல்லிற்குக் கரிசு, குற்றம் செய்தல்/ கற்பனைக் குற்றம் எனப் பொருள்கள்.
hamarto என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் பாவம் எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply