(வெருளி நோய்கள் 714 -718 : தொடர்ச்சி)

கற்பழிப்பிற்கு ஆளாக நேரிடும் என்ற அளவுகடந்த பேரச்சம் கன்னிமை வெருளி.

கற்பழிப்பு வெருளி, கற்பிழப்பு வெருளி, கன்னியமை யழிப்பு வெருளி, கன்னிமை வெருளி என நால்வகையாகக் குறிப்பிட்டாலும் பொருள் ஒன்றுதான். எனவே சேர்த்தே தரப்பட்டுள்ளது.

தனியாகவோ, கூட்டாகவோ கற்பழிக்கப்படுவோம் என்ற பேரச்சத்திற்கு ஆளாகி இரவில் வெளியே செல்வதைத் தவிர்ப்பர். இது போன்ற செய்திகளைப் படிப்பதாலும் பார்ப்பதாலும் அறிந்தவர்க்கு இத்துன்பம் நேர்ந்துள்ளதை அறிய வருவதாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.

வாடகை ஊர்தியில் செல்லும் பொழுது, தனியே பேருந்திற்குக் காத்திருக்கும் பொழுது, தொடர்வண்டி நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது எனப் பல சூழல்களிலும் கயவர்களாலும் ஒருதலைக்காதலால் கேடுறு மனத்தினராலும் நிருபயா போன்றவர்களுக்கு நேர்ந்த கதி தனக்கும் ஏற்படும் என்று மிகையான பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.

00

கற்பித உயிரி(cryptid)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கற்பித உயிரி வெருளி.

(கற்பித உயிரி  – ஆதாரமற்ற வாழ்வுயிரி ) 

சில வகை அச்சுறுத்தும் உயிரிகள் வாழ்வதாகவும் அவற்றைப் பார்த்ததாகவும் அவற்றால் துன்பங்கள் நேரும் என்றும் கற்பித்துக் கொண்டு சொல்வோர் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவற்றைக் கேட்டு நம்புபவர்களுக்கும்   பேரச்சம் வருகிறது.

00

கற்றல் குறித்த வரம்பற்ற பேரச்சம் கற்றல் வெருளி.

Sophia என்னும் கிரேக்கச் சொல்லுக்கு அறிவு எனப் பொருள். இங்கே அறிவைப் பெறுவதற்கான கற்றலைக் குறிக்கிறது.

00

கனமாழை இசை(Heavy Metal music) குறித்த வரம்பற்ற பேரச்சம் கனமாழை இசை வெருளி.

கனமாழை இசைகேட்பவர்களுக்குச் சினமும் மனஅழுத்தமும் வருகிறது எனக் கேள்விப்பட்டு இவ்விசை குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.

00

(தொடரும்)