வெருளி நோய்கள் 724-728: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 723: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 724-728
- கன்சாசு வெருளி – Kansasphobia
கன்சாசு(Kansas)மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கன்சாசு வெருளி.
கன்சாசு(Kansas)மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் 34 ஆவது மாநிலமாக 1861 இல் இணைந்தது. இதன் தலைநகரம் தொபெக்கா(Topeka).
கான்சாசு மாநிலம் தொடர்பான பொருள்கள், கொடி,முத்திரை, வணிகம், தொழில், பண்பாடு, நாகரிகம் முதலானவைமீதான வரம்பு கடந்த பேரச்சம் கொள்வோர் இவ்வெருளிக்கு ஆளாகின்றனர்.
00 - கன்னபாகு வெருளி – Calamusphobia
கன்னல்பாகு(caramel) குறித்த வரம்பற்ற பேரச்சம் கன்னல்பாகு வெருளி.
கேரமல் என்னும் ஆங்கிலச்சொல் பிரஞ்சுச் சொல்லான கேரமலிலிருந்தும், பிரெஞ்சுச் சொல் இசுபானியச் சொல்லான caramelo (18 ஆம் நூற்றாண்டு)விலிருந்தும், இசுபானியச் சொல் போர்த்துகீசியச் சொல்லான “caramel-கரமலிலிருந்தும்” உருவாகியிருக்கலாம் என்கின்றனர். கரும்பைக் குறிக்கும் calamellus என்னும் பிற்கால இலத்தீன் சொல்லில் இருந்து இஃது உருவாகியிருக்கலாம். இடைக்கால இலத்தீனில் கன்ன என்றால் கரும்பு மெல்லா என்றால் தேன் எனப்பொருள். இரண்டும் இணைந்த கன்னமெல்லா வந்திருக்கலாம் என்கின்றனர். நிறமூட்டியாகவும் சுவைக்காகவும் உணவுப் பண்டத்தின்மீது ஊற்றிப் பயன்படுத்துகின்றனர். இதனைக் கன்னல் பாகு எனலாம்.
00 - கன்னியர் வெருளி-Parthenophobia
பெண்கள், குறிப்பாகக் கன்னிப்பெண்கள்பற்றிய தேவையற்ற வெறுப்பும் அச்சமும் கன்னியர் வெருளி.
மண வாழ்க்கையில் நாட்டமில்லாதவர்களும் பெண்களை நல்வாழ்க்கைக்கு எதிரானவர்கள் எனத் தவறாக எண்ணுபவர்களும் இவ்வெருளிக்கு ஆட்படுகின்றனர். பெண்ணுறுப்பு தொடர்பான வெருளியர்க்கும் இவ்வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
partheno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கன்னிமை, இளம் பெண், கன்னி.
00 - கன்னெய் வெருளி – Benziphobia
கன்னெய்(gasoline/ petrol) பற்றிய அளவு கடந்த பேரச்சம் கன்னெய் வெருளி.
கல்+நெய் = கன்னெய்.
கன்னெய்யில் எரிநறா(எத்தனால்) அல்லது வேறு எதுவும் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தாலும் கன்னெய்மீது பேரச்சம் வருவதுண்டு. வளி நிலைய வெருளி(Aerostatiophobia) உள்ளவர்களுக்கும் கன்னெய் வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00
- காணுகை வெருளி – Ocuviaphobia
பிறரால் பார்க்கப்படுவது அல்லது காணப்படுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காணுகை வெருளி
பணியிடத்தில் அல்லது பொதுவிடத்தில் பிறர் தன்னையே பார்ப்பதுபோன்ற எண்ணத்தால் ஏற்படும் அளவு கடந்த பேரச்சமாகும்.
அழகாக இருப்பதால் பார்ப்பதாகவும் எண்ணலாம். அழகில்லை என்பதால் கேலியாகப் பார்க்கிறார்கள் எனவும் கருதலாம்.
ocu என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கண். ocuvia கண்ணால் காண்பதைக் குறிக்கிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply