இலக்கியம்நூல் அறிமுகம் நவம்பர் 17, 2025 தாய் / thaaii.com


பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வித்துவான் இலக்குவனாராகத் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது 1939இல் எழுதி 1940 இல் வெளியிட்ட நூல் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’.

இலக்குவனார் பள்ளி மாணாக்கராக இருந்த பொழுதே கவிஞர், சொற்பொழிவாளர், மொழி பெயர்ப்பாளர் என விளங்கினார்.

புலவர் மாணாக்கராக இருந்த பொழுது கட்டுரையாளர், நூலாசிரியர், தனித் தமிழ்ப்பரப்புநர், தமிழாசிரியர் எனத் திகழ்ந்தார்.

இதனால், இந்நூலை எழுதுவதற்குரிய முழுத்தகுதியாளராகத் திகழ்ந்தார். பலர் பெயரளவிற்குப் பக்கங்களை நிரப்பி ஏனோதானோ என்று எழுதிவிடுகின்றனர்.

இந்நூல் குறித்த அறிஞர்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

நன்னிலம் கழக மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் எசு. ஆராவமுது (ஐயங்கார்), இந்நூல் குறித்து அறிமுக உரையில்,

தாய்மொழியின் வளர்ச்சிக்கு ஊக்கத்தை வழங்க வேண்டிய தேவையைத் தமிழர்களுக்கு எடுத்துரைக்கவும், உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ்க் கற்பித்தலை எவ்வாறு பயனுள்ளதாகவும், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் செய்யலாம் எனத் திட்டமிடுவதிலும், சில வழிமுறைகளை வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நூலில், தமிழ்நாட்டுக் கல்வியின் துயரங்களையும் தமிழாசிரியர்களின் அவலங்களையும் நடுநிலையுடன் எடுத்துரைத்துள்ளார்.

எனவே, குடவாசல் கழக மேல் நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பி. சுவாமிநாதன் மதிப்புரையில், “இந்நூல் மூல நூலாகவும், படிக்கச் சுவையானதாகவும் இருந்தது. அதில் ஒரு சிறப்பு என்னவென்றால், ஆசிரியர் மிகவும் துணிவாகத் தற்காலத் தமிழ் வகுப்புகளின் அவல நிலையை வெளிப்படையாக எழுதியிருந்ததுதான்.

ஆனால் இந்த நூல், தமிழின்மீது தணியாத காதல் கொண்ட ஒரு தமிழாசிரியரால் எழுதப்பட்டது என்பதாலேயே, அவர் கூறிய பரிந்துரைகள் நடைமுறையில் ஆழ்ந்து சிந்திக்கப்பெற்றவை என்றும், அவை மிகச்சிறந்த பயனளிக்கக் கூடியவை என்றும் நம்பலாம்” என இலக்குவனாரின் துணிவைச் சுட்டுகிறார்.

“இந்நூற் பயிற்சியால் ஆசிரியராவார்க்குத் தகுதி மேம்பாடும், உள்ளக் கிளர்ச்சியும், மாணவர்களது நன்மதிப்பும், தேர்ச்சி நலனும் பெருகும் நிலை எய்தும்.

நூலிற் கூறப்படும் பொருள்களை ஒழுங்குப்படுத்தி, ஏற்ற அளவு விரித்து விளக்கி, அழகு பெற முடித்துக் காட்டியிருக்கும் திறமை இந்நூலாசிரியது இளமை தொட்டுளதாய நுண்மாண்புலச் சிறப்பினை நன்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றது.”

– என அரசர் கல்லூரி (திருவையாறு), தமிழ்ப் பேராசிரியர் வேங்கடாசலம் (பிள்ளை) இந்நூல் குறித்து அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ்க் கற்பிக்கும் முறை’யெனும் இந்நூலைப் பார்வையிடும் பேறு பெற்ற யான் இதன்கண் அமைந்துள்ள முதுமொழி, தமிழின் புதுநிலை முதலாகத் தாய்மொழி தோய்ந்த தனித்திட்டம் ஈறாகவுள்ள பொதுவியல்பு விளக்கங்களையும், செய்யுளும் உரைநடையும் இலக்கணமும் கட்டுரையும் மொழிபெயர்ப்புமாகிய மொழிப்பயிற்சிக் கூறுகளின் சிறப்பியல்பு விளக்கங்களையும் ஊடூடே பொதியப்பட்டுள்ள பொருணயம் சொன்னயங்களையும் ஒருவாறு ஆய்ந்துணர்ந்தேன்.

இலக்குவனார் இத்துறையைத் துருவியாய்ந்து கண்ட கருத்துகளைத் திரட்டி, உணர்வு துள்ளும் உரைநடையிலே உதவியுள்ள இச்சிறுநூலை நமது வித்துவான் இனத்தவரும் அவர் புறத்திருந்து தமிழ்க் கற்பிக்கும் பொறுப்பேற்ற பிற ஆசிரியரும் மனமுவந்தேற்றுப் பயன்படுத்திக் கொள்வார்களாக!“

– என மதுரை மாநாட்டாண்மைக் கழகக்கல்விப் பணியாளன் – மதுரை மாவட்டக்கல்வி அலுவலர் – க. சம்பந்தன், நூலுரையில் பாராட்டியுள்ளார்.

தமிழாக்கம் கருதுவோர் நினைவில் வைத்துப் போற்றுதற்குரிய செயல்கள் பல இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன.

தமிழ்க் கற்போர், தமிழ்க் கற்பிப்போர் ஆகிய இருதிறத்தினரின் பெற்றிமைகள், ஈதல் முறை, கட்டுரை இயற்றல், சொற்பொழிவாற்றல் பாடநூல் இயற்றல், இன்னோரன்ன செய்திகள் செவ்விதின் ஆய்ந்து தெளிக்கப் பெற்றுள்ளன.

இந்நூலாசிரியர் வித்துவான் சி. இலக்குவன் நுண்ணறிவும், தமிழ்ப் புலமையும் நிரம்பிய பெற்றியர். தமிழ்க் கல்வியை உளமாரப் போற்றுபவர்; அதன் வளர்ச்சியில் கருத்தூன்றி இடையறாத் தமிழ்ப் பணியில் தலைநிற்பவர்.

தாம் ஆற்றி வரும் ஆசிரியத்துறையில் காணும் இடர்ப்பாடுகளைக் களையும் நோக்குடன் ஆழ்ந்து சிந்தித்து, இயற்றிய நூலாகும் இக்கட்டுரை தமிழார்வம் மிக்கு வளரும் இற்றைநாளில் வித்துவான் இலக்குவனார் இயற்றி உதவிய இந்நூல், புது எண்ணங்களைத் தோற்றுவிப்பதற்குரிய கருவியாகும். தமிழுலகம் இதனை ஆதரித்துப் போற்றுமென எண்ணுகின்றேன்“

– என நூன்முகத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் சிறப்பாக விவரித்துள்ளார்.

இரண்டாம் பதிப்பின் அணிந்துரையில், தமிழாய்வின் விடிவெள்ளி பேரா. முனைவர். ப. மருதநாயகம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

“இலக்குவனார் இளமையில் கண்ட கனவுகளையும், தீட்டிய திட்டங்களையும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்தபோதே அவர் எழுதிய, ‘தமிழ்க் கற்பிக்கும் எனும் நூல் நமக்கு முறையாகத் தெரிவிக்கிறது.

அவர் இறுதிவரையிலும் தடம் புரளாமல், பதவிக்காகவோ, பணத்திற்காகவோ, தம் கொள்கையெதனையும் மாற்றிக் கொள்ளாமல் தளராது போரிட்டார் என்பதை இந்நூலிலிருந்து அறிந்து மகிழ்கிறோம்.

புது எண்ணங்களைத் தோற்றுவிப்பதற்குரிய கருவியாக இந்நூல் செயல்பட்டுள்ளதை இதன் உட்தலைப்புகள் புலப்படுத்தும்.”

தமிழாசிரியர்கள் மொழியை மட்டும் கற்பிக்காமல் மொழிப்பற்றையும் நாட்டுப் பற்றையும் ஊட்டும் வகையில் வகுப்பெடுக்க வேண்டும் என்கிறார்.

“நம் நாடோ அடிமை நாடு; நாமோ அடிமைகள்; நம் மொழியோ அடிமை மொழி; மாணவர்களோ அடிமை நிலையிற்றோன்றியவர்கள்; பழம் பெருமையையுணரார்; உணரின் தாழ்வுற்றிருப்பதையுன்னி வீறுகொண்டெழுவர்.

இலக்குவனாரைப் போல் தமிழாசிரியர்களும் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் தன்மதிப்புணர்வையும் ஊட்டுவார்களாக.

இவ்வாறு சிறப்பாகப் பாராட்டப்பெறும் தமிழ்க் கற்பிக்கும் முறை நூல் குறித்து நாமும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.பொது, 2. சிறப்பு, 3 நூல் நிலையம், 4. மாணவர் கழகம், 5. தமிழிற் கற்பித்தல், 6. நன்னெறி வகுப்பு, 7. தமிழ்ப் பாடப் புத்தகங்கள், 8. தமிழ்க் கல்வித் திட்டம் என 8 தலைப்புகளில் கற்பிக்கும் முறையை எளிதில் உணரும் வகையில் இலக்குவனார் இந்நூலைப் பகுத்து எழுதியுள்ளார்.

இவற்றுள் ‘பொது’த் தலைப்பில் ஆசிரியர்கள், வகுப்பில் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து அறிவுறுத்தியுள்ளார்.

‘சிறப்பு’ என்னும் தலைப்பில், செய்யுள் கற்பிக்கும் முறையையும் உரைநடைப் பாடத்தை நடத்தும் முறை குறி்த்தும் தமிழாசிரியர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் விளக்கியுள்ளார்.

தமிழாசிரியர்களாயிருப்போர் பிறமொழிகளில் ஒன்றைப் பேணிப் பயிலுதல் தவிர்க்கலாகாக் கடனாகும் என வலியுறுத்துகிறார்.

பண்டைத் தமிழ்நாட்டில் ஆசிரியர் என்றால் தமிழாசிரியர்தாம். அவரே தாம் அறிவியல் முதலானபிற உலகியற் பொருள்களையும் கற்பித்தனர்.

ஆதலின் தமிழாசிரியர்கள் பிற துறைகளையும் அறிந்தவராக இருத்தல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக, யாவரும் கசப்பாகக் கருதும் இலக்கணத்தை அவ்வாறு அல்ல என ‘இலக்கண’த் தலைப்பில் விளக்கியுள்ளார்.

நான்காவதாகக் ‘கட்டுரை’ என்னும் தலைப்பில், கட்டுரைக்குரிய பொருள்கள், கடிதம் எழுதுதல், திருத்தம், குறியீடுகள் அடுத்து ஐந்தாவதாக மொழிபெயர்ப்பு குறித்து விளக்குகிறார்.

எவ்வாறு மொழி பெயர்ப்பு அமைய வேண்டும் என்றும் மாணாக்கர்களுக்கு எவ்வாறு இதில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.

சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்கலாகாது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பின் வருமாறு விளக்குகிறார்.

“ஆங்கிலத்தினின்றும் தமிழிற் பெயர்த்தல் என்றால் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்தலன்று. அவ்விதம் மொழி பெயர்க்கவும் இயலாது. ஆங்கில நாட்டுப் பழக்க வழக்கம் நாகரிகம், தட்பவெப்பம் சுற்றுச் சார்பு, மொழியின் தொடர் அமைப்பு முதலியன தமிழ்நாட்டுப் பழக்க வழக்கம் முதலியவற்றோடு பல்லாற்றானும் மாறபாடுடையன.

ஆங்கிலப் பெரியாரான இஞ்சு என்பவர், ‘gentleman’ என்ற ஆங்கிலச்சொற்குத் தகுதியான சொல் வேறு எம்மொழியிலும் காண முடியாது என்கின்றார்.
அவ்வாறே சான்றாண்மை என்ற தமிழ்ச் சொற்கேற்ற சொல் ஆங்கிலத்திலும் வேறு எம்மொழியிலும் காண முடியாதென்று தமிழ்ப் பெரியார் ஒருவர் கூறக் கேட்டிருக்கின்றோம்.
இக்கூற்றுகள் ஆங்கிலத்திலுள்ளவற்றைத் தமிழிலும் தமிழிலுள்ளவற்றை ஆங்கிலத்திலும் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்க முடியாதென்பதை வலியுறுத்துகின்றன.

ஆதலின் ஆங்கிலத்திலுள்ள வற்றைத் தமிழிற் பெயர்க்கப் புகுங்கால், ஒவ்வோர் ஆங்கிலச் சொல்லுக்கும் சரியான ஒவ்வொரு தமிழ்ச் சொல்லை நாடிப் பொருள் கூற முற்படலாகாது என்பதை மாணவர்கள் உளத்தில் பதியச் செய்தல்வேண்டும்.

இலக்குவனார் தாம் படித்த காலத்தில் நூலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் படித்துச் சிறப்பாக முன்னேறியவர். எனவே, அடுத்து நூல் நிலையம் குறித்துச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

“நூல் நிலையத்தில் பண்டை நூல் தொடங்கி இற்றை நாள் நூல் வரையில் மாணவர்கட்கேற்ற எல்லா வகையான நூல்களும் நிறைந்திருத்தல் வேண்டும். மாணவர்கட்கேற்ற முறையில் வெளியாகும் ஒவ்வொரு நூலும் கல்விக்கூட நூல் நிலையத்தில் இடம்பெறுதல் வேண்டும்.

தமிழாசிரியர்கள், தக்க முறையில் நூல் நிலையப் புத்தகங்களைப் பயன்படுத்தச் செய்து, தமிழ் நூற்களைப் படிப்பதில் தணியாத ஆர்வத்தை உண்டாக்கித் தமிழ்க் கல்வியைப் பெருக்குவார்களாக!” என வேண்டுகிறார்.

கல்வியென்றால் தாய்மொழிக் கல்வியைத்தான் குறிக்குமென்றாலும், இத்தமிழ்நாட்டில் வேற்றுமொழியை விரும்பி விரைந்து கற்கின்ற நிலைமை ஏற்பட்டு விட்டமையின், தாய்மொழிக் கல்வியெனத் தனிப்பெயரிட்டு அதன் இன்றியமையாமையை விளக்க வேண்டியுள்ளது என வருந்துகிறார்.

பள்ளி மாணாக்கனாக இருக்கும் பொழுதே வரவேற்புரை, வழியனுப்புரை, நன்றியுரை, சொற்பொழிவு, கவிதை உரைத்தல் எனப் பலவகையிலும் தம் ஆற்றலைப் பெருக்கிய சிறப்பிற்குரியவர் இலக்குவனார்.

எனவே, மாணவர் கழகத்தின் பயனை நன்கறிந்தவர் என்ற முறையில் அதனை நன்கு வலியுறுத்தியுள்ளார்.

மாணவர் கழகம் குறித்துப் பின்வரும் வகையில் இலக்குவனார் வலியுறுத்துகிறார்.

“மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புலவர்கள் மன்னர்கள் முதலியோர் நட்களைக் கொண்டாடச் செய்து,

தமிழ்நாட்டுப் பெரியார்களிடத்தும் தமிழ் நூல்களிடத்தும் பற்றுதல் கொள்ளுமாறு செய்து, தாமும் தமிழ்ப் பெரியார்களாக வேண்டுமென்ற ஆர்வத்தை மாணவர்க்கு ஊட்டுதல் வேண்டும். இன்னும் ஒல்லும் வகைகளிலெல்லாம், மாணவர் கழகத்தைப் பயன்படுத்தி மாணவர்க்குத் தமிழ்க்கல்வியைத் தமிழாசிரியர்கள் அளிப்பார்களாக!”

‘தமிழிற் கற்பித்தல்’ என்னும் அடுத்த கட்டுரையில் தமிழ்மொழி மட்டுமல்லாமல் எல்லாப் பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்கிறார்.

“பிற பொருட்பாடங்கள் திருந்திய தமிழ் நடையில் எழுதப்பெற்று, தமிழ்ப் புலமையுற்றோரால் கற்பிக்கப்படுமாயின், மாணவர்கள் பாடங்களை எளிதாக அறிந்துகொள்வர். பிறமொழி வகுப்பு நீங்கிய ஏனைய வகுப்புக்களிலெல்லாம், உரைப்பதும் உற்றுக்கேட்பதும் திருந்திய தமிழாயிருத்தலின், தமிழிலும் விரைவில் நற்பயிற்சியுறுவர். தமிழைக் கற்பதிலும் ஆர்வங்கொள்வர். தமிழ்மொழியும் திருந்திய முறையில் வளர்ச்சியுறும்; தமிழாசிரியர் தமிழைக் கற்பிப்பதில் இடர்காணார்.”

சில ஆங்கிலப் பெரியார்கள் போன்று வாழ்க்கையின் எத்துறையிலும் நன்னெறியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று எண்ணுவது போல், எல்லா வகுப்புகளிலும் நன்னெறியைக் கற்பிக்க வேண்டுமேயன்றித் தனியாகக் கற்பிக்கக் கூடாதென்று இலக்குவனார் ‘நன்னெறி வகுப்பு’ என்னும் ஆறாவது தலைப்புக் கட்டுரையில் தெரிவிக்கிறார்.

நன்னெறி வகுப்பை இலக்கிய வகுப்பென மாற்றித் தமிழிலக்கியச் சிறப்பை எடுத்துக் கூறும்படி செய்வார்களாக!

தமிழிலக்கியங்களே நன்னெறியைப் பல்லாற்றானும் விரித்துக் கூறுபவையாய் இருக்கின்றமையின், நன்னெறியையும் மாணவர்கள் அறிந்து போற்றி ஒழுகுவதற்கும் வழியுண்டாகும் என்கிறார்.

நம் கல்வித் திட்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும்.

முதற்பகுதி: ஏழாண்டுகள் தமிழ்க் கல்வியையே கற்பித்தல் வேண்டும்.

இரண்டாம் பகுதி: இப்பகுதியை மூன்று பிரிவுகளாகச் செய்தல் வேண்டும்.

  1. தமிழ்ப் புலமை பெறுதல் 2. ஆங்கிலப் புலமை அடைதல் 3. தொழில் வல்லுநராதல்.

எனக் கல்வித் திட்டத்தை வகுத்துத் தருகிறார்.

நிறைவாகச் சேர்க்கையாக மாணவர்கள் பிழைபட எழுதும் சொற்களிற் சிலவும், அவற்றின் திருத்தமும் அளித்துள்ளார்.

ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள், ளகர ழகரச் சொற்களின் வேறுபாடுகள் ஆகியனவும் இப்பகுதியில் இடம் பெறுகின்றன.

இவை ஆசிரியர்களுக்கே பேருதவிய என்னும் பொழுது படிக்கும் அனைவருக்குமே பயன் தரும் எனலாம்.

தமிழைத் திருத்தமாக எழுதவும் பேசவும விழைபவர்கள் தமிழறிஞர் இலக்குவனாரின் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’ நூலைப் படித்துப் பயனடைவார்களாக!