தொல்காப்பியமும் பாணினியமும் – 11 : முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்– இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும்
11
முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றும் தொல்காப்பியர்
“தொல்காப்பிய மொத்த நூற்பாக்கள் 1571 ஆகின்றன. இவற்றுள் எழுத்து அதிகாரத்தில் 57, சொல் அதிகாரத்தில் 72, பொருள் அதிகாரத்தில் 158, ஆக மொத்தம் 287 நூற்பாக்கள் தொல்காப்பியருக்கு முன் உள்ளவர்களின் கருத்தை மேற்கோளாகக் குறிப்பிடுவனவாகும்.” என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார்(தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம் 15). இதனையே வரலாற்று நூலாகவும் கருத வேண்டும் என அவர் வலியுறுத்தும் இடத்திலும் பின்வரும் வகையிலும் அவர் விளக்குகிறார்:
“தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை. வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் ‘என்மனார்’ ‘என்ப’ ‘என்றிசினோர்‘ எனத் தம் முன்னவர்களைப் பற்றி 287 இடங்களில் குறிப்பிடுகின்றார். இத்தகைய மேற்கோள்களால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிலவிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய நிலைமை குறித்து அறிதற்கு இயலுகிறது. எனவே தொல்காப்பியத்தை விளக்க உரை நூலாக மட்டும் கருதாமல் வரலாற்று நூலாகவும் கருத வேண்டும்.” பேராசிரியர் சி. இலக்குவனார் (தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: பக்கம்-20)
தொல்காப்பியர் முன்னோரைச் சுட்டும் வகைகள்
தொல்காப்பியச் சூத்திரங்களுள் ஏறத்தாழ இருநூற்று அறுபது இடங்களில் தொல்காப்பியர், தமக்கு முன்பு இருந்தவரும் தம் காலத்தவருமான இலக்கண ஆசிரியர் பலரைப் பலபடியாகக் குறிப்பிட்டுள்ளார். (முனைவர் மா. இராசமாணிக்கனார், தமிழ் மொழி-இலக்கிய வரலாறு)
(1) ‘என்ப’- ‘மொழிப’ என்னும் முறைமை தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 147 இடங்களில் வந்துள்ளன.
(2) ‘என்மனார் புலவர்’ என்பது சுமார் 88 இடங்களில் வந்துள்ளது.
(3) ‘வரையார்’ என்பது 15 இடங்களில் வந்துள்ளது.
(4) பிற சிறப்புடன் வந்துள்ள தொடர்கள் ஏறத்தாழ முப்பதாகும்.
(குறிப்பு; அப்படியானால் 250+30=280 ஆகிறது.)
இத்தொடர்கள் தாம் சுவையுடையவை. ஆதலின், அவற்றை அதிகார முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக இங்குக் காண்போம்:
எழுத்ததிகாரத்தில்
- நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே-நூற்பா 7.
- ஒத்த தென்ப உணரு மோரே- நூற்பா 193.
- செவ்வி தென்ப சிறந்திசி னோரே – நூற்பா 295.
- புகரின்று என்மனார் புலமை யோரே – நூற்பா 369
சொல்லதிகாரத்தில்
- உளவென மொழிப உணர்ந்திசி னோரே- நூற்பா 116
- வழுக்கின் றென்ப வயங்கி யோரே – நூற்பா 119
- விளியொடு கொள்ப தெளியு மோரே – நூற்பா 153
- ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே – நூற்பா 158.
பொருளதிகாரத்தில்
- இயல்பென மொழிய இயல்புணர்ந் தோரே – நூற்பா 4
- புலனன்குணர்ந்த புலமை யோரே – நூற்பா 14
- கொள்ளும் என்ப குறியறிந் தோரே – நூற்பா 50
- நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
- வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே – நூற்பா 315
- இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே- நூற்பா 371
- வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர் – நூற்பா 383
- யாப்பென மொழிப யாப்பறி புலவர் – நூற்பா 380
- வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர் – நூற்பா 384
- பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே – நூற்பா 403
- ஒன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே – நூற்பா 406
- தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும் – நூற்பா 407
- நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே – நூற்பா 457
- ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர் – நூற்பா 472
- தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப – நூற்பா 474
- ஆங்கென மொழிய அறிந்திசி னோரே – நூற்பா 514
- தோலென மொழிப தொன்னெறிப் புலவர் – நூற்பா 539
- புலனென மொழிய புலனுணர்ந் தோரே – நூற்பா 542
- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே – நூற்பா 571
- நூலென மொழிய நுணங்குமொழிப் புலவர் – நூற்பா 644
- சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் – நூற்பா 646
சுவை பயக்கும் இத் தொடர்களை, அவையுள்ள இயல்களையும் நூற்பாக்களையும் கொண்டு ஆராய்ந்து முடிபு கூறல் அழகிதாகும். இத் தொடர்கள் பலதுறைப் புலவர்களைச் சுட்டுதல் தெற்றென விளங்குதல் காண்க; இவற்றை நோக்கும் அறிஞர் சிறப்பாகப் பொருளதிகாரத்தில் வரும்
4, 5, 7, 8, 9, 11, 12, 14, 15, 16, 20 ஆம் எண்கள் சுட்டும் தொடர்களைக் காண்கையில், மேற் கூறப்பெற்ற உண்மையை எளிதில் உணர்வர். (முனைவர் மா. இராசமாணிக்கனார், தமிழ் மொழி-இலக்கிய வரலாறு)
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்




Leave a Reply