(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 4: தொடர்ச்சி)

நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அரசு நிறுவனத்தில் செம்மொழி ஒதுக்கீடு பற்றிய ஒரு கருத்தரங்கில் பங்கேற்றேன். அப்போதே நிதி நிலை அறிக்கையில் இருந்து மொழிகளுக்கான பல்வேறு நிதி குறித்துக் குறிப்பிட்டு இருந்தேன். இன்னின்னவாறு ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு இல்லையே என்பதாக குறிப்பிட்டு இருந்தேன். பல்வேறு ஒதுக்கீடுகள். ஆனால் இப்பொழுது இன்னும் கூடுதலாக இருக்கிறது. இந்தக் கூடுதலான நிதி ஒதுக்கீட்டிற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் ஒன்றிய அரசைக் கேட்க வேண்டும். மீண்டும் கேட்க வேண்டும். கேளுங்கள். கட்சி வேறுபாடு இன்றி மக்களைத் திரட்டி அணி சேர்ந்து ஒன்றிய அரசுக்குக் குரல் கொடுங்கள், செய்யுங்கள் இங்கே வந்து நீங்கள் தமிழை வாழ்த்தினால் போதாது. தமிழுக்கான செயற் திட்டத்தை நிதி ஒதுக்கீட்டுடன் தாருங்கள் என்று கேட்க வேண்டும் அல்லவா அதைச் செய்வதற்கு நமக்குத் தெம்பு இருக்க வேண்டும். நான் கூட “**யாருக்கும் வெட்கமில்லை**” என்று கட்டுரை எழுதி இருக்கிறேன். அப்போதைய செம்மொழி விருது அறிவிப்புக்கு எழுதி இருந்தேன். இதற்கு முன்பு என்னென்ன எழுதி இருந்தேனோ, அஃது இன்றைக்கும் பொருந்துவதாய் இருக்கிறது செம்மொழிக்கு ஒன்றிய அரசு ஒன்றும் செய்யவில்லை தமிழ்நாடு அரசும், தமிழகக் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை. விருது கொடுத்தபோது கூட ஏன் மூத்த அறிஞர்களுக்கு விருது கொடுக்கவில்லை என அப்பொழுதே கேட்டிருந்தேன். அதை அந்த யாருக்கும் வெட்கமில்லை என்ற கட்டுரையில் எழுதி இருந்தேன். அஃதாவது அரபி, பெருசியன் போன்ற மொழிகளுக்கு கூட பல கோடி நிதி உதவி தருகிறது. ஆனால் தமிழுக்குக் குறைவு. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குப் போன அரபி, பெருசியன், சமற்கிருதம் அதற்கெல்லாம் போகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விருதுக்கு உரிய பணத்தைத் தரவில்லை. ஏன் அப்படி? ஆண்டுதோறும் 22 சமற்கிருத அறிஞர்களுக்கு மூத்த செம்மொழி விருது தரும் ஒன்றிய அரசு ஏன் ஒரு மூத்த தமிழறிஞருக்குக்கூட விருது தரவில்லை, அதைத் தட்டிக் கேட்கும் திறன் ஏன் இவர்களுக்கு இல்லை. இவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாவிட்டால் அதுவும் தவறு. நாம் பல்வேறு இடங்களிலே பார்த்துத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் அரசு நிருவாகத்தில் குறை என்றாகிவிடும். உளவுத்துறை, செய்தித்துறை அரசின் கருத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2008 சூனில் நடத்தினார்கள் அப்பொழுது கூட அறிவித்திருக்கலாம். இல்லை. 2008 இல் இருந்து இன்று வரை எண்ணிப் பாருங்கள். 17 ஆண்டுகள். இந்த 17 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 15 விருதுகள் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் ஆண்டிற்கு 5 அல்லது 10 பேர் என்றாவது எத்தனை பேர் என்று எண்ணிப் பாருங்கள். இல்லையே நமக்கு! எங்கு சென்றன அவை?

சரி, பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொள்வோம். சமற்கிருதப் பல்கலைக்கழகங்கள் 18, செருமனியிலே 17. பத்தாததற்கு 121 சமற்கிருதக் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. நேரடியாக ஒன்றிய அரசு மாணவர்களுக்கு நிதி உதவி செய்து தருகிறது. இவ்வாறு பல நாடுகளில் ஒன்றிய அரசு சமற்கிருதக் கல்விக்கு உதவி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏன் ஒரே ஒரு தமிழ் பல்கலைக்கழகம். 1947 இல் 26 மாவட்டங்கள் மொழிவாரி மாநிலம் வந்த பிறகு 12 மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டிலே அப்படி இருக்கும்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கழித்து விட்டுப் பார்த்தால் இன்னும் 11 பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும். குறைந்தது, பழைய மாவட்ட கணக்கில் வைக்கலாமே, மாவட்டங்கள் தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வைக்கலாமே, இதற்கான திட்டத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்கு ஒரு தமிழ் பல்கலைக்கழகத்தை வைத்து அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களை வைக்க வேண்டும். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல்வேறு இடங்களில் தமிழ்த்துறையின் பொறுப்பாளர்களாக வேறு துறையைச் சார்ந்தவர்கள் தான் இருப்பார்கள் அல்லது பேச்சு மொழிக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய தமிழ் படித்த அறிஞர்களாக இருப்பார்கள். தமிழ் அறிஞர்கள்தான் ஆனால் பேச்சு மொழியை வாழ வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் குழுவினரைத் தமிழறிவு தேவையில்லாமல் எடுத்தார்கள். ஒன்றிய அரசைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் போது தமிழ் அறிவு தேவை இல்லையா? தமிழக அரசியல் இதழில் இது குறித்து வந்த என் செவ்வியை ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைத்தேன். , செம்மொழி நிறுவனத்தில் அப்போதைய பதிவாளராக முனைவர் முத்துவேல் இருந்தார் அவரும் அதை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்து அவர்கள் நியாயமான கேள்வி என்றார்கள். உடனடியாக அக்குழுவை மாற்றினார்கள்.

அதேபோலச் செம்மொழி விருது கொடுக்கும் பொழுது, அவ்விழாவிலே தமிழிலே அறிமுகம் இல்லை. தமிழ் அறிஞன் தமிழில் விருது பெறுகிறான், தன்னைப் பற்றி என்ன சொல்கிறான் என்று கேட்கக் கூடிய அறிவு வேண்டாமா? இஃது எப்படி? தமிழில் தான் நடத்து என்று சொன்னவுடன், இது நியாயமான கோரிக்கை என்று கேட்டார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒன்றிய அரசு சொன்னால் கேட்கிறார்கள், சொல்ல வேண்டிய முறையில் நாம் சொல்ல வேண்டும். மேம்போக்காகக் கட்சியைத் திட்டுவதாலேயும் ஒன்றிய அரசைத் திட்டுவதாலேயும் பயனில்லை. இன்னமும் அப்படித்தான். திட்டிப் பயனில்லை. நாம் சரியாகக் கேட்க வேண்டும். இவ்வாறு பலவற்றை நாம் சொல்லலாம். அவ்வாறு நாம் கேட்க வேண்டியதைக் கேட்டுப் பெற வேண்டியதைப் பெற்றுத்தான் ஆக வேண்டும்

(தொடரும்)

13.07.2025