(நாலடி நல்கும் நன்னெறி 18: – செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்: தொடர்ச்சி)

உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி

இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும்

சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்

ஆஅயக் கண்ணும் அரிது.   

(நாலடியார், 184)

மழை பெய்யாத கோடைக் காலத்திலும், நீர் சுரக்கும் கேணி தன்னிடம் உள்ள தண்ணீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து ஓர் ஊரைக் காப்பாற்றும். அது போலப், பெரியோர் வறுமையில் வாடித் தளர்ந்த காலத்திலும் பிறர்க்குக் கொடுப்பர். ஆனால் பெருமையற்ற சிறியோர் செல்வம்  மிகுதியாக உள்ள காலத்திலும் பிறர்க்குத் தரமாட்டார்கள்.

பதவுரை:

உறைப்பு=மழை; அரு காலத்து=அருகிய இல்லாக் காலத்திலும்; ஊற்று நீர்=ஊற்று நீருள்ள; கேணி= கிணறானது; இறைத்து=நீரை இறைத்து; உணினும்=உண்டாலும்;ஊர் ஆற்றும்=ஊரைக் காப்பாற்றும்;  என்பர்=என்று சொல்வர்; (அதுபோல்); கொடை = பிறர்க்குக் கொடுக்கும்; கடனும்=முறைமையும்; சாயக்கண்ணும்=(வறுமையால்) தளர்ந்தவிடத்தும்; பெரியார் போல்=பெரியோர்களைப் போல்; மற்றையார்=சிறியோர்; ஆயக்கண்ணும்=செல்வம் உண்டாயினும்; அரிது= கொடுத்தல் அரிது.

ஆழிக்கிணறு, உறை கிணறு, கட்டுக்கிணறு, கூவம், கூவல், கேணி, தடம், தளிக்குளம், திருக்குளம், தொடு கிணறு, நடை கேணி, பிள்ளைக்கிணறு, பொங்கு கிணறு என நீர்நிலைகள் ஏறத்தாழ 50 உள்ளன. இவற்றுள் ஊற்றுநீர்க் கேணியைக் குறிப்பிடுவதன் காரணம், இயற்கையாக நீர் ஊறும் தன்மையுடையது. எனவே ஊற்றுக்கேணி இயல்பான கொடைத்தன்மை யுடையவர்களைக் குறிப்பதற்காக உரைக்கப்பட்டுள்ளது.

பொருள் குறைந்த காலத்திலும் பிறர்க்கு இயன்றது உதவவுவதே நற்பண்பாகும்.

வறுமையுற்ற காலத்திலும் நற்குடிப்பிறந்தோர் ஊற்று நீர் போல உதவுவர் என நாலடியார் 150 ஆம் பாடலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரும்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்

[திருக்குறள் ௨௱௰௮ – 218)

என்கிறார்.

அஃதாவது, பிறருக்குக் கொடுக்க முடியாத வறுமைக் காலத்திலும் ஒப்புரவாளர்கள் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டு வாழ்வர் என்கிறார்.

“செல்வத்துப் பயனே ஈதல்” எனப் புறநானூற்றில்(400) புலவர் நக்கீரனார் குறிப்பிடுகிறார். கொடையைப் பிறவிக்குணமாகக் கூறுகிறார் ஒளவையார். கொடையை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தனர் தமிழ்ச்செல்வர்கள்.

செல்வம் இல்லாக் காலத்தும் உதவுவோர் பெரியோர். செல்வம் நிறைந்த காலத்தும உதவார் சிறியோர். நாம் பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டு வாழ வேண்டும்.