(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : தொடரச்சி)

மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு  குறித்து, அதிலும் குறிப்பாக மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் குறித்து முந்தைய இதழ்களில் பார்த்தோம். 13.11.1938ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாடு குறித்த செய்தியையும் பார்த்தோம்.

இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு தமிழ்மொழி,  தமிழ்ப் பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார். இதுவே தமிழ் உணர்வுடன் தமிழுக்காக, உயிருக்கும் மேலாகத் தமிழைப் போற்றும் தமிழ் மக்கள் நலனுக்காக நடைபெற்ற போராட்டங்கள் என்பதை மெய்ப்பிக்கிறது.

அதற்குச் சான்றாக, இம் மாநாட்டின் பொழுது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். பெரும்பான்மையான தீர்மானங்கள், தமிழ் மொழி சார்ந்தவையே ஆகும். தீர்மானங்கள் 100 ஆண்டுகளை எட்டும் பொழுதும் தீர்மானங்களாகவே உள்ள அவலம்தான் உள்ளது. மொழிப்போரில் துன்பங்களைத் துய்த்தும் சிறைப்பட்டும் மடிந்தும் போன பெண் போராளிகளின் ஈகங்களால் ஒரு பயனும் இல்லாமல் போகிறது.

ஆந்திரத் தலைநகராகச் சென்னையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைகட கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது பெண்களின் தமிழுணர்விற்கு அடையாளம்.

சென்னை நகர வீதிகளுக்குத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால், சென்னையில் மட்டுமல்ல, பிற மாவட்டங்களிலும் தமிழ்ப்பெயர் இல்லாத தெருக்களைக் காணலாம்.

     ‘பீச்’, ‘ஃபோர்ட்டு’, ‘பார்க்’ என பெயரிடப்பட்டுள்ள தொடரி(இரயில்)நிலையங்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டும் என்பது ஒரு தீர்மானம். 30 ஆண்டுகளுக்குப் பின்னர்த் தி.மு.க. ஆட்சி வந்த பின்னரே சில நிலையங்களின் பெயர்கள் தமிழிலும் குறிக்கப்பெற்றன. அவ்வாறு குறித்தாலும் ஆங்கிலப்பெயரே இந்தியில் குறிக்கப்பட்டுள்ளன. அஃதாவது கோட்டை எனத் தமிழில் இருந்தாலும் இந்தியில் ஃபோர்ட் என்பதே எழுதப்பட்டிருக்கும். என்றாலும் சில நிலையங்களில் மட்டும் விதி விலக்காகக் கடற்கரை என்பது இந்தியிலும கடற்கரை என்றே எழுதப்பெற்றுள்ளது போல் தமிழ்ப் பெயரே இந்தி எழுத்துகளில் எழுதப்பெற்றிருக்கும்.

நாணயங்களில் அவற்றின் மதிப்பைத் தமிழில் குறிக்க வேண்டும் என்னும் தீர்மானம் இன்னும் கனவாகவே உள்ளது.

மறுமணத்திற்கும் சாதிப்பாகுபாடுகளை ஒழித்துச் சாதியில்லா மன்பதை உருவாகக் கலப்புத் திருமணத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்றைக்கும் கலப்புத் திருமணம் செய்வோர் சாதி வெறியர்களால் கொல்லப்படும் அநீதிதானே நாளும் அரங்கேறிக் கொண்டுள்ளது.

தமிழ்க்காப்பிற்காகத்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களே நடத்தப் பெற்றன. எனவே, பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதுடன் தமிழ் நலன் சார்ந்த முழக்கங்களை எழுப்பினர்; தொடர்பான தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.

மணவினைச் சடங்குகளையும் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கி வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துத் தீர்மானம் இயற்றியுள்ளனர்.  ஆனால் நம்மை ஆதிக்கம் செய்ய முயலும் அயலவர் மொழியாகிய சமற்கிருதத்தில் மணவினைச் சடங்குகளையும் பிற சடங்குகளையும் செய்யும் போக்கே இன்றைக்கும் நிலவுகிறது. குடும்ப நிகழ்வுகளில் ஆடம்பரச் செலவுகளையும் மேற்கொண்டுதான் வருகின்றனர்.

ஒரு தீர்மானத்தின் மூலம் தமிழ் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று வேண்டியுள்ளனர்.

அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் என்பதை 2015-2016 ஆம் கல்வியாண்டிலிருந்துதான் அறிமுகப்படுத்தினர். அதுவும் ஒவ்வோர் ஆண்டாக ஒவ்வொரு வகுப்பாகத் தமிழ்மொழியை அறிமுகம் செய்தனர். அதுவரை தமிழ் இல்லாத இழிநிலை இருந்தது இதனால் துடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படைப்பள்ளி (சைனிக்குபள்ளி), இந்திய நிறுனச் செயலர்கள் பயிலகம்(icsi), மத்தியப்பள்ளிகள் (கேந்திரிய வித்தியாலயா) முதலியவற்றில் தமிழ் அண்மைக் காலங்களில் அறிமுகப்படுத்தாலும் அது ஏமாற்று வேலையே. சான்றாக மத்தியப் பள்ளிகளில் தமிழ் என்பது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு  வரை விருப்பப்பாடமாக இருக்கும். என்றாலும் 15 மாணாக்கர்கள் படிக்க முன்வந்தால்தான் தமிழ் மொழி ஒரு பாடமாக இருக்கும். தமிழாசிரியப் பணியிடங்கள் பகுதிநேரப் பணியிடங்களே. இவற்றின் மூலம் தமிழ் மொழி ஒரு பாடமாக உள்ளதாகக் கூறுவது ஏமாற்று வேலை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உரிமைகளுக்காகவும் கொள்கைகளுக்காகவும் அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராகவும் மக்கள் போராடும் பொழுது அவற்றைக் கொச்சைப்படுத்தி இழிவாகச் சொல்வதே ஆள்வோர் வழக்கமாக உள்ளது. அதுபோல், பெண்கள் தமிழ்க்காப்பு உணர்வில் சிறை சென்ற பொழுது, முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியாரே “குழந்தைகளுக்குப் பால் வாங்கக் காசில்லாமல் இந்தப் பெண்கள் போராட்டம் நடத்திக் குழந்தைகளோடு சிறைக்கு வருகின்றனர்” எனக் குறைகூறினார்.

பெண்களும் திரள் திரளாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘1938  முதல் மொழிப்போரில் பெண்கள்’ என்னும் நூலில் நூலாசிரியர் நிவேதிதா (உ)லூயிசு விவரித்திருப்பார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுக் களப்பலி யான,  சிறைத்தண்டனை பெற்ற வீரப் பெண்களுக்கு நம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.