விலங்கறிவியல் – இலக்குவனார் திருவள்ளுவன்

- விலங்கறிவியல்
 
விலங்கு என்பது குறுக்காக நடப்பவற்றைத்தான் குறிப்பிடும். கைகளில் குறுக்காக மாட்டப்படும் சங்கிலிக்காப்பை விலங்கு என்கிறோம் அல்லவா? வளைந்த அமைப்பு உள்ளதுதானே வில். எனவே, குறுக்காக உடலுடைய உயிரினங்கள் விலங்குகள் எனப் பட்டன. எனினும் அறிவியலில் பறவை வகைகளும் விலங்கு வகையில் அடங்கும். ஏன், மனிதனே ஒரு மன்பதை விலங்குதானே! தமிழ்ப் பெருநிலப்பரப்பு, புவி அமைந்த தொடக்கக் காலத்தில் இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை இருந்தமையால் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்திருந்தன. அவற்றையெல்லாம் ஆராயும் நோக்கில் மாணாக்கர் அறிவு வளம் பெருக வேண்டும். பொதுவாக இப்புவியில் வாழ்ந்த, வாழ்கின்ற சில உயிரினங்களைப் பற்றி இங்கு அறிவோம்.
தமிழில் ’மா என்றால், விலங்கு, பெரிய, மா மரம், குதிரை, மாவு, ஓர் அளவு முதலிய பல பொருள்கள் உண்டு. எனினும் ’மாப்பெயர் வகை என்னும் தலைப்பில் புள்வகை, விலங்கு வகை, பாம்பு வகை, நீர் வாழ்வன வகை முதலிய அனைத்து உயிரிகளையும் முன்னோர் குறித்தனர்.
சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகளை அறிஞர் பி.எல்.சாமி குறிப்பிட்டுள்ளார்.(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்)
அவற்றுள் குறிப்பிடத்தக்கன, குரங்குகள். வருடை, ஆமான், மான்கள், கேழல்,நரி, கோநாய், தீநாய், செந்நாய்,கரடி,வெருகு,புலி,யானை, நீர் நாய், எலி, அணில், முளவுமா, கவரிமா என்பனவாகும். கவரிமா என்பதை நாம் கவரிமான் எனக் குறிப்பிட்டு மான்வகையாக எண்ணுகிறோம். தெய்வப்புலவர் திருவள்ளுவர் ,
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (969)
என்கிறார். தன் மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால் அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள் எனத் தவறாகக் கருதுகிறோம். கவரிமா என்பது பனிமலைப்பகுதிகளில் குளிரைத் தாங்கும் வகையில் அடர்முடியுடன் வாழும் ஆட்டினமே ஆகும். இயற்கைச் சூழலுக்கேற்ப இதன் உடல் அமைந்துள்ளது. எனவே அச்சூழலில் முடியை இழப்பின் குளிரைத் தாங்க இயலாமல் அவை மாண்டு விடும். இதையே தெய்வப்புலவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அனைத்துப் பகுதிகளிலும் அனைத்துச் சூழல்களிலும் வாழும் விலங்கின வகைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தமை அவர்களின் விலங்கியல் அறிவைப் புலப்படுத்துகின்றது.
மேலும், மான், கழுதை ஆகியவற்றின் ஐந்தைந்து வகைகளையும்
குரங்கு, நாய் ஆகியவற்றின் நன்னான்கு வகைகளையும்
எலி, முதலை ஆகியவற்றின் மும்மூன்று வகைகளையும்
புலி, அணில் ஆகியவற்றின் இரண்டிரண்டு வகைகளையும்
பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன.
உயிரினங்களின் ஆண்மரபு, பெண்மரபு ஆகியவற்றின் அறிவியல் உண்மைகளையும், இவற்றின் பிள்ளைத் தன்மைகளையும் முன்னைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
விலங்குகளின் ஆண் இனமானது
- உம்பல்,
 - ஏட்டை,
 - ஏறு,
 - ஒருத்தல்,
 - ஓதி,
 - கடுவன்,
 - கபடு,
 - கலை,
 - களிறு,
 - சே,
 - சேவல்
 - தகர்,
 - போத்து,
 - மா,
 
என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் விளக்கம் வருமாறு:-
| வரிசை எண் | உயிரிகள் | ஆண்பால் பெயர் | 
| 1. | கரி (யானை), சுறவு, கேழல்(swine) | களிறு | 
| 2. | மரை, ஆன் (ox), காரான்(buffalo), காட்டா, புல்வாய், புலி, நீர்வாழ்வன(சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை) | போத்து | 
| 3. | மான், முசு | கலை | 
| 4. | குரங்கு, பூனை | கடுவன் | 
| 5. | யானை, எருமை, பெற்றம் | பகடு | 
| 6. | குதிரை, எருது, புல்வாய் | சே | 
| 7. | கவரி, யானை, பன்றி, கரடி | ஒருத்தல் | 
| 8. | துருவாடு, வேழம், யாளி, சுறா | தகர் | 
| 9. | புலி, உழை, மரை, ஆ, புல்வாய், எருமை, பன்றி, சுறா, சங்கு | ஏறு | 
| 10. | யானை, யாடு(ஆடு) | உம்பல் | 
| 11. | எருமை, வெருகு | ஏட்டை | 
| 12. | குதிரை, யானை, பன்றி | மா | 
| 13. | முசு, நரி | ஓரி | 
| 14. | கோழி, அன்னம் | சேவல் | 
இவற்றுள் ஆண்யானையானது களிறு, பகடு, ஒருத்தல், உம்பல், மா என அழைக்கப்பெற்றுள்ளமை போல், ஒரே விலங்கிற்கு வெவ்வேறு பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன.
ஒரே இனத்தின் வகைப்பாட்டிற்கு ஏற்ப இவை அமைந்து பின்னர்ப், பொதுப்பெயர்களாக மாறி இருக்கலாம். இது குறித்து ஆராய்ந்தால் நுண்ணிய வேறுபாடுகளைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது.
பெண்விலங்கினங்கள்
- பிணை
 - பாட்டி
 - பேட்டை
 - பிணா
 - ஆ
 - ஆன்
 - பிடி
 - நாகு
 - மந்தி
 - மூடு
 - கடமை
 
என அழைக்கப்பெறும். இவற்றுள்ளும் ஒரே இனத்திற்கு வெவ்வேறு பெண்பால் பெயர்கள் உள்ளன.
பெண் விலங்கினங்கள் எவ்வெவ்வாறு அழைக்கப்பெற வேண்டும் எனப் பார்ப்போம்.
| வரிசை எண் | உயிரிகள் | பெண்பால் பெயர் | 
| 1. | உழை, நாய், பன்றி, புல்வாய் | பிணை | 
| 2. | பன்றி, நாய், நரி | பாட்டி | 
| 3. | ஒட்டகம், குதிரை, கழுதை, மரை(மான்), சிங்கம் | பெட்டை | 
| 4. | பன்றி, புல்வாய், நாய் | பிணை | 
| 5. | எருமை, பசு, மரை | ஆ | 
| 6. | ஆ,எருமை,மரை | ஆன் | 
| 7. | கவரி, ஊகம்(கருங்குரங்கு) | பிடி | 
| 8. | மரை, பெற்றம், எருமை, நந்து, நீர்வாழ்வன | நாகு | 
| 9. | குரங்கு, ஊகம, முசு | மந்தி | 
| 10. | ஆடு | மூடு, கடமை | 
ஆண் பன்றி, பெண்பன்றி, ஆண் நாய், பெண் நாய், என்பன போன்று உயிரினங்கள் அனைத்தும் ஆண் அல்லது பெண் எனச் சேர்த்து அழைக்கப்பெறும். இவை போல் பெண் விலங்கினங்கள் அனைத்தும் பிணை மான் என்பது போன்று பிணை என்று சேர்த்தும்அழைக்கப் பெறும். 
ஆண் பெண் வேறுபாடின்றி விலங்கின் பிள்ளைகள் குருளை, 
- குட்டி,
 - பறழ்,
 - பிள்ளை,
 - மறி,
 - கன்று,
 - குழவி,
 - பார்ப்பு,
 - மகவு
 
என அழைக்கப் பெறும்.
| வரிசை எண் | உயிரிகள் | பிள்ளைமைப் பெயர் | 
| 1. | புலி, முயல், பன்றி, நரி, நாய் | பறழ், குட்டி | 
| 2. | ஆடு, குதிரை, மான், அழுங்கு | மறி | 
| 3. | கலை, மான்,கழுதை, மரை, பசு, எருமை, கடமை, யானை, ஒட்டகம், கவரி, கராம் | கன்று | 
| 4. | குரங்கு போன்று மரக்கொம்புகளில் வாழ்வனவற்றின் பிள்ளைகள் | குழவி, மகவு, குட்டி, பிள்ளை, பறழ், பார்ப்பு, | 
| 5. | வெருகு, நரி, முயல் | பறழ், குட்டி | 
| 6. | தவழ்வன | பிள்ளை, பறப்பு, பறழ் | 
| 7. | யானை, கடமை,மரை, எருமை | குழவி | 
| 8. | மான் | குருளை, கன்று, குழவி, பிள்ளை | 
| 9. | முசு | குழவி | 
| 10. | சங்கேறு, குருளை | பிள்ளை | 
| 11. | பாக்கன்(பூனை), அணில் | பறழ், குட்டி | 
மரபியலும் அறிவியல்தான். அவ்வகையில் இலக்கண நூலாக மட்டும் அல்லாமல், வாழ்வியல் அறிவியல் நூலாகவும் உள்ள தொல்காப்பியத்தில் ஆசிரியர் தொல்காப்பியர், இவை பற்றி நன்கு விளக்கி உள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு நூற்பாவைப் பார்ப்போம்.
குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்
மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்
குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்
இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்
எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
முடிய வந்த அவ்வழக்கு உண்மையின்
கடியல் ஆகாக் கடன்அறிந் தோர்க்கே.
தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில்தான் மேலே பட்டியல்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுடன் இவற்றையும் சேர்த்துப்படித்துப் பார்த்தால் , இலக்கண நூல் உணர்த்தும் அறிவியலே சிறந்ததாக இருக்கும் பொழுது உரிய அறிவியல் நூல்களைப் படித்திராமல் இத்தகைய அறிவு வளம் வளர்ந்திருக்காது என நன்கு புரியும்.
மிகச்சிறந்தஅறிவு வளப்பரப்பு உடைய தமிழறிவியலில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் முயன்று செம்மையாக்குவதையே நம் கடமையாகக் கொள்வோம்! அறிவியல் துறைகள் அனைத்திலும் தமிழை வளர்ப்போம்!
http://www.newscience.in/articles/vilankariviyal
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply