(வெருளி நோய்கள் 261 – 265 தொடர்ச்சி)

266. ஆர்லண்டோ வெருளி – Orlandophobia 

ஆர்லண்டோ(Orlando) நகரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்லண்டோ வெருளி.

ஆர்லண்டோ / ஓர்லாண்டோ ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற நகரமாகும். இங்கே உலகப்புகழ்பெற்ற திசுனிஉலகம்,  உலகளாவிய(யுனிவெர்சல்) பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன.

ஆர்லண்டோ நகரம், பொழுதுபோக்கு அரங்கங்கள், உணவுமுறை முதலான பல குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.

00

267. ஆர்வ வெருளி – Endiaferonphobia 

ஆர்வம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்வ வெருளி.

ஒன்றில் விருப்பம் ஏற்படும் ஆசையில் ஈடுபாடு காட்டும் பொழுது ஆர்வமாகிறது.

காண்க  :  அவா வெருளி – Periergeiaphobia

00

268. ஆர்வப்பெயர்ச்சி வெருளி –Anoraknophobia

ஆர்வப்பெயர்ச்சி குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆர்வப்பெயர்ச்சி வெருளி.

‘anorak’, ‘arachnophobia’ ஆகியவற்றின் ஒட்டுச்சொல்லே இச்சொல். தேவையற்ற தவறான பேரார்வத்தின் அடிப்படையிலான இடப்பெயர்ச்சி குறித்த அளவு கடந்த பேரச்சம்.

00

269. ஆர்னாலுடு வெருளி – Arnoldphobia

புனைவுரு ஆர்னாலுடு(Arnold) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆர்னாலுடு வெருளி.

சாலப்பள்ளிப்பேருந்து (The Magic School Bus)  என்னும் அசைவூட்டப் படத்  தொடரில் புனைவுரு பாத்திரம் ஆர்னாலுடு மாத்தியூ பெர்லிசுடன்(Arnold Matthew Perlstein). இவர் பலவகை இயந்திரத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துபவர். ஆதலின், இப்பாத்திரப்படைப்பைப் பார்த்தவர்களுக்கு ஏற்படும் பேரச்சமே ஆர்னாலுடு வெருளி.

ஆர்னாலுடு சூயென்பெர்கு(Arnold Schoenberg) என்பவருக்குப் பதின்மூன்றாம் வெருளி உண்டு. செட்டம்பர் 13இல் பிறந்தவர். (சூலை 13இல் இறந்தவர்.) 13 ஆம் எண்ணைத் தவிர்த்து இசைக்கூடத்தைக் கட்டமைத்தல் போன்று தன் பணிகளை அமைத்துக் கொண்டார். இதனால் பதின்மூன்றாம் எண் வெருளியை(triskaidekaphobia) ஆர்னாலுடு வெருளி என்பர். எனவே, இதனையும் அதனையும் குழப்பிக்கொள்ளக் கூடாது.

00

270. ஆலங் கட்டி மழை வெருளி – Grandophobia

ஆலங் கட்டி(hail) மழை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆலங் கட்டி மழை வெருளி.

இது மழை வெருளியை(ombrophobia) ஒத்தது.

grando என்னும் இலத்தீன் சொல்லுக்கு ஆலங்கட்டி எனப் பொருள். சிறார் ஆலங்கட்டி மேலே விழுந்து காயம் ஏற்படுத்தும் என ஆலங்கட்டி மழைக்கு அஞ்சுவர்.

பெரியோர் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ள ஊர்திகளில் ஆலங்கட்டி விழுந்து சேதம் ஏற்படும் என ஆலங்கட்டி மழைக்கு அஞ்சுவர்.

00

(தொடரும்)