(வெருளி நோய் 356-360 தொடர்ச்சி)

361. இளம்பிள்ளைவாத வெருளி-Poliosophobia

இளம்பிள்ளைவாதம்(Polio) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளம்பிள்ளைவாத வெருளி.

இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிசு (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிசு தீ நுண்மம். இது தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.

நுரையீரல் அழற்சி, இதயக்கீழறை மிகுவழுத்தம், அசைவின்மை, நுரையீரல் சிக்கல்கள், நுரையீரல் வீக்கம், அதிர்ச்சி, நிரந்தரத் தசை வாதம், சிறுநீர்ப்பாதைத் தொற்று, இடுப்பு, கணுக்கால், பாதங்களின் குறைபாடுகளுள், ஊனம், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம்.

எனவே, இக்குறைபாடுகள் நேரும் என்று பெருமளவில் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

00

362. இளவரசன் வெருளி – Prigkipaphobia

இளவரசன் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளவரசன் வெருளி.

இளவரசன் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருக்கலாம். அதனால் அவரின் தவறான செயல்கள் கண்டு அமைதி காத்து அஞ்சலாம். நாளைய அரசர் எனக் கருதி அவர் தீமையைப் பொறுத்துக் கொண்டு அதே நேரம அவரால் தீயன தொடரும் என அஞ்சலாம். இளவரசன் சிலரின் சிறுபிள்ளைத்தனமான விளைாயட்டுகள் கண்டும் அஞ்சலாம். ஏதோ ஒரு வகையில் சிறுவர்களின் செயல்களால் ஏற்படும் பேரச்சமே இளவரசர் வெருளி. இளவரசி வெருளி(Vasilopoulaphobia) வருவோருக்கு இளவரசர் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

நடைமுறையில் இளவரசன் சிறுவனாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எவ்வளவு அகவை ஆனாலும், அரசுப் பட்டம் பெறாதவரையில் – முடி சூடாத வரையில் –  இளவரசன்தான்.

prigki என்றால் கிரேக்க மொழியில் இளவரசன் என்று பொருள்.

00

363. இளவரசி வெருளி – Vasilopoulaphobia

இளவரசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இளவரசி வெருளி.

இளவரசன் வெருளி போன்றதுதான் இதுவும். அதற்குரிய விளக்கம் இதற்கும் பொருந்தும். இளவரசன் வெருளி வருவோருக்கு இளவரசி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

Vasilopoula என்றால் கிரேக்க மொழியில் இளவரசி என்று பொருள்.

00

364. இறகு வெருளி-Pteronophobia

இறகால் வருடப்படுதல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறகு வெருளி.

இறகுகள் செருகப்பட்ட தொப்பி, இறகுகள் நிரப்பப்பட்ட தலையணை, இறகுகளால் ஆன வேறு பொருள் என இறகுகள் தொடர்பானவற்றின் மீதும் வெறுப்பு, பேரச்சம் ஏற்படும். பறவை வெருளி (ornithophobia) உள்ளவர்களுக்கும் இறகு வெருளி வர வாய்ப்புள்ளது.

‘ptero’  என்னும் கி்ரேக்கச் சொல்லிற்கு இறகு எனப் பொருள்.

00

365. இறக்கைப் பல்லி வெருளி-Pterosaurphobia

இறக்கைப் பல்லி(Pterosaur) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறக்கைப் பல்லி வெருளி.

பல்லி மீது பேரச்சம் உள்ளவர்களுக்கு இறக்கைப் பல்லி மீது பேரச்சம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இறக்கை உடைய தீ நாகம் மீது பேரச்சம் (தீநாக வெருளி/Dracophobia) உள்ளவர்களுக்கும் இற்க்கை உடைய பறவை  மீது பேரச்சம் கொண்ட(பறவை வெருளி/-Ornithophobia) உள்ளவர்களுக்கும் இறக்கைப்பல்லி மீது பேரச்சம் வரும் வாய்ப்பு உள்ளது.

கிரேக்கத்தில் pteron, sauros என்றால் இறக்கை, பல்லி எனப் பொருள்கள்.

00

(தொடரும்)