(வெருளி நோய்கள் 391-395 தொடர்ச்சி)

396. உடற்காய வெருளி – Traumaphobia / Traumatophobia

உடற்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உடற்காய வெருளி.

பெண்களுக்கும் குறைந்த கல்வி உடையவர்களுக்கும் உடற்காய வெருளி மிகுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

பொதுவாகப்பெண்களுக்கும் கல்வியறிவு குறைந்தவர்களுக்கும் இவ்வெருளி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

trauma என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காயம் எனப் பொருள்.

00

397. உடற்பயிற்சி வெருளி -Exercitophobia / Drapanophobia 

உடற்பயிற்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடற்பயிற்சி வெருளி.

உடற்பயிற்சியின் பொழுது இறப்பு நேர்ந்த செய்தியைப் படித்தவர்களுக்கு அதன் காரணத்தை உணராமல் உடற்பயிற்சி மீது பேரச்சம் வருவதுண்டு. சான்றாக நடிகர் முத்துராமன் உதகமண்டலத்தில் அதிகாலை நடைப்பயிற்சி சென்ற பொழுது மரணமடைந்த செய்தியைப் படித்த அல்லது கேள்விப்பட்ட உடன் நடைப்பயிற்சி மீது பேரச்சம் கொண்டவரும் கொள்பவரும் இருக்கின்றனர்.

உடற்பயிற்சிக்கான கருவிகளைக் கையாள்வது குறித்த அச்சமும் உடற்பயிற்சி வெருளியாக மாறுவது உண்டு.

cito என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் விரைவான.

Exercito என்றால் விரைவான இயக்கம் எனப் பொருள். உடலியக்கத்தை – உடற்பயிற்சியை இங்கே குறிக்கிறது.

00

398. உடற்பயிற்சிக் கூட வெருளி – Gymnasiphobia

உடற்பயிற்சிக் கூடம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடற்பயிற்சிக் கூட வெருளி.

அளவான நேரம் உடற்பயிற்சி செய்வதால் தீமை ஏதும் இல்லை; ஆனால் மிகுதியான உடற்பயிற்சி,  உடற்பயிற்சிக்கு அடிமையாக்கி (exercise addiction) உடல், மன நலவாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இது சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை, காயங்கள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலே உடற்பயிற்சி வெருளியில் குறிப்பிட்டவாறு, நாள்தோறும் உடற்பயிற்சி செய்யும் நடிகர் முத்துராமன் உதகமண்டிலத்திற்கு ஒரு படப்பிடிக்குச் சென்ற பொழுது(1981) மிகுதியான நேரம் உடற்பயிற்சி செய்தார். இதனால் மயங்கி விழுந்து மாரடைப்பிற்கு ஆளானார். இதுபோல் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு என்பது உடற்பயிற்சிக்கும் பொருந்தும்.

உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள பல்வேறு உடற்பயிற்சிக் கருவிகள் துணைக்கருவிகளால் கை கால்களில் காயம் ஏற்படும் என அஞ்சியும் உடற்பயிற்சிக் கூட வெருளி வருகிறது.

00

399. உடன் பிறந்தார் மகள் வெருளி – Anepsiaphobia

உடன் பிறந்தவர் மகள் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மகள் வெருளி.

உறவினர்கள் பகையாக மாறுவது இயற்கை.  சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மகள் மீது பேரச்சம் வருவது இயற்கை.

Anepsia என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடன் பிறந்தார் மகள் என்று பொருள்.

00

400. உடன் பிறந்தார் மகன் வெருளி – Anipsiophobia

உடன் பிறந்தவர் மகன் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மகன் வெருளி.

உடன்பிறந்தார் மகள் வெருளியில் குறிப்பிட்டவாறு, சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மகன் மீது பேரச்சம் வருவது இயற்கை. உடன் பிறந்தவர் மகன்  மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மகன் வெருளி.

Anipsio என்றால் உடன் பிறந்தார் மகன் எனப் பொருள்.

00

(தொடரும்)