வெருளி நோய்கள் 461 – 465 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 456 – 460 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 461 – 465
- உறைபனி வெருளி – Pagophobia
உறைபனி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உறைபனி வெருளி
சிலர் பனிக்கட்டி தொடர்பான பனிச்சறுக்கு விளையாட்டு போன்றவற்றில் மரணப் பயத்தைச் சந்திருக்கலாம் அல்லது பனிச் சூழல் காரணமாகச் சாலை வழுக்கல் போன்றவற்றால் ஊர்தி நேர்ச்சி(விபத்து) நேர்ந்திருக்கலாம் அல்லது பனி தொடர்பான நோய்களோ இன்னல்களோ பிறருக்கு வந்ததைக் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது கதைகளில் படித்தோ திரைக்காட்சிகளில் பார்த்தோ இருக்கலாம். இதனால் அளவு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுள் பலர் பனிபாலேட்டைக்கூட(ice cream) உட் கொள்ள மாட்டார்கள்.
pago என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பனி எனப் பொருள்.
00
- உறைபாகு வெருளி – Zelatiniphobia / Jangelaphobia
உறைபாகு (jelly) மீதான அளவுகடந்த பேரச்சம் உறைபாகு வெருளி.
gelatin என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் உறைபாகு(jelly).
Jangelaphobia Jangela என்றால் jello; jelly என்பதன் பேச்சு வழக்கு.
00 - உறையுணா வெருளி – F🔌pcophobia
உறைந்த உணவு (frozen food )தொடர்பான மிகையான பேரச்சம் உறையுணா வெருளி.
உணவு வெருளி(Cibophobia) உள்ளவர்களுக்கு உறையுணா வெருளி வர வாய்ப்புள்ளது.
ஊட்டச்சத்து இழப்பு, தீய கொழுப்புகள், உறைந்த உணவுகளில் சேர்க்கப்படும் சருக்கரைகள், இவற்றை உட்கொள்ளுவதால் உடல் பருமன், இதய நோய், சிலவகையான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு முதலியன உறையுணாவால் ஏற்படும் என்பதால் உறைவுணா மீது வெருளி வருகிறது.
00
- உறைவக வெருளி – deversoraphobia
தங்குமிடம் குறித்த அளவுகடந்த பேரச்சம் உறைவக வெருளி.
hotel என்பதை நாம் உணவகம் என்று மட்டும் பார்க்கிறோம். பெரிய தங்குமிடங்களை hotel என்று சொல்வதை மறந்து விடுகிறோம். எனவே, உறைவதற்கான – தங்குவதற்கான – விடுதியை உறைவகம் என்று இங்கே குறித்துள்ளேன். தங்கும் விடுதியில் அவப்பெயர் தரும் நிகழ்வுகள் நேருமோ, மது, மாது ஆகியவற்றின் மூலம் கவர விரும்பும் முறையற்றவர்களின் தொல்லைகள் இருக்குமோ, குடும்பத்தினருடன் தங்குவதற்கு ஏற்றதுதானா? கொசு, பூச்சி முதலானவற்றின் தொல்லைகள் இருக்கும் என்பனபோன்ற அச்சங்கள் பலவும் தங்குமிடம் குறித்து எழும். இந்நிலை வரம்பு கடக்கும் பொழுது உறைவக வெருளியாகிறது.
deversora என்னும் இலத்தீன் சொல்லுக்கு வாடகை விடுதி, தங்குமிடம் என்று பொருள்.
காண்க: உணவு விடுதி வெருளி – Cauponaphobia
00
- உற்சாக வெருளி – Enthousiasmophobia
உற்சாகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உற்சாக வெருளி.
உற்சாகம் அல்லது பேரார்வம் அல்லது கிளர்ச்சியால் தவறான முடிவு எடுக்கப்படுமோ என்று கவலையுற்றுப் பேரச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
Leave a Reply