(வெருளி நோய்கள் 584-588: தொடர்ச்சி)

ஓவியம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஓவிய வெருளி.
சிலர் எந்தவகை ஓவியமாக இருந்தாலும் பேரச்சம் கொள்வர்.சிலர், வரலாற்று ஓவியம், காதல் ஓவியம், சுற்றுலா இட ஓவியம், மக்கள் ஓவியம், விலங்கினங்கள் ஓவியம், பறவைகள் ஓவியம், தொன்மக்கதை ஓவியம், அச்சுறுத்தும் உருவ ஓவியம் எனக் குறிப்பிட்ட சிலவகை ஓவியங்கள் மீது மட்டும் பேரச்சம் கொள்பவர்களாக இருப்பர்.
00
   கசப்புச் சுவை குறித்த வரம்பற்ற பேரச்சம் கசப்பு வெருளி.
நரம்புகளை வலுப்படுத்துவபதாகவும் நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையதாகவும் கசப்புச் சுவை உள்ளது. இதை அறிந்திருந்தும் கசப்புச் சுவையுடைய உணவுப் பொருள்கள் மீது வெறுப்பும் பேரச்சமும் கொள்வோரே மிகுதி.
00
கடத்தல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடத்தல் வெருளி.
பொதுவாகக் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அறிந்தவர்களால் கடத்தப்படுவதே மிகுதி. இதனால், பணத்திற்காக அல்லது காதலினால் அல்லது காமத்தினால் கடத்தப்படுவோம், கடத்தப்பட்டால் உயிர் பறிக்கப்படும் அல்லது உடலுறுப்புகள் வெட்டப்படும் அல்லது கண்கள் பறிக்கப்படும்அல்லது ஒழுக்கம் சிதைக்கப்படும்  என்று கடத்தப்படாத பொழுதுே தேவையற்றுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இருட்டில் செல்லவே இவர்கள அஞ்சுவர். குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடிப்போதல், வழி தவறுதல் போன்றவற்றால் காணாமல் போனாலும் கடத்தப்பட்டதாக எண்ணிக் குடும்பத்தினர் அஞ்சுவர்.
00
 592. கடந்தகால வெருளி – Paleophobia/Nostophobia(1)
கடந்த காலம் குறித்த அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கடந்தகால வெருளி.
கடந்தகாலத் துன்பங்கள் மீண்டும் வருமோ என்று பேரச்சம் கொள்கின்றனர்.
வீட்டுத் துன்பங்களை எண்ணிப் படைக்குப் பணியாற்ற செல்பவர்கள், மீண்டும் வீடு திரும்பும் பொழுது கடந்தகால எண்ணங்களால் பேரச்சம் கொள்வதால் இது வீடு திரும்பல் வெருளி அல்லது இல்ல வெருளி [Nostophobia (2)] என்றும் அழைக்கப்டுகிறது
palaios என்னும் கிரேக்கச் சொல்லிற்கு பழைய எனப் பொருள்.
00
சாலை கடக்குமிடம்/குறுக்கு நடைபாதை(crosswalk) குறித்த வரம்பற்ற பேரச்சம் கடப்பு வெருளி.
சாலை நேர்ச்சிகள்/விபத்துகள், ஊர்திகள் மோதல், போன்றவற்றால் சாலையைக் கடக்கவே பலர் அஞ்சுவர். சாலைவிதிகளைப் பின்பற்றி விழிப்புடன் சாலையைக் கடக்காமல் தேவையற்ற அச்சத்திலேயே உழல்வர். இவ்வாறு சாலையைக் கடப்பதில் காரணமின்றி அச்சம் ஏற்படுவதே கடப்பு வெருளி.
சாலையைக் கடக்க விளக்கு ஒளி மாறும் வரை காத்திருந்து அவ்வாறு கடப்பதற்கான ஒளிவிளக்கு வந்த பின்னரும் யாருமில்லாவிட்டால் கடப்பதற்கு அஞ்சுவர். உடன் யாரும் இருந்தால் அவர்களுடன் மட்டுமே கடந்து செல்வர்.
பார்வையற்றவர்கள்  பழகிய நாய் மூலம் சாலையைக் கடக்கின்றனர். இப்பொழுது எந்திரன் மூலமும் சாலையைக் கடக்கின்றனர். ஆனால் எல்லாருக்கும் இவ்வாறு பயன்படுத்தும் வசதி இருக்காது அல்லவா? எனவே தேவையற்ற அச்சம் கொள்ளாமல் தேவையான விழிப்புணர்வு கொண்டு சாலையைக் கடக்கப் பழக வேண்டும்.
கடக்குமிடம் தொடர்பான கடக்குமிட வெருளியும் சாலையைக் கடப்பது குறித்த பேரச்சமான கடப்பு வெருளியும் ஒரே பொருள் தன்மைத்து என்பதால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
dromos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஓடுதடம்.
‘gyrus’  என்பது சாலைகள் சந்திக்கும் திருப்பத்தைக் குறிக்கிறது. A என்பது எதிர்ச்சொல்லாக்கப்பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே Agyrophobia சாலை திருப்பத்தைக் கடக்க இயலாமல் அஞ்சுவதைக் குறிக்கிறது. அஃதாவது Agyiophobia என்றால் அகன்ற சாலையைக் கடப்பதற்கான வெருளி என்று பொருள். அடிப்படையில் ஒன்று என்பதால் இணைத்தே பார்க்கலாம்.
00 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5