வெருளி நோய்கள் 684-688: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 679-683: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 684-688
684. கலவை வண்டி வெருளி – Seemptuophobia
கற்காரை கலவை வண்டி (cement truck) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கலவை வண்டி வெருளி.
கற்காரை கலவை(concrete mixer/cement mixer)வண்டி, கற்காரை சுமை வண்டி(cement truck) எனப்படுகிறது. எனினும் கற்காரையைச் சுமந்து செல்லும் பார வண்டியே கற்காரை சுமை வண்டி. வேறு எதையாவது சுமந்து செல்லும் பொழுது அப்பொருளின் பெயரில் அழைக்கப்பெறும். எனவே, இங்கே இது கலவை வண்டியையே குறிக்கிறது.
00
685. கலவைப்பண்ட வெருளி – Crustumphobia/Pastrophobia
பழம் இறைச்சி கலந்த பண்ணியம்(Pie) குறித்த வரம்பற்ற பேரச்சம் கலவைப்பண்ட வெருளி.
பண்ணியம் செய்வதிலோ அல்லது அதை உண்பதிலோ பேரச்சம் ஏற்படுவதுண்டு.
00
686. கலன் வண்டி வெருளி – Dochogophobia
கலன் வண்டி(tank truck)குறித்த அளவு கடந்த பேரச்சம் கலன் வண்டி வெருளி.
கலன் வண்டி என்பது எரிநெய், தண்ணீர், எரி வளி முதலியனவற்றை எடுத்துச் செல்லும் தொட்டி உடைய சுமை வண்டி.
00
687. கலிபோர்னிய வெருளி – Californiaphobia
கலிபோர்னிய மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கலிபோர்னிய வெருளி.
கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மேற்குப்பகுதியின் தென்பாதியைக் கொண்டு அமைந்துள்ள ஒரு பெரிய மாநிலமாகும். அமெரிக்கத் தொல்குடி மக்கள் பிற பகுதிகளைக் காட்டிலும் இங்கே மிகுதியாக வாழ்ந்துள்ளனர். அமெரிக்காவின் 31 ஆவது மாநிலமாக 1850இல் மாறியது.
கலிபோர்னியா மக்கள், தொழில்கள், விளை பொருள்கள், பண்பாடு, நாகரிகம் முதலானவற்றின் மீது ஏற்படும் அளவு கடந்த பேரச்சமே கலிபோர்னியா வெருளியாக உருவெடுக்கிறது.
00
688. கலிலி வெருளி – Callistophobia
வியாழன் கோளைச்சுற்றும் இரண்டாவது பெரிய உலவியான கலிலி உலவி மீதான அளவுகடந்த பேரச்சம் கலிலி வெருளி.
கலிலியோ கலிலியினால் (Galileo Galilei) 1610ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்ட உலவிக்கு அவர் பெயரில் கலிலி உலவி எனச் சூட்டப்பட்டது. இக்கலிலி உலவி மீதான காரணமற்ற பேரச்சத்தைத்தான் கலிலி வெருளி என்கின்றனர். இங்கே கலிலி என்பது கலிலியோ கலிலியைக் குறிக்காமல் அவர் பெயரிலான கலிலி உலவியைத்தான் குறிக்கிறது.
இதனை நான் முதலில் பேரழகு நிலா வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு நிலா என்பது சந்திரனைக் குறிப்பதால் தவறான பொருள் கொள்ள நேரிடும் என்பதாலும் moon என்பதை உலவி எனக் குறிக்க வேண்டும் என நானே குறித்திருந்ததாலும் கண்டறிந்தவர் பெயரில் கலிலி உலவி வெருளி என இப்பொழுது குறித்துள்ளேன்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply